இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)
இந்தியாவிற்கு ஒரு பாதை (A Passage to India) என்பது 1984 ஆம் ஆண்டின் பிரித்தானிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு டேவிட் லீன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு ஆங்கிலத் திரைப்படம். இதன் திரைக்கதை சாந்தா ராம ராவ் என்பவரின் நாடகத்தை ஒத்தும் மற்றும் இதே தலைப்பில் இ.எம். பிராஸ்டர் என்பவரால் எழுதப்பட்ட நாவலை ஒத்தும் உருவாக்கப்பட்டது.
இந்தியாவிற்கு ஒரு பாதை | |
---|---|
இயக்கம் | டேவிட் லீன் |
தயாரிப்பு | ஜான் பிராபோர்ன் ரிச்சர்டு பி. குட்வின் |
மூலக்கதை | A Passage to India (நாடகம்) படைத்தவர் இ. எம். பிராஸ்டர் |
திரைக்கதை | டேவிட் லீன் |
இசை | மாரிஸ் ஜாரே |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எர்னஸ்ட் டே |
படத்தொகுப்பு | டேவிட் லீன் |
கலையகம் | இஎம்ஐ பிலிம்சு ஹெச்பிஓ |
விநியோகம் | தார்ன் இஎம்ஐ ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் (ஐக்கிய இராச்சியம்) கொலம்பியா பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) |
வெளியீடு | திசம்பர் 14, 1984 |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | £17 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $27.2 மில்லியன் (US)[2] |
இந்தப் படம் லீனின் திரைப்பட வாழ்க்கையில் அவர் எடுத்த கடைசிப் படம் மற்றும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ரியான்னின் மகள் என்ற படத்திற்குப் பின் பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லீன் இயக்கிய படமும் ஆகும். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவிற்குப் பிறகு உலக அளவில் சிறந்த படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டத் திரைப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம், லீனுக்குச் சிறந்த இயக்குநர் மற்றும் ஜூடி டேவிஸ்க்கு அவரின் கதாப்பாத்திரமான அடிலியா குவஸ்டர்ட்டுக்காகச் சிறந்த நடிகை கிடைத்தது. பெர்கி அஷ்கிர்ப்ட் சிறந்த துணை நடிகைக்கான அகாடமி விருதை மிசஸ் மூர் (Mrs Moore) என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காகப் பெற்றார், இந்த விருதை அவர் தனது 77 வது வயதில், சிறந்த துணை நடிகை விருதை வென்றார். மேலும் சிறந்த அசல் பின்னணி இசை கோர்வைக்காக மாரிஸ் ஜாரே தனது மூன்றாவது அகாடமி விருது வென்றார்.
கதைக் களம்
தொகுஅடிலியா குவஸ்டர்ட் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடல் பயணமாக திருமதி மூர் (Mrs Moore) உடன் பயணித்தார். மூர் என்பவர் அடிலியாவின் எதிர்கால மாமியார் அதாவது கணவராக வரப்போகும் ரோனி ஹீசிலாப் என்பவரின் தாயார். ரோனி, மூர்ரின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனாவார். தற்போது ரோனி இந்தியாவில் இருக்கும் சந்தப்பூர் என்னும் ஊரில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பணிபுரிகிறார். அடிலியாவிற்கு அவரைச் சந்திக்கும் நோக்கத்தில் தான் இந்த இந்தியப் பயணம் இருந்தது.
1920 களில் இந்தியாவில் சுதந்திர போராட்டம் அதிகரித்திருந்த காலம் அது. மேலும் பிரித்தானிய சமுதாய மக்கள் இந்திய சமுதாய மக்களிடமிருந்து தனித்து இருந்தனர். அதனால் இரண்டு சமுதாய மக்களிடையே ஒரு பெரும் இடைவெளி உருவாகி இருந்த சமயம். அதனால் இந்தப் பயணத்தில் இவர்கள் இருவருக்கும் ஒருவித வெறுப்புணர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளூர் பள்ளிக் கண்காணிப்பாளரான ரிச்சர்ட் ஃபீல்டிங் (ஜேம்ஸ் பாக்ஸ்), அவர்களை ஒரு விசித்திரமான, வயதான இந்தியப் பிராமண அறிஞர் பேராசிரியர் நாராயண் கோட்போலே (அலெக் கின்னஸ்) என்பவரை அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் திருமதி. மூர் ஒரு இந்திய மருத்தவரான அசிஸ் அஹமத் என்பவரைச் சந்திக்கிறார். அவர் மூர்ரை அங்கிருக்கும் மராபார் குகைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொள்கிறார்.
அடிலியா, திருமதி. மூர் மற்றும் அசிஸ் ஆகிய மூவரும் அந்தக் குகைக்குச் செல்கிறார்கள். குறைவான நபர்களே குகைக்குள் இருந்தாலும், திருமதி. மூர் குகை சுவர்களில் இருந்து வெளிப்படும் அதிகமான எதிரொலி சத்தத்தால் பாதிப்புக்குள்ளாகிறார். அந்தக் குகையில் ஒரு சிறு ஒலி கூட குகைகளின் சுவர்களில் பட்டு பன்மடங்கு ஒலி அலைகளாக பெருகி எதிரொலிக்கிறது. ஆனாலும் திருமதி மூர், அடிலியா மற்றும் அசிஸ் இருவரையும் ஒரே வழிகாட்டியின் உதவியுடன் குகையைப் பார்க்க மேலும் போகுமாறு ஊக்கப்படுத்துகிறார்.
