இயன்மொழி என்பது புறப்பொருள் பாடாண் திணையில் வரும் ஒரு துறை. புறநானூற்றில் உள்ள 400 பாடல்களில் இத் துறையைச் சேர்ந்த பாடல்கள் 57 உள்ளன.[1]

துறை விளக்கம் தொகு

தொல்காப்பியம் இதனை, ‘அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்து’ எனக் குறிப்பிடுகிறது.[2]

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் பாடாண் படலத்தில் வரும் 48 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது. இத்துறை இந்த நூலில் இரண்டு நூற்பாக்களில் விளக்கப்படுகிறது. முதல் நூற்பா “இவர் எமக்கு இது கொடுத்தார். அதுபோல நீயும் கொடு” என வள்ளலை வேண்டுவது இயன்மொழி என்னும் துறை என்கிறது.[3] இரண்டாவது நூற்பா மன்னவனின் இயல்பை மொழிவதும் அத்துறை என்கிறது.[4]

புறநானூற்றிலுள்ள இத் துறைப் பாடல்கள் இந்த வரம்பில் நிற்கவில்லை. பாட்டுடைத் தலைவனின் இயல்புகளைக் கூறுகின்றன.

வேந்தர் இயல்புகள். தொகு

  • பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர் நிகழ உள்ளது. ஆ, ஆப்போல் இயல்புள்ள பார்ப்பார், பெண்டிர், பிணியுடையார், புதல்வர்ப் பெறாத மணமக்கள் ஆகியோர் பாதுகாப்புள்ள இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் – என்று கூறுதல் இவன் இயல்பு.[5] பகைவர்க்கு இன்னா செய்து கொண்டுவந்த செல்வத்தால் பாணர்க்கு இனிய செய்வது இவன் அறம் [6] இவனது வெற்றித் தூண்கள் பலவா? வேள்வித் தூண்கள் பலவா? எனத் தெரியவில்லையாம் [7]
  • சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பகைவர் பணிந்தால் தண்டம் தவிர். – இவனுக்கு அறிவுரை [8]
  • சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி வழங்கிய அணிகலன்களைப் பெற்றவர்களுக்கு அவற்றை அணிந்துகொள்ளக்கூடத் தெரியவில்லையாம்.[9]
  • சோழன் நலங்கிள்ளி ஞாயிற்று வழித்தடம், ஞாயிற்றின் ஈர்ப்புவிசை, ஞாயிறு சூழ்ந்த மண்டிலம், காற்று உலவும் திசை, காற்று இல்லாத (ஆ)காயம் இவற்றையெல்லாம் அளந்தாலும் புகார்க் கப்பல்துறை அரசனாகிய நலங்கிள்ளியின் பெருமையை அளக்கமுடியாது.[10] நலங்கிள்ளி பூவா வஞ்சியும், மாட மதுரையும் தருகுவன்.[11] சோழன் நலங்கிள்ளி எல்லாரும் உறங்கும் வைகறை விடியலில் வழங்கினான்.[12]
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சான்றோர் செய்த நன்று(அறம்) உண்டாயின் இவன் வாழவேண்டும்.[13] விரும்பினால், ஞாயிற்றில் நிலவும், திங்களில் வெயிலும் விளைவிக்க வல்லவன்.[14] புறாவுக்காகத் துலாக்கோலில் ஏறியவனின் (சிபி) வழிவந்த இவனுக்கு அறம் பெருமை தராது.[15]
  • கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் அன்னச் சேவலிடம் கோப்பொருஞ்சோழனின் இயல்பைக் கூறுகிறார். ‘பிசிராந்தை வளர்க்கும் அன்னம்’ என்று கூறினால் அதன் பேடைக்கும் அணிகலன் தருவானாம்.[16] கோப்பெருஞ்சோழன் பாணர் பசிப்பகையாக விளங்கியவன்.[17] பிசிராந்தையார் வாழ்ந்த பிசிர் என்னும் ஊரில் அவரைக்காய் பறிப்போருக்கு ஆய்மகள் புளிச்சோறு வழங்குவாளாம். கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் 215,
  • சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் இவனது கை வழங்கி வழங்கி வலிமை வெற்றுள்ளன. இவனைப் பாடுவோர் கைகள் இவன் உணவை உண்டு உண்டு மென்மை ஆகிவிட்டன.[18]
  • சேரமான் கோக்கோதை மார்பன் கோதையை நாடன் என்கோ, ஊரன் என்கோ, சேர்ப்பன் என்கோ? எல்லாம் அவன் நாடு.[19]

