இணுவில் பொது நூலகம்

இணுவில் பொது நூலகமும் சனசமூக நிலையமும் இணுவிலையும் அதனைச் சூழஉள்ள கிராமத்து மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.[1] இந்தப் பிரதேசத்திலே தரமான ஓர் நூலகம் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் உதவியோடு இந்த நூலகம் புனரமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நூலகமானது கல்வி, கலை, கலாசார, சமய, இலக்கிய, சமூக, அரசு, அறிவியல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளோடு, விளையாட்டுத் துறையிலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்களை ஒரு உன்னதமான நிலைக்கு இட்டுச்செல்வதையே தனது பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இணுவில் பொது நூலகம்
நாடுஇலங்கை
தொடக்கம்1986
அமைவிடம்இணுவில்
இணையதளம்inuvillibrary.com/

வரலாறு

தொகு

யாழ்ப்பாணத்து சமூக கட்டமைப்புக்களிலே அதன் ஆரம்ப அறிவுவிருத்தியின் [2]அச்சாணிகளில் ஒன்றாக சனசமூகநிலையங்கள் விளங்கிவருகின்றன. இந்த சமூக கட்டமைப்புக்களிலே கிராமம், வட்டாரம், தெரு, குறிச்சி, சாதிசமூக அலகுகள்தோறும் குறைந்தது ஒரு வாசிகசாலை தன்னும் இருக்கும். இந்த வாசிகசாலைகள் கிராமமக்களின் ஆரம்ப அறிவுத்தேவைகளையும், ஆளுமையையும் விருத்தி செய்வதோடு அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் பங்காற்றியிருக்கின்றது. இப்படி ஒருசமூக அலகாக 1948 ம் ஆண்டு, சுதந்திரஇலங்கையில், ஒரு சிறிய ஓலைக் கொட்டிலிலே ஸ்ரீ கணேசா வாசிகசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பானது, பல்வேறு வடிவங்களை. மாற்றங்களாகக் கொண்டு ஆனால் ஒரு வாசிகசாலையாக சப்தமில்லாமல் சேவையாற்றி வந்துள்ளது. கடந்த அறுபதுக்கு மேற்பட்ட சாதனைமிகு வருடங்களில் அதன் பாதையில் பல சமூக அரசியல் மாற்றங்களையும், பலதலை முறைகளையும் கடந்து புதியதொரு செழுமைமிகு சமூக மாற்றங்களுக்கும் அது வித்திட்டு இருக்கின்றது.

1986.07.09 ஆம் ஆண்டு இப்பிரதேச இளைஞர்களினால் இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்  என பதிவு செய்யப்பட்ட இவ் அமைப்பானது இன்று பெரு விருட்சமாக திகழ்கின்றது.

2002.03.31 புனரமைக்கப்பட்ட இணுவில் பொதுநூலகத்தின் உடல்,உள பௌதீக வளங்களை உருவாக்கித்தந்த பெருமை இந்த ஊர் நலம்விரும்பிகளையே சாரும். தேவையான நேரத்தில் ஏற்பட்ட மனமாற்றம், சமூகமேம்பாடு, கல்வி, கலை, விளையாட்டுத்துறைகள் மீது ஏற்பட்ட அதீத அக்கறை என்பன நூலகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. அவ்வப்போது பொருளுதவி, தளபாடங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், காகிதாதிகள், தொழில்நுட்ப சாதனங்கள், தொலைக்காட்சி, கம்பியூட்டர்கள், கட்டிடப்பொருட்கள், விளம்பரங்கள், ஆயுதங்கள், ஏன் திருவலைகையைக்கூட வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்கள். காலத்திற்கு காலம் தேவை உணர்ந்து, அங்கத்தவர்களின் மனங்கோணாது இந்த உதவிகளை செய்து தருகின்றார்கள்.

நூலகத்தின் சேவைகள்

தொகு
 
உட்கட்டமைப்பு தோற்றம்

பிரதேசத்திலே தரமான ஓர் நூலகம் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் உதவியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நூலகமானது கல்வி, கலை, கலாசார, சமய, இலக்கிய, சமூக, அரசு, அறிவியல், மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளோடு, விளையாட்டுத் துறையிலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்களை ஒரு உன்னதமான நிலைக்கு இட்டுச்செல்வதையே தனது பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த இலட்சியப் பயணத்தை நோக்கியே தனது பாதையை திட்டமிட்டு வகுத்துக்கொண்டும் உள்ளது.

