இந்தியாவில் சட்டமியற்றும் நடைமுறை

இது இந்தியாவில் சட்டம் இயற்றும் நடைமுறையின் சுருக்கமான விளக்கம்.

அரசாங்கம்

தொகு

இந்தியாவின் சட்டங்கள் முழு நாட்டிற்கும் ஒன்றிய அரசாங்கத்தாலும், அந்தந்த மாநிலங்களுக்கான மாநில அரசுகளாலும் இந்திய நாடாளுமன்றம் அதாவது மக்களவையினால் உருவாக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரம்

தொகு

அரசியலமைப்பின் எந்தப் பகுதியினையும், நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ் சேர்ப்பது, நீக்குவது மற்றும் மாற்றங்கள் செய்யும் செயல்முறைகளை அரசியலமைப்புத் திருத்தம் என்று அழைக்கப்படுகிறது. [1] அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறை பிரிவு 368 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.மேலும், அவை எண்ணிக்கையின் மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.இது தவிர, அரசியலமைப்பின் கூட்டாட்சி மற்றும் நீதித்துறை அம்சங்கள் தொடர்பான சில திருத்தங்கள் பெரும்பான்மையான மாநில சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாகும் முறை

தொகு

ஒரு மசோதா என்பது ஒரு சட்ட முன்மொழிவின் வரைவு ஆகும். அது நாடாளுமன்றத்தின் சட்டமாக மாறுவதற்கு முன் பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். [2] [3] நாடாளுமன்றத்தின் ஓர் அவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட மூன்று நிலைகள் உள்ளன. மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்ற வேண்டும்.

முதல் வாசிப்பு

தொகு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மக்களவை அல்லது மாநிலங்களைவைகளில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டமாக மாற்றுவதற்கான செயல்முறை தொடங்குகிறது. ஒரு மசோதாவை அமைச்சரோ அல்லது தனிப்பட்ட உறுப்பினரோ அறிமுகப்படுத்த முடியும். அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டால் இது அரசாங்க மசோதா என்றும், தனிநபர் அறிமுகப்படுத்தினால் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா என்றும் அறியப்படுகிறது. மசோதாவின் பொறுப்பாளர், மசோதாவை அறிமுகப்படுத்த அவையின் அனுமதியினைக் கேட்பது அவசியம். அவையின் அனுமதி கிடைத்தால் மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலை மசோதாவின் முதல் வாசிப்பு என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவது வாசிப்பு

தொகு

இரண்டாவது வாசிப்பு இரண்டு நிலைகளில் நிகழும் பரிசீலனையைக் கொண்டுள்ளது.

முதல் நிலை

தொகு

முதல்நிலையில் மசோதாவின் அடிப்படைக் கொள்கை தொடர்பாக விவாதம் நடைபெருகிறது. மசோதாவை அவையின் தெரிவுக்குழு அல்லது இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்கு அனுப்புவது அல்லது அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான நோக்கத்திற்காக அல்லது அதை உடனடியாக கவனத்தில் கொள்வதற்காக அதை சுற்றறிக்கை அனுப்ப அனுமதி வழங்கப்படுகிறது.[4]

இரண்டாம் நிலை

தொகு

இரண்டாவது வாசிப்பின் இரண்டாம் நிலையானது, அறிமுகப்படுத்தப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட அல்லது கூட்டுக் குழுவின் அறிக்கையின்படி சட்டமூலத்தின் ஓவ்வொரு பிரிவுகளையும் பரிசீலனை செய்வதனைக் குறிக்கிறது. மசோதாவின் ஒவ்வொரு உட்பிரிவின் மீதும் விவாதம் நடைபெறுகிறது.இந்த நிலையில் திருத்தங்கள், சரத்துகள் எனும் நிலைக்கு மாற்றப்படலாம். திருத்தங்கள் அவையின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மசோதாவின் ஒரு பகுதியாக மாறும். உட்பிரிவுகள், அட்டவணைகள் (ஏதேனும் இருந்தால்), சரத்து 1 மற்றும் மசோதாவின் நீண்ட தலைப்பு ஆகியவை அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, இரண்டாவது வாசிப்பு முடிந்ததாகக் கருதப்படுகிறது.[5]

