இந்திய மரகதப்புறா
இந்திய மரகதப்புறா (Chalcophaps indica indica) மரகதப்புறாவின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை பாக்கித்தான், தீபகற்ப இந்தியா, மேற்கு நேபாளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியா முதல் சீனா, மலேசியா, பிலிப்பீன்சு, இந்தோனேசியா, மேற்கு பப்புவான் தீவுகள் வரை காணப்படுகிறது.
விளக்கம்
தொகுமைனா அளவுள்ள இப்பறவை சுமார் 27 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பவளச் சிவப்பாக இருக்கும். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் வெளிர் ஊதாவாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி நல்ல மரகதப் பச்சையாக இருக்கும். தலை உச்சியும், கழுத்து, பிட்டம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். நெற்றி, புருவங்கள் போன்றவை வெண்மையாக இருக்கும். தோள்பட்டை இறக்கைகள் வெள்ளைப் பட்டையுடன் கூடிய 'வைன்' சாம்பல் நிறமாக இருக்கும். வால் பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்து நல்ல கருப்புப் பட்டையோடு காணப்படும். வாலின் கரும்பட்டை இடையிடையே துண்டுபட்டதுபோல சற்று இடைவெளியுடன் இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுஇப்பறவை இந்தியா முதல் சீனா, மலேசியா, பிலிப்பீன்சு, இந்தோனேசியா, மேற்கு பப்புவான் தீவுகள் வரை காணப்படுகிறது. தென்னிந்தியாவில் நீர்வளம் மிக்க மாறாப் பசுமை காடுகளிலும், ஈரம் மிக்க இலையுதிர் காடுகளில் காணபடுகிறது. மேலும் மலையடிவாரங்கள், மூங்கில் காடுகள், காட்டு விளிம்பை அடுத்துள்ள நிலங்கள் போன்ற இடங்களிலும் இவற்றைக் காணலாம் மலைகளில் 2000 மீட்டர் உயரம் வரை காணலாம்.[2]
நடத்தை
தொகுஇவை தனித்தோ, ஆணும் பெண்ணும் என இணையாகவோ தரையில் அமர்ந்து இரை தேடக்கூடியன. காட்டுப் பாதையிலும், தேயிலைத் தோட்டங்களுக்கு செல்லும் வழிகளிலும் கால்களால் நடத்தும் ஓடியும் தானியங்களைத் தேடும். பகல் பொழுதில் காட்டாமணக்கு போன்ற செடிகளின் அடியில் ஓய்வு கொள்ளும். பறக்கும்போது ஆரவாரமின்றி, நேராக, விரைவாக சிறக்கையடித்துப் பறக்கும் இயல்புடையது. இது காபி, தேயிலைத் தோட்டங்களில் உள்ள சுவர்களில் சாம்பல் தலை பச்சைப் புறாக்கள் போல மோதி உயிரிழப்பது உண்டு. இது தானியங்களையும், காட்டுச் செடிகளின் பழங்களையும், கரையான் போன்றவற்றையும் உணவாக கொள்ளும். இவை ஒற்றைக் குரலில் 'ஹுன்' 'ஹுன்' என ஒலி எழுப்பக்கூடியன.[2]
இனப்பெருக்கம்
தொகுஇவற்றின் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் மே வரை ஆகும். இவை இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்தில் மரங்களில் குச்சிகள், புற்கள் போன்றவற்றைக் கொண்டு திருத்தமாக கூடு கட்டும். கூடுகள் பொதுவாக இலை மறைவில் கட்டும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று வெளிர் மஞ்சளான கிரீம் நிறம் கொண்ட முட்டைகளை இடும். 12 நாட்கள் அடைகாக்கும். ஆணும் பெண்ணும் இணைந்து அடைகாத்து குஞ்சுகளைப் பேணும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 224.