இந்திய மந்திரி சபை

இந்திய மந்திரி சபை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) பிரிவு 75 குறிப்பிடுகிறது

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அனைத்து அதிகாரங்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் இருப்பார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உள்ள அமைச்சரவையின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் செயல்படுவார். அரசியலமைப்புச் சட்டப்படி, அமைச்சரவை குடியரசுத் தலைவாரல் நியமிக்கப்படுவதாக உள்ளது.

மத்திய அமைச்சர்கள் நியமனம் தொகு

குடியரசுத்தலைவர் இந்தியாவின் பிரதமமந்திரியை நியமிக்கின்றார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 75(1)ன் படி பிரதமரை குடியரசுத்தலைவர் நியமித்தாலும் பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மற்ற அமைச்சர்களை நியமிக்கவேண்டும். [1] பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமைசர்களுக்கான துறைகளைக் குடியரசுத்தலைவர் ஒதுக்குவார். மக்களவையின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பிரதமரை குடியரசுத்தலைவர் நியமிப்பார்.

எண்ணிக்கை தொகு

முதலில் மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. பல அமைச்சரவைகளின் எண்ணிக்கை பலவாறாக இருந்து வந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் 91வது திருத்தத்தின்படி, பிரிவு 75ல் துணைப்பிரிவு 1 A திருத்தப்பட்டு 2003 ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர்கள் எண்ணிக்கை மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.[2]

ஊதியம் தொகு

அரசியலமைப்புச்சட்டம் அமைச்சர்களை வெவ்வேறு வகையாகப் பிரிக்கவில்லை என்றாலும் மத்திய அமைச்சர்களுக்கான ஊதியச்சட்டம் 1952ன் படி அவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவை மத்திய அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் எனப்படும். இவர்களுக்கான ஊதியம் நாடாளுமன்றம் முடிவு செய்யும். இவர்களுக்கு வாடகை இல்லா வீடும் வழங்கப்படும். பிரிவு 75(3) 78ன் படி மக்களவைக்கு மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டதாகும் பிரிவு 88ன் படி மத்திய அமைச்சராக இருப்பவர் இரண்டு அவைகளின் நடவடிக்கையிலும் பங்கேற்கும் உரிமைபெற்றவர். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவரும் அமைச்சராக நியமிக்கப்படலாம். ஆனால் இவர் பிரிவு 75 (5) ன்படி ஆறு மாதங்களுக்குள் இவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

இந்திய அரசியலமைப்பில் குடியரசுத்தலைவர் தொகு

இந்திய அரசியலமைப்பின்படி குடியரசுத் தலைவரே இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பார். இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மறைமுகத் தேர்தல் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரிவு 54ன் படி இத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்லி புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.[3] ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினர்களின் வாக்கிற்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும்.[4]

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட தகுதிகள் தொகு

  1. இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்
  2. 35 வயது முழுமையடைந்தவராக இருக்க வேண்டும்
  3. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியுடையவராக இருக்க வேண்டும்
  4. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி ஆதாயம் தரும் பணியில் இருப்பவராக இருக்கக் கூடாது.

பதவிக்காலம் தொகு

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இவர் பதவிநீக்கம் இரண்டு காரணங்களுக்காக செய்ய முடியும்

  • தாமே பதவிவிலகல் கடிதம் குடியரசுத் துணைத் தலைவருக்கு வழங்கவேண்டும்
  • பிரிவு 56ன் படி இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக செயல்படுதல்

குடியரசுத்தலைவர் ஆவதற்கான நிபந்தனைகள் தொகு

  1. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருக்க கூடாது
  2. மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்க கூடாது
  3. ஆதாயம் தரும் எந்த ஒருபதவியிலும் நீடிக்கக் கூடாது

ஊதியம் மற்றும் உதவித்தொகை தொகு

வாடகை எதுவும் தராமல் அலுவலகம் வழங்கும் வீட்டில் குடியிருக்கலாம். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் பதவிகாலியாகுதல் தொகு

குடியரசுத் தலைவர் பதவி கீழ்க்கண்ட ஏதாவது ஒரு காரணத்தினால் காலியாகலாம்

  • பதவிக்காலம் 5 ஆண்டுகள் நிறைவடையும் போது
  • குடியரசுத் தலைவர் தாமாகவே பதவியிலிருந்து விலகும் போது
  • மரணம் நேரும் போழுது
  • குடியரசுத் தலைவர் தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கும் போது
  • புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருந்து விலகியிருக்கும் போது
  1. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓர் அறிமுகம், பக்கம் 265-268, LexisNexis இரண்டாவது பதிப்பு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5143-527-3
  2. Dr JN Pandey, Constitution Law of India, pages 487- 488, Central law Agency Fifty Third Edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84852-41-2
  3. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு சட்டம் ஓர் அறிமுகம், பக்கம் 238-239, LexisNexis இரண்டாவது பதிப்பு, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5143-527-3
  4. Dr JN Pandey, Constitution Law of India, pages 469-470, Central law Agency Fifty Third Edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84852-41-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மந்திரி_சபை&oldid=3580427" இலிருந்து மீள்விக்கப்பட்டது