இந்திய வட்டமேசை மாநாடுகள்
இந்திய வட்டமேசை மாநாடுகள் (Round Table Conferences) என்பன 1930-32 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த பிரித்தானிய அரசினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது.
1929ல் வெளியான சைமன் குழுவின் அறிக்கை பல தரப்பட்ட இந்தியர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த கட்ட அரசியல் சீர்திருத்தங்களைத் தீர்மானிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. மேலும் 1930 சட்ட மறுப்பு இயக்கத்தால் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல பிரித்தானியத் தலைவர்கள் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதினர். எனவே சைமன் குழுவின் பரிந்துரையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வட்டமேசை மாநாடுகள் கூட்டப்பட்டன. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் இறுதியாக எந்த முடிவும் எடுக்கபப்டவில்லை. ஆனால் பிரித்தானிய அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு இந்திய அரசுச் சட்டம், 1935 ஐ இயற்றியது.
முதலாவது வட்டமேசை மாநாடு (நவம்பர் 1930 - ஜனவரி 1931)
தொகுநவம்பர் 12, 1930 அன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் முதலாவது வட்ட மேசை மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய காங்கிரசு சட்டமறுப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபடியாலும், அதன் பெரும்பான்மையான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்ததாலும் இம்மாநாட்டைப் புறக்கணித்து விட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ராம்சே மெக்டோனால்டு தலைமை வகித்த இம்மாநாட்டில் மூன்று பிரித்தானிய அரசியல் கட்சிகளின் சார்பில் 16 பிரதிநிதிகளும் பிரித்தானிய இந்தியா மற்றும் அதன் சமஸ்தானங்களின் பிரதிநிதிகளாக 57 பேராளர்களாக இந்துமகாசபையினர், இந்தியக் கிருத்தவர்கள், முசுலிம் தலைவர்கள், சீக்கியர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். இவர்களோடு தாழ்த்தப்பட்டவர்களின் சார்பாக அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு அனைத்திந்திய கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்குவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர். ஆட்சிப் பொறுப்பை அதிகார அமைப்பிலிருந்து சட்டமன்றங்களுக்கு மாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரண்டாவது வட்டமேசை மாநாடு (செப்டம்பர் - டிசம்பர், 1931)
தொகுகாந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதால், இந்திய தேசிய காங்கிரசு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது. மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு உள்ளிட்டோர் காங்கிரசு பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். செப்டம்பர் 7, 1931ல் மாநாடு தொடங்கியது. அம்பேத்கர் ஏற்கனவே முசுலிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு கொடுக்கபப்ட்டது போன்று தலித் மக்களுக்காக தனித் தொகுதிகளும், தனி வாக்குரிமையும் வேண்டுமெனக் கோரினார். ஆனால் காந்தி இதற்கு ஒப்பவில்லை. அதே போன்று பிற சிறுபான்மையினருக்கும் தனித் தொகுதிகள் வேண்டாமென்று வற்புறுத்தினார். இதனை பிற இந்திய கட்சிகளும் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தன. மேலும் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தொழிலாளர் கட்சி அரசு கவிழ்ந்து அனைத்து கட்சி தேசிய அரசு உருவானது. இந்த அரசியல் குழப்பங்கள், பெரும் பொருளியல் வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதாரக் குழப்பங்களால் பிரித்தானியத் தரப்பினால் இந்திய விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.
மூன்றாவது வட்டமேசை மாநாடு (நவம்பர் - டிசம்பர், 1932)
தொகுஇறுதி வட்ட மேசை மாநாடு நவம்பர் 17, 1932ல் தொடங்கியது. காங்கிரசும் பிரித்தானிய தொழிலாளர் கட்சியும் இதில் பங்கு கொள்ள மறுத்து விட்டன. பிற தரப்புகளிலிருந்து 46 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.