இந்த நூலகத்தில் வாசகர்கள் தம்மை ஒரு அங்கத்தவராக இணைத்துக்கொள்வதன் மூலம் நூல்களை இரவல் எடுத்துச்செல்ல முடியும். தவிர எந்தஒரு குடிமகனும் இங்குள்ள படிப்பகத்தில் இருந்து வேண்டிய நூல்களை எடுத்து வாசிக்க முடியும். அத்தோடு இங்கு மாணவர்களின் நலன் கருதி பாடம் படிப்பதற்கான ஒரு படிப்பகமும் உருவாக்ப்பட்டுள்ளது.

இணுவில் பொதுநூலகமானது வாரத்தில் ஏழு நாட்களுமே காலை 7.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை திறந்திருக்கும். இங்கு எல்லாவிதமான பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் வாசிக்கலாம். குடாநாட்டில் இருந்து வெளியாகின்ற உதயன், தினக்குரல், வலம்புரி, தினமுரசு, ஆகியவற்றுடன் கொழும்பில் இருந்து வெளிவருகின்ற வீரகேசரி, சுடர்ஒளி, தினமுரசு, தினகரன், போன்ற அனைத்துப் பத்திரிகைகளையும் படிக்கமுடியும். இதுதவிர மாலை வேளைகளில் தினமும் 4 மணிமுதல் 7 மணிவரையான காலப்பகுதியில் எந்தவொரு சிறுவர் சிறுமியரும் இங்குள்ள சிறுவர் பூங்காவில் பொழுதை களிக்கலாம்.

இந்த பொதுநூலகமானது சுமார் பதினாறாயிரம் நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது சிறுவர்நூலகம் ஒன்றும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. தவிர இணுவில் பொதுநூலகத்தில் கணினிப்பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கான கணினிப்பயிற்சிகளும், மாணவர்களுக்கான பயிற்சி நெறியும் பயிற்றுவிக்கப் படுகின்றது. அத்தோடு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட பிரத்தியேக விளையாட்டுப்பகுதி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலகமானது கருத்தரங்குமண்டபம், கலாசாரமண்டபம், சிறுவர் பாடசாலை, தகவல் தொழில்நுட்ப மையம் என்பவற்றோடு சர்வதேசவலைப் பின்னலில் தொலைக்காட்சிச் சேவையையும் ஆற்றி வருகின்றது. பொதுநூலக மண்டபத்திலே புத்தக கண்காட்சியும், விற்பனையும், புத்தக வெளியீடுகள், இலவச மருத்துவசேவை, மூக்குக்கண்ணாடி வழங்குதல், வைத்தியப்பரிசோதனை, இரத்ததானம், இலவச கல்வியியல் கருத்தரங்குகள், மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடிக் கருத்தரங்குகள் போன்ற சமூகநலன் பேணும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. வருடம்தோறும் ஆண்டு விழாவின்போது இரத்ததானம், பல விளையாட்டுப் போட்டிகள், மற்றும் போட்டிப் பரீட்சைகளையும் நடாத்தி மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களையும் நூலகமானது வழங்கிவருகின்றது.

இணுவில் பொதுநூலக கலாசார மண்டபம் இது கலை, மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காகவும், நூல்வெளியீடுகள், பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் நூலகம் என்பன இயங்குவதற்காகவும் பல லட்சருபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர சின்னஞ் சிறார்களின் பொழுதுபோக்கிற்காக கொழும்பில் இருந்து தருவிக்கப்பட்ட நவீன விளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கிய சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னேறிவரும் காலச்சூழலுக்கேற்ப நவீன தகவல் தொழில்நுட்பத்துறை எமது பிரதேசங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. இந்த நிலையைப் போக்கும் முகமாகவும், உலக அளவில் புலம்பெயர்ந்து பரந்து வாழும் எம் அன்பர்களின் உறவுகளைப் பேணும் முகமாகவும் சர்வதேச வலைப் பின்னலில் இணுவில் பொதுநூலகமானது இணைய நூலகத்தை (e-library) நிறுவியுள்ளது. மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும், நிகழ்காலத் தகவல்களையும் தாங்கிவரும் இந்த இணையத்தளமானது புலம்பெயர்ந்து வாழும் எம்சகோதரர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவே அமையும்.[3]

துறைகள்

தொகு
 
தகவல் தொழில்நுட்ப மையம்

உசாத்துணைப் பகுதி (Reference Section)

நிரந்தர உசாத்துணைப் பகுதி (Permanent Reference Section)

