இடையன் நெடுங்கீரனார்

இடையன் நெடுங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பில் உள்ளது, அது அகநானூறு 166ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலத்து மக்களில் ஒருவர் ஆதலால் இடையன் என்னும் அடைமொழி இவரது பெயருக்கு முன் அமைந்துள்ளது.

பாடல் தரும் செய்தி தொகு

பரத்தையொடு காவிரியாற்றில் அவன் நீராடினான். தலைப்புணை என்று சொல்லப்படும் முன்னோடிப் பரிசலில் சென்று நீராடினான். தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். நான் சொல்வது பொய் ஆயின் வேளூர்வாயில் தெய்வம் என்னைப் பலியாகப் புடைத்து உண்ணட்டும் என்று கூறிச் சத்தியம் செய்கிறான். (சங்ககாலத்து வேளூர் வாயில் இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் என்னும் பெயருடன் விளங்குகிறது.)

இதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையன்_நெடுங்கீரனார்&oldid=601944" இலிருந்து மீள்விக்கப்பட்டது