கடையெழு வள்ளல்களின் இயல்புகள் தொகு

  • அதியமான் ஔவையார் தன் பாடல் அதியமானுக்குக் குழந்தையின் மழலை போல இனிக்கிறது என்கிறார்.[20] அதியமானுக்கு இரண்டே பகை. ஒன்று அவன் மகளிர் அவனைக் கண்ணால் கட்டிப்போடுவார்கள். மற்றொன்று அவனது பகைநாடு நடுங்கும்.[21] அதியமானுக்குத் திறை கொடுத்துவிடுங்கள் என அவனது பகைவருக்கு ஔவையார் அறிவுறுத்துகிறார்.[22] அதியமான் முழுநிலா போல ஒளி தருவதால் அவன் நாட்டு மக்களுக்கு இருளே இல்லையாம்.[23] கடவுளுள் எருக்கம் பூவையும் ஏற்பார். அதுபோல அதியமான் ஏதும் அறியாத மடவர்களையும் பேணுவான்.[24] அதியமான் நெல்லைப் போரோடு வழங்குவான்.[25]
  • ஆய் வள்ளலின் வளங்களை ஆடுமகள் எடுத்துக்கொள்ளலாமாம். மன்னர்கள் நெருங்கவும் முடியாதாம்.[26] ஆய் கொடையாக வழங்கிய யானைகள் வானத்து மீனினும் பலவாம்.[27] ஆய் நாட்டில் ஒரு யானை பத்துக் குட்டி போடுமோ என ஐயுறும் அளவுக்கு யானைகளை வழங்குகினானாம் [28] ஆய் நாட்டுக் காடுகளில் யானைகள் மிகுதி. அந்தக் காடுகள் அவற்றை ஆய் வள்ளலைப் பாடிப் பெற்றனவோ என்று புலவர் ஆய் வள்ளலின் கொடைத்திறத்தைப் பாராட்டுகிறார்.[29] வடதிசையில் இமயமலை. அதற்கு இணையாகத் தென்திசையில் ஆய்-குடி. இவன் குடும்பம் இல்லாவிட்டால் உலகம் சாய்ந்துடக்கூடும். என்னும் அளவுக்கு ஆய் அரச மரபு பெருமை பெற்றிருந்தது.[30] இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் என்று அறத்தை விற்கும் வணிகன் ஆய் அல்லன்.. அறம் சான்றோர் நெறி என எண்ணிக்கொண்டு செய்தான்.[31]
  • ஓரியிடம் கலனும், கண்ணியும், களிறும் பெற்று இரவலர் தன் ஆடல்பாடல்களையே மறந்துவிட்டனராம்.[32]
  • காரியை (மலையமான் திருமுடிக் காரியை)த் தனக்குத் துணைநிற்கும்படி மூவேந்தரும் வேண்டுவர்.[33] காரி வழங்கிய தேர்கள் மழைத்துளியினும் அதிகம்.[34] காரி எப்போது சென்றாலும் அருவி போல் வழங்குவான்.[35]
  • நள்ளி பேணுவதால் பாணர் மாலையில் மருதப் பண்ணும், காலையில் செவ்வழிப் பண்ணும் பாடும் பழக்கத்தையே மறந்துவிட்டார்களாம்.[36] காட்டில் தன் மணியாரத்தை வழங்கிய நள்ளி புலவர்க்குத் தன் பெயரைச் சொல்லாமல் மறைத்துவிட்டானாம்.[37]
  • பாரி ஒருவன் மட்டுமா வள்ளல்! மழையும் இருக்கிறதே! [38] பரிசிலர் கேட்டால் பாரி தன்னையே தருவான்.[39]
  • பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்.[40]

