இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 (Indian Councils Act 1861) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1861 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவின் அரச பிரதிநிதி (வைஸ்ராய்) மற்றும் மாகாண ஆளுனர்களின் நிருவாகக் குழுக்களுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது. இதனால் ஆலோசனை வழங்கும் அமைப்புகளாக இருந்த நிருவாகக் குழுக்கள் அமைச்சரவை அமைப்புகளாக மாற்றப்பட்டு அவற்றின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்றனர். இந்திய வைஸ்ராயின் நிருவாகக் குழுவில் ஆறு சாதாரண உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் உள்துறை, வருவாய், நிருவாகம், சட்டம், நிதி, பொதுப்பணிகள் போன்ற துறைகளுக்குப் பொறுப்பேற்றனர். இவர்களைத் தவிர, இந்தியப் படையின் முதற்பெரும் தளபதியும் சிறப்பு உறுப்பினராக நிருவாகக் குழுவில் இடம் பெற்றார். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளைப் புறந்தள்ள வைஸ்ராய்க்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்டம் கல்கத்தாவில் செயல்பட்ட வைஸ்ராயின் நிருவாகக் குழுவுக்கு பிரித்தானிய இந்தியா முழுவதும் அதிகாரம் செலுத்த உரிமை வழங்கியது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Encyclopædia Britannica article concerning this Act
  2. "History of State Legislature". Tamil Nadu Legislative Assembly, Government of Tamil Nadu, Chennei. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)