இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம் (Defence Research and Development Establishment) என்பது இந்திய நடுவண் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆராய்ச்சி மையமாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் அமைந்துள்ளது[1]

இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நச்சுப்பொருட்கள், உயிரி நச்சுப்பொருட்கள், நச்சு கலந்த இரசாயனக் கலவைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் புரிந்து, அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டறிந்து, அவற்றை பயன்படுத்தி உயிர் காத்தல் போன்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து பயன் படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது. இத்தொழிலகம்' பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் அமைந்துள்ள வாழ்வியல் இயக்குநரகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்பொழுது இதன் இயக்குனராக டாக்டர் ர.வரதராஜன் செயல்பட்டு வருகிறார்.

வரலாறுதொகு

1924 ஆம் ஆண்டில் குவாலியரில் அன்றைய அரசர் கனிமவள வாயில்களையும் காட்டு வளங்களையும் ஆராய்வதற்கென்று ஒரு ஆய்வகத்தை நிறுவினார். 1947 ஆம் ஆண்டில் அப்போதைய முதலாம் ஆளுனராக செயல்பட்ட ராஜகோபாலாச்சாரி ஜீவாஜி தொழிலக ஆராய்ச்சி ஆயவகத்தைத் திறந்து வைத்தார். 1966 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஆய்வகத்தை ஓர் அரசு ஆய்வகமாக மாற்றியமைத்தது. அதன் ஆராய்ச்சி செயல்பாடுகள் பரவலாக விரிவடைந்த நிலையில், இந்த ஆய்வகத்தின் பெயரை ”இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்” என மாற்றியமைத்தார்கள்.[2]

ஆராய்ச்சிதொகு

இத்தொழிலகம் நச்சுப்பொருட்களை கண்டறிந்து, அதற்கு எதிராக செயல்படக்கூடிய பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறிந்து பாதுகாக்க விழைகிறது. இந்த ஆய்வகம் உயிரியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உயிரித் தொழில்நுட்பம், நச்சுயிரியல் (virology), நச்சியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் புரிந்து வருகிறது. தீங்கு விளைவிக்கக் கூடிய இராசாயனப்பொருட்களைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் கண்டறிந்து, அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு செயல்படும் முறைகளை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.[3]

அதே போன்று உடலில் நோய் உயிரிகள் தாக்கினால் அதை விரைவாக கண்டறிவதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டறிதல், மற்றும் நோய் தடுப்பு முறைகளை செயல்படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி தகுந்த பாதுகாப்பு முறைகளை வலியுறுத்துதல் போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. அதைப் போலவே வேதி ஆயுதங்களால் தாக்குதல் ஏற்பட்டால் அப்பொழுது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எச்சரிக்கைகள், பாதுகாப்பு முறைகள், போன்ற அனைத்து வழிமுறைகளையும் ஆராய்ந்து இது போன்ற செயல்களை தடுக்கவும், பாதிப்புகளில் இருந்து மீளவும் கற்றுத்தருகின்றன. மேலும் நச்சுப் பொருட்களை பிறருக்கு அபாயம் ஏற்படா வகையில் அகற்றுவது அல்லது நச்சுத்தன்மையை இழக்கச் செய்வது ஆகியவற்றை செயல்படுத்துதல்.

மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை செயல் படுத்துவதுதொகு

மக்களுக்க்ப் பயன்படும் படியான துறைகளிலும் இந்த தொழிலகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தி அவற்றில் இருந்து பயன் படும் வகையில் வளிமங்கள் அல்லது மின்சாரம் தயாரித்தல், நோய்த் தடுப்புமுறைகளை ஆராய்ந்து கண்டுபிடித்தல், பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், போன்ற பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் வெற்றிகரமாக அமைந்த கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக செயல்படுத்தவும் உதவி புரிந்து வருகிறது.[4] பல தனியார் நிறுவனங்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள்.

இது போல வணிக ரீதியில் செயல் படுத்திய திட்டங்களில் அடைப்பான் நோய் (Anthrax); டெங்கு அதிநுண்ணுயிர் காய்ச்சல்,(Dengue)[5] கொள்ளைவாரி நோய்,(Plague)[6] மலேரியா நோய்(Malaria)[7] ஆகிய நோய்களை தடுப்பதற்கான மருந்துப் பெட்டிகள் தயாரித்து வழங்குதல் ஒரு முக்கியமான பணியாகும். இதே போன்று பூச்சி கொல்லிகள், பூச்சிகளை விலக்கும் இரசாயனப் பொருட்கள், குடிக்கும் தண்ணீரின் தன்மையை சோதித்தறிதல், பிறகு குடிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி வழங்குதல், போன்ற செயல்பாடுகளும் அடங்கும். உயிரி பயங்கரவாதம் நடக்காமல் தடுப்பது, நடந்தால் பாதித்தவர்களுக்கு பாதுகாப்பான மருந்துகள் வழங்குதல், போன்ற ஆய்வுகளும் முக்கியமாகும்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. The Official Website of DRDO
  2. ^DRDE Historical Backgrounds
  3. 3.0 3.1 ^ DRDE Areas of Work
  4. ^ DRDE Products and Technologies available for the civilian sector
  5. ^ Dengue Diagnostic Kit from DRDE
  6. ^Plague Surveillance kit
  7. ^Antigen Detection for Falciparum Malaria