குறுநில மன்னர் இயல்புகள் தொகு

  • ஆதனுங்கன் ஆற்றுத்துறை போல அறத்துறையாக விளங்கினானாம்.[41] வறியவர்கள் வருவார்களா என ஏங்கியவன்.[42]
  • இளவிச்சிக்கோ புலவர்க்குக் கதவு அடைத்த விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோவை புலவர் பெருந்தலைச் சாத்தனார் தழுவாமல் புறக்கணித்தார்.[43]
  • ஏறைக்கோன் தம்மவர் தவறு செய்தால் ஏறைக்கோன் பொறுத்துக் கொள்வானாம். பிறர் வறுமையில் வாடினால் தான் நாணுவானாம்.[44]
  • ஓய்மான் நல்லியாதன் இரவிலும் கொடை வழங்குவான்.[45]
  • கரும்பனூர் கிழான் ‘அறத்துறை’ அம்பி போல் உதவுவான்.[46]
  • கொண்கானங் கிழான் நாட்டுக்கு இரண்டு வளம். ஒன்று இரவலர்க்கு வழங்கிக்கொண்டே இருத்தல். மற்றொன்று திறை வாங்கிக்கொண்டே இருத்தல்.[47]
  • சிறுகுடி கிழான் பண்ணன் (சோழநாடு) பசிப்பிணி மருத்துவனாம்.[48]
  • சிறுகுடி கிழான் பண்ணன் (பாண்டிநாடு) ‘இடுக்கண் இரிய’ வழங்கியவன்.[49]
  • நல்லியக்கோடன் சீறியாழ்ப் பாணரின் வறுமையைப் போக்கும் புகழ்மலையாம்.[50]
  • நாஞ்சில் வள்ளுவன் குளநீர் பாயும் வயலில் இட்ட விதை வறட்சியில் சாவாதது போல நாஞ்சில் வள்ளுவன் புலவரைக் காப்பாற்றுகிறான்.[51]
  • நாஞ்சில் வள்ளுவன் நண்பர்களுக்கு உள்ளங்கை போல உதவுவானாம்.[52]
  • பிசிராந்தையார் தன் பெயரைப் ‘பேதைச் சோழன்’ எனச் சொல்லிக்கொள்வது பிசிராந்தையாரின் நட்புப் பண்பாம்.[53]
  • பிட்டங் கொற்றன் ஈயா மன்னர் நாண வழங்கும் இயல்புடையவன் பிட்டங்கொற்றன்.[54] ‘முன்னே தந்தேன்’ என்னாது நாள்தோறும் சென்றாலும் வழங்குவான்.[55] பிட்டங் கொற்றனும், அவன் அரசன் கோதையும் இருப்பதால் விறலியருக்குக் கவலையே இல்லையாம்.[56]
  • மல்லி கிழான் காரியாதி (குடநாடு) குடநாட்டு மல்லி கிழான் காரியாதி மான் கறியைச் சுட்டு வருபவர்க்கெல்லாம் வழங்குவானாம்.[57]

அடிக்குறிப்பு தொகு

  • எண்கள் புறநானூற்றுப் பாடல் எண்களைக் குறிப்பன.
  1. 8, 9, 10, 12, 14, 15, 17, 22, 30, 32, 34, 38, 39, 49, 67, 92, 96, 97, 102, 106, 107, 108, 122, 123, 124, 128, 129, 130, 131, 132, 134, 137, 142, 149, 150, 151, 153, 156, 157, 168, 171, 172, 173, 175, 176, 177, 212, 215, 2016, 376, 378, 380, 381, 388, 389, 390, 400
  2. தொல்காப்பியம் புறத்திணையியல் 87
  3. இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்
    அன்னோர் போல அவை எமக்கு ஈகு என
    என்னோரும் அறிய எடுத்து உரைத்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை 194
  4. மயலறு சீர்த்தி மான்தேர் மன்னவன்
    இயல்பே மொழியினும் அத்துறை ஆகும் - புறப்பொருள் வெண்பாமாலை 195
  5. 9
  6. 12
  7. 15,
  8. 10
  9. 378,
  10. 30,
  11. 32,
  12. 400
  13. 34,
  14. 38,
  15. 39,
  16. 67,
  17. 212,
  18. 14
  19. 49,
  20. 92,
  21. 96,
  22. 97,
  23. 102,
  24. 106,
  25. 390,
  26. 128,
  27. 129,
  28. 130,
  29. 131,
  30. 132,
  31. 134,
  32. 153,
  33. 122,
  34. 123,
  35. 124,
  36. 149,
  37. 150,
  38. 107,
  39. 108,
  40. 142,
  41. 175,
  42. 389,
  43. 151,
  44. 157,
  45. 376,
  46. 381,
  47. 156,
  48. 173,
  49. 388,
  50. 176,
  51. 137,
  52. 380,
  53. 216,
  54. 168,
  55. 171,
  56. 172,
  57. 177,
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்மொழி&oldid=2505207" இலிருந்து மீள்விக்கப்பட்டது