மூன்றாவது மற்றும் கடைசி வாசிப்பு

தொகு

அதன்பிறகு, மசோதாவை நிறைவேற்றும் அடுத்த நிலைக்கு உறுப்பினர் பொறுப்பாளர் நகர்த்தலாம். இந்த நிலை மசோதாவின் மூன்றாவது வாசிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மசோதாவினை ஆதரிக்கவோ அல்லது நிராகரிப்பதற்காகவோ விவாதங்கள் நடைபெறும். இந்த நிலையில், முறையான, வாய்மொழி அல்லது விளைவுசார் திருத்தங்களை மட்டுமே நகர்த்த அனுமதிக்கப்படும். ஒரு சாதாரண மசோதாவை நிறைவேற்றும் போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பது அவசியம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவைப் பொறுத்தவரை, அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் கலந்துகொண்டு வாக்களிப்பதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை.[6] மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்குகள் சமமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அவையின் தலைமை அதிகாரி வாக்களிக்கலாம், இது வாக்களிக்கும் உரிமை என குறிப்பிடப்படுகிறது. [7]

மசோதாவை நிறைவேற்றுதல்

தொகு

ஒரு அவைக் கூட்டத்தின் போது எந்த நேரத்திலும் கோரம் இல்லை என்றால், அது ஒரு அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்காக இருந்தால், அவையின் தலைவர் அல்லது சபாநாயகர் அல்லது பொறுப்பாளர் அந்த அவையினை ஒத்திவைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.[8] நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் எடுக்கப்பட்ட மசோதாக்களில் அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலமோ அல்லது குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக வாக்களிக்கக் கோருவதும் உறுப்பினரின் உரிமையாகும். [9]

மற்றொரு அவையில் மசோதா

தொகு

மசோதா நாடாளுமன்றத்தின் ஓர் அவையால் நிறைவேற்றப்பட்ட பிறகு, மற்றொரு அவைக்கு அனுப்பப்படுகிறது. அந்த அவையிலும் மேலே கூறிய நிலைகளில் செயல்படுகிறது. ஓர் அவையில் ஏற்கப்பட்ட மசோதா மற்றொரு அவையினால் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் மசோதா அறிமுகமான அவைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்படும். இரண்டாம் அவை கூறிய திருத்தங்களுக்கு முதல் அவை உடன்படவில்லை எனில் அந்த மசோதாவிற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று பொருளாகும். நிதி தொடர்பான மசோதாவை 14 நாட்களுக்கும், சாதாரண மசோதாவை ஆறு மாதங்களுக்கும் அதை நிறைவேற்றாமல் (அல்லது நிராகரிக்காமல்) வைத்திருக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவைத் திருப்பித் தரத் தவறினால், மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தொகு

விவரிக்கப்பட்ட செயல்முறையைத் தொடர்ந்து இரு அவைகளாலும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டதும், அது 111வது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். நிதி தொடர்பான மசோதாவைத் தவிர மற்ற மசோதாக்களை குடியரசுத் தலைவர் இரு அவைகளுக்கும் திருப்பி அனுப்பலாம்.நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஒரு குறிப்பிட்ட மசோதா அரசியலமைப்பை மீறுவதாக குடியரசுத் தலைவர் கருதினால், அவர் சட்டப்பிரிவு 368 நடைமுறையைப் பின்பற்றி மசோதாவை திரும்பப் பெறலாம். சட்டப்பிரிவு 368- ன்படி நாடாளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்திவைக்க மாட்டார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், இந்த மசோதா இந்திய அரசிதழில் [10] வெளியிடப்பட்டு, அவர் ஒப்புதல் அளித்த நாளிலிருந்து சட்டமாக மாறும். அவர் தனது ஒப்புதல் வழங்கவில்லை எனில் மசோதா கைவிடப்படும், இது முழுமையான வீட்டோ என அழைக்கப்படுகிறது. பிரிவு 111 மற்றும் பிரிவு74 ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் மீது தனது முழுமையான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். [11]

சட்டம் நடைமுறைக்கு வருதல்

தொகு

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நாளில் இருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். அவசரச் சட்டங்கள் எனில் பின்னர் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கும். நிதி தொடர்பான மசோதாக்களில் சில சமயம் மாநில அல்லது ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்ப எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு விருப்பத்தின்படி நடைமுறைக்கு வந்தால் அரசிதழில் தனிஅறிவிப்பு வெளியிடப்படும்.

சான்றுகள்

தொகு
  1. "Pages 311 & 312 of original judgement: A. K. Roy, Etc vs Union Of India And Anr on 28 December, 1981". பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  2. "Parliamentary procedure". பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  3. "Rules of procedure and conduct of business in Rajya Sabha" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  4. "How a bill becomes an Act". Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  5. "How a bill becomes an Act". Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  6. "How a bill becomes an Act". Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  7. "How a bill becomes an Act". Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  8. "Rajya sabha handbook". பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  9. "Voting and division in Lok Sabha" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  10. "Amendments to Sebi Act gets Presidential assent". http://economictimes.indiatimes.com/markets/regulation/amendments-to-sebi-act-gets-presidential-assent/articleshow/22718696.cms. 
  11. "The president's power of withholding assent". http://guyanachronicle.com/presidents-power-to-withhold-assent/.