குழுவிலிருந்து சிறு தூரத்திலுள்ள குகையின் உயரமான பகுதியை அவர்கள் இருவரும் வந்தடைகிறார்கள். அந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு, அசிஸ் புகைப்பதற்காகத் தனியாகச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து, அவர் திரும்பி வந்த பின் அடிலியா அங்கிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை உணர்ந்தார். அப்போது அடிலியா மலைக்கு கீழே ஓடுவதைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் மருத்துவரின் மனைவியான திருமதி. காலண்டர் (ஆன் பிர்பாங்க்) அடிலியாவை அவருடைய இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறார். பின் அவர் அடிலியாவின் இரத்த காயங்களுக்கு மருத்துவம் செய்து அடிலியாவைக் காப்பாற்றி விடுகிறார்.
அசிஸ் இல்லத்திற்கு திரும்பிய பிறகு, அவர் மேல் அடிலியாவைக் குகைக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். திருமதி. மூர் குடும்பம், அசிஸ் எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை என்று அவர் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தது. மேலும் மூர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குப் புறப்படுகிறார். கடல் பயணத்தில் திருமதி. மூர் விரைவாக நோய் வாய்ப்படுகிறார். பின் சில நாட்களில் இறந்தும் விடுகிறார்.
நீதிமன்றத்தில் அடிலியாவிடம் குறுக்கு விசாரனை நடத்தப்பட்டது அதில் அவர் அசிஸ் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கவில்லை அதனால் தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதனால் அசிஸ் நிரபராதி என்று உறுதிபடுத்தப்படுகிறது. அவர் விடுவிக்கப் படுகிறார். ஆனால் அடிலியா பொய்ப் புகார் கொடுத்ததால் பிரித்தானிய சமுதாயம் தங்களின் ஆதரவை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அடிலியாவிற்கு கல்லூரி செல்ல ரிச்சர்ட் ஃபீல்டிங் மட்டும் உதவிகிறார். அவள் விரைவில் இங்கிலாந்திற்குத் திரும்புகிறார். அசிஸ் தனது மேற்குக் கூட்டாளிகளின் உதவியுடன் விரைவில் ஒரு புதிய வேலையை தொடங்குகிறார் . அவர் காஸ்மீரில், சிரிநகரின் ஏரி அருகே ஒரு மருத்துவமனை ஆரம்பிக்கிறார்.
இதற்கிடையில் அடிலியாவின் உதவியுடன் ஃபீல்டிங், திருமதி. மூர்ரின் மகளான ஸ்டெல்லா மூர்ரை திருமணம் முடிக்கிறார். ஸ்டெல்லா அவளது தாயாரின் இரண்டாவது திருமணம் மூலம் பிறந்தவர். அசிஸ் மீண்டும் ஃபீல்டிங்கிடம் தொடர்புகொள்கிறார். தன்னை விடுவிக்க உதவிய அவர்மேல் கொடுத்த புகாரை திரும்பப் பெற்ற அடிலியாவின் தைரியத்தை பாராட்ட தான் நீண்ட நெடிய நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு அடிலியாவிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.
அந்த குகைக்குள் அடிலியாவிற்கு எப்படி யாரால் காயங்கள் உண்டாகியது, அங்கு நடந்த மர்மச் சம்பவங்கள் என்ன என்ற அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே லீன் படத்தின் கதையை முடித்திருப்பார்.
பின்புலம்
தொகுஇ.எம். பிராஸ்டர் இந்தியாவிற்கு ஒரு பாதை என்ற இந்தப் புதினத்தை அவர் இந்தியாவில் 1912 மற்றும் 1913 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் தங்கி இருந்தபோது எழுத ஆரம்பித்தார் (அப்போது அவர் ஒரு இந்திய இளைஞர் சையத் ரோஸ் மசூத் என்பவருக்கு லத்தின் மொழி கற்றுக் கொடுக்கும் போது அந்த இளைஞரால் ஈர்க்கப்பட்டார்) பின் புதினத்தை அவர் 1921 ஆம் ஆண்டு இந்திய மஹாராஜா ஒருவரின் செயலாளராக பணிபுரிந்த போது முடித்தார். இந்தப் புதினத்தின் முதல் பதிப்பு 6 சூன் 1924 ஆண்டு வெளிவந்தது.[3] இந்த நாவல் பிராஸ்டரின் மற்ற நாவல்களை விட வேறுபட்டிருந்தது ஏனெனில் இதில் அரசியல் தாக்கம் மிக குறைவாக இருந்தது.
இப்புதினத்தில் அவர் பிரித்தானியா மற்றும் இந்தியா இடையே உள்ள உறவைப் பற்றிய ஒரு சமநிலைப் பார்வை இருந்தது.[4] மேலும் புதினத்தின் முடிவில் அந்த குகைகுள் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கூறாமல் அதைப் புதினத்தைப் படிப்பவரின் எண்ணத்திற்கு விட்டுவிட்டார். அதனால் இந்தப் புதினம் இலக்கிய வட்டத்தில் மிகச் சிறந்த விமர்ச்சனத்திற்குள்ளானது. அது தவிர ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பு என்ற பெயரும் பெற்றது.[5]