இயேசுவின் திரு இதயம்

இயேசுவின் திரு இதயம் அல்லது இயேசுவின் மிகத் தூய இதயம் என்பது இயேசு கிறித்துவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும்.[1] மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் இயேசுவின் ஆவல் மற்றும் கையளிப்பை தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. கத்தோலிக்க திருச்சபையில் மிகவும் புகழ்பெற்ற பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் கழித்து வரும் வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இதயத்துக்கு பெருவிழா கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் திரு இதயம்
இயேசுவின் திரு இதயத்தை சித்தரிக்கும் ஓவியம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
திருவிழாபெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் பிறகு (வெள்ளிக்கிழமை)
சித்தரிக்கப்படும் வகைபற்றியெரியும் தீயுடன் கூடிய முள்முடி சூழ்ந்த இதயம்
பாதுகாவல்செப அப்போஸ்தலர்

கடவுளின் அன்பு தொகு

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்"[2] என்று இயேசு கிறிஸ்து கூறினார். "கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம்"[3] என்று திருத்தூதர் யோவான் குறிப்பிடுகிறார். மனிதரின் மீட்புக்காக இறைமகன் இயேசு மனிதராகி பாடுகளை ஏற்று சிலுவையில் இறந்ததால், அவரது அன்பின் மேன்மை வெளிப்பட்டது. குத்தி திறக்கப்பட்ட இயேசுவின் இதயத்தில் இருந்து வெளிவந்த இரத்தமும் தண்ணீரும்[4] அவரது அன்பை பறைசாற்றுகின்றன.

இயேசுவின் காட்சி தொகு

 
புனித மார்கரெட்டுக்கு இயேசு கிறிஸ்துவின் காட்சி.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விசிட்டேசன் சபை துறவியான மார்கரெட் மரி அலக்கோக், 1673 டிசம்பர் 27ந்தேதி அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் இயேசு கிறிஸ்துவின் முதல் காட்சியைக் கண்டார். அப்போது, தமது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக மார்கரெட்டை இயேசு கிறிஸ்து தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.[5] மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார்.

