இந்து சமயத்தில் நேர்த்திக்கடன்

இந்து சமயத்தில் நேர்த்திக்கடன் என்பது பக்தர்கள், இறைவனிடன் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பின் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். இந்த நேர்த்திக்கடனானது பொருள்களைக் காணிக்கையாக செலுத்துவது, நிலங்களை இறைவன் பெயருக்கு எழுதிதருவது, ஆபரணங்களை செய்து தருவது, கால்நடைகளை கோயிலுக்கு தருவது என பல்வேறு வடிவங்களில் செலுத்தப்படுகிறது.

பூ மிதித்தல், அக்னிச்சட்டி, எடுத்தல், அலகு குத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற தங்களை வருத்திக்கொள்ளும் சடங்குகளையும் நேர்த்திக்கடனாக செய்கின்றனர்.

பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக்கடன் தொகு

பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கின்றன. திருக்கல்யாணம் செய்வித்தல், அபிசேக ஆராதனை செய்வித்தல், ஆடை ஆபரணங்களை வணங்குதல், தங்க வெள்ளி கவசங்களை அணிவித்தல், வடைமாலை சாற்றதல் போன்ற பல நேர்த்திக்கடன்கள் உடல் துயருராத வண்ணம் உள்ளன.

பெரு தெய்வ நேர்த்திக்கடன்களில் பிரதட்சணம் செய்தல், கிரிவலம் வருதல், தேர் இழுத்தல் போன்ற சில நேர்த்திக்கடன்கள் உடலை வருத்தக்கூடியவையாக உள்ளன.

வகைகள் தொகு

இவ்வகையான நேர்த்திக் கடன்களை மூன்றாக பிரித்துக் கொள்கின்றனர். [1]

  1. உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்
  2. பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
  3. உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்

உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள் தொகு

சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன.[1]

  • அரிவாளின் மேல் நடத்தல்
  • அலகு குத்துதல்
  • ஆணிச் செருப்பு அணிதல்
  • முள் படுக்கை
  • மார்பில் கத்தி போடுதல்
  • தீச்சட்டி எடுத்தல்

பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள் தொகு

  • அங்கமளித்தல் - கண்மலர், கை, கால் போன்ற உலோக அங்கங்களை செலுத்துதல்
  • கால்நடை அளித்தல் - ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை கோயிலுக்கு அளித்தல்
  • கோவில் மணி கட்டுதல் - வேண்டுதலுக்கு தக்கபடி சிறிய, பெரிய மணிகளை கோவிலில் கட்டுதல்
  • வேல் வாங்கி செலுத்துதல் - வேல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கோயிலுக்கு அளித்தல்
  • தொட்டில் கட்டுதல் - குழந்தை வரம் வேண்டி பால் மரங்களில் தொட்டில் கட்டுதல்.
  • மண்பொம்மை செலுத்துதல் - மண்குதிரை, கன்றுடன் கூடிய பசு போன்ற மண்பொம்மைகளை கோயிலில் வைத்தல்
  • உருவ பொம்மை செலுத்துதல் - தவழும் குழந்தை, ஆண்-பெண் பொம்மை போன்றவற்றை கோயிலில் செலுத்துதல்


உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள் தொகு

  • நரபலி தருதல் - மனிதர்களை பலி தருதல்.
  • கன்னிபெண் பலி -
  • நவகண்டம் செலுத்துதல்
  • சூல்பலி - கருவுற்று இருக்கும் ஆடு, மாடு, பன்றி போன்ற உயிர்களை பலியிடுதல்
  • பலியிடுதல் - ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை வெட்டி பலியிடுதல். சில இடங்களில் பன்றி போன்ற விலங்குகளிலும் பலியிடப்படுகின்றன.
  • குருதி கொடுத்தல்
  • கோழி குத்துதல் - கோழியை கோயிலின் முன்னுள்ள வேலில் உயிரோடு குத்துதல்.

காலக்கெடு தொகு

இந்து சமயத்தில் எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. [2] கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.

நேர்த்திக்கடனை மறத்தல் தொகு

நேர்த்திக்கடனை வேண்டிக்கொண்டு கோரிக்கை நிறைவேறிய பிறகு அலட்சியம் காரணமாக நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தாலோ, மறந்து விடுபட்டாலோ துன்பம் நேரும் என நம்புகிறார்கள். இவ்வாறு மறந்த நேர்த்திக்கடனால் எதிர்பாராத விபத்துகள் நேரலாம் என்றும், பொருள் தொலைந்து போகலாம் என்றும் நினைக்கிறார்கள். சிலருக்கு மறந்து போன நேர்த்திக்கடனை தெய்வம் கனவில் வந்து நினைவுபடுத்துவதாக நம்புகிறார்கள்.

நேர்த்திக் கடன் செய்யத் தவறினால் ஒருவித தோசம் ஏற்படுவதாக சோதிட சாத்திரங்கள் கூறுகின்றது. [3] இந்த தோசம் நீங்க வேண்டியவரின் குலதெய்வம் கோயிலுக்கு ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து சென்று வழிபட வேண்டும். அவர்களின் குல தெய்வ வழக்கப்படி பட்டு துணிகளை சாமிக்கு தந்து, பொங்கலிட்டு வழிபட்டால் தோசம் நீங்கும் என்கின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தமிழாய்வு தளம்
  2. "நேர்த்திக் கடனை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்?". தினமலர்.
  3. "நேர்த்திக் கடன் செய்ய மறந்தவர்களா நீங்கள்?". Dinamani.

வெளி இணைப்புகள் தொகு

தொடர்ந்து 5 வருடங்களாக ஆடி மாதத்தில் தொடர் மரணங்கள் நிகழும் கிராமம்- நேர்த்திக்கடன் செய்த கிராம மக்கள் - மாலை மலர், 25 ஆகஸ்ட் 2022