இந்திய வெள்ளை மீன்கொத்தி

பறவை துணை இனம்

இந்திய வெள்ளை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Ceryle rudis leucomelanurus) என்பது வெள்ளை மீன்கொத்தியின் துணை இனம் ஆகும்.[1] இது கிழக்கு ஆப்கானித்தான் இந்தியா வழியாக தெற்கு சீனா மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது.

இந்திய வெள்ளை மீன்கொத்தியில் ஆண் பறவை
இந்திய வெள்ளை மீன்கொத்தியில் பெண் பறவை

விளக்கம்

தொகு

இந்திய வெள்ளை மீன்கொத்தியானது மைனாவைவிடச் சற்றுப் பெரியது. சுமார் 2 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பு நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் கறுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் தலை, பிடரி, பக்கங்கள் ஆகியன கறுப்பாக வெள்ளைச் சிறு கோடுகளுடன் காட்சியளிக்கும். உடலின் மேற்பகுதி கருப்பாகப் பக்கங்களில்வெண் கோடுகளோடு காட்சியளிக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். கழுத்தின் பக்கங்களில் வெண் கோடுகளுடனும் வயிற்றின் பக்கங்களில் வெள்ளைக் கறைகளுடனும் காணப்படும். மார்பில் அகன்ற கறுப்பு வளையம் காணப்படும். வயிற்றில் குறுகிய கருப்பு வளையம் இடம் பெற்றிருக்கும். வால் வெண்மையாக அகன்ற கறுப்புப் பட்டையுடன் இருக்கும்.[2]

பெண் பறவை தோற்றத்தில் ஆணை ஒத்தே இருக்கும் என்றாலும் அதன் மார்பில் தெளிவற்ற முறிந்த ஒரு கறுப்பு வளையம் மட்டுமே காணப்படும்.

பரவலும் வாழிடமும்

தொகு

இந்திய வெள்ளை மீன்கொத்தி கிழக்கு ஆப்கானித்தான் இந்தியா வழியாக தெற்கு சீனா மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் கேரளம் நீங்கலாக நீர்வளம் மிக்கப் பகுதிகளில் காணப்படுகிறது.

நடத்தை

தொகு

இந்திய வெள்ளை மீன்கொத்தியானது நீர் வளம் மிக்க பகுதிகளில் உள் நாட்டிலும் கடற்கரையினைச் சார்ந்தும் தனித்தோ, இணையாகவோ காணப்படுகிறது. இப்பறவை மீன் பிடிக்கும் முறை தனிச்சிறப்பானது. நீர்ப்பரப்பின் மேலே சுமார் 10 மீட்டர் உயரத்தில், இறக்கைகளை விரைவாக அடித்தபடி முன்னும் பின்னும் செல்லாமல் உலங்கு வானூர்தி போல அந்தரத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி நீர்ப்பரப்பை ஆராயும். அதற்காக வலை அசைத்தும் தலையை மேலும் கீழும் ஆட்டியும் தன் நிலையினைச் சரிசெய்து கொள்ளும். நீரில் மீன் தென்பட்டவுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு செங்குத்தாக நீரில் பாய்ந்து தன் நீண்ட அலகால் மீனைப் பிடித்துக் கொண்டு வெளியேறும். பெரும்பாலும் இப்பறவை தன் இலக்கில் இருந்து தவறுவதில்லை. அலகால் மீனைப் பிடித்த பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து மீனை விழுங்கும். இதன் முதன்மையான உசவாக தவளை, மீன் போன்றவை உள்ளன.[2]

நீர்ப் பரப்பின் மீது இடம் விட்டு இடம் பெயரும்போது சீரி..ர்...ச்சீர்...ர் என கத்தியபடி பறக்கும்.

இனப்பெருக்கம்

தொகு

இப்பறவைகள் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கிணறு. ஏரி, ஆறு ஆகியவற்றின் கரைகளில் ஆழமாக வங்கு குடைந்து அதில் அறை அமைத்து முட்டையிடுகின்றன. ஆண் பெண் பறவைகள் என இரண்டும் இணைந்தே வாங்கு குடையும். இரு பறவைகள் இணைந்தே குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. நான்கு முதல் ஆறு வெண்மையான முட்டைகளை கூட்டில் பெண்பறவை இடுகின்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 292–293.