வாசிப்புப் பகுதி (Reading section)

சிறுவர் நூலகம் (Children Section)

நூல்கள் இரவல் வழங்கும் பிரிவு (Lending Section)

தகவல் தொழில்நுட்ப மையம் (Information Technology Center)

படிப்பகம் (Study Hall)

லம்போதரா விளையாட்டுக்கழகம் (Lampodahara Sports Club)

முன்பள்ளி (Junior Smart Center)

சிறுவர் பூங்கா (Children park)

ஈழத்து நூல்கள் ஆவணவாக்கல் பகுதி (Sri Lankan Books Documentary Section)[4]

இந்நூலகத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அபிவிருத்திகள்

தொகு
  • 1986- இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்  என பதிவு செய்யப்பட்டமை
  • 2002 – நிரந்தர காணி கட்டடம்[5]
  • 2003 – கலாசார மண்டபம், நிதி சேகரிப்பு
  • 2004 – சிறுவர் பூங்கா, பத்தரிகைப்பகுதி புனரமைப்பு
  • 2005 – நிதி சேகரிப்பு நிதி நிரந்தர வைப்பிலிடல்
  • 2006 – நூல்கள் சேகரிப்பு
  • 2007 – சிறுவர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டமை
  • 2008 – நிதி சேகரிப்பு நிதி நிரந்தர வைப்பிலிடல்
  • 2009 – கட்டட புனரமைப்பு
  • 2010 – நூல்கள் சேகரிப்பு, கலாசார மண்டப மேல்வைலைகள் கட்டட நிர்மான வேலைகள் ஆரம்பம்
  • 2011 – கலாசார மண்டப மேல் வேலைகள் ஆரம்பம்
  • 2012 – நூல்கள் கொள்முதல், பத்திரிகைப் பகுதி விஸ்தரிப்பு
  • 2013 – பருவ இதழ் பகுதி விஸ்தரிப்பு, தகவல் தொழில்நுட்ப மையக்கட்டடம் திறந்து வைப்பு. அறிவகம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்டது(ICTA)
  • 2014 – படிப்பகக்கட்டம் திறந்து வைப்பு
  • 2015 – முன்பள்ளிக்கான காணி கொள்முதல்
  • 2016 – முன்பள்ளிக் கட்டட வேலைகள் ஆரம்பம், புத்தகக்கண்காட்சி
  • 2017 - பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கு இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் நூலக தகவல் தொழில்நுட்ப மையம் (அறிவகம்) தெரிவு செய்யப்பட்டமை.
  • 2018 - நூல்கள் சேகரிப்பும் கணினிமயப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டமை.
  • 2019 - NVQ - தரத்திலான கணினி வகுப்புக்கள், ICT பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டமை.
  • 2020- TVEC - இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டமையும் NVQ -3 பாடநெறி ஆரம்பிக்கப்பட்டமையும். [6]

நூலகத்தின் வருடாந்த செயற்பாடுகள்

தொகு
  • புலமைப் பரிசில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்ககள்
  • க.பொ.த. சாதரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படுகின்றன
  • ஆங்கில வகுப்பு நடைபெறுகின்றது
  • சிங்கள வகுப்புக்கள நடாத்தல்
  • கணிணிக்கற்கைநெறிகளை போதித்தல்
  • வாசிப்பு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தல்
  • ஆண்டு நிறைவு விழாவையொட்டிய போட்டிகள்
  • பொது அறிவுப் போட்டிப் பரீட்சை
  • சதுரங்க சுற்றுப் போட்டி
  • கரம் சுற்றுப் போட்டி
  • துடுப்பாட்ட சுற்றுப் போட்டி
  • முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழா, விளையாட்டுப்போட்டி, கண்காட்சி போன்றவற்றை நடாத்துதல்
  • நூல்கள் வெளியீடு செய்தல்
  • இரத்ததான நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல்
  • செயலமர்வுகளை நடாத்துதல்
  • மருத்துவ முகாம்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Inuvil Public Library Magazine,Inuvil, Jafna, 2002.
  2. Building Opening Magazine - Information and Technology Center Opening
  3. Study hall Opening Magazine.
  4. Study hall Opening Magazine.
  5. Building Opening Magazine - Information and Technology Center Opening
  6. Study hall Opening Magazine.
  7. Study hall Opening Magazine.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணுவில்_பொது_நூலகம்&oldid=3363691" இலிருந்து மீள்விக்கப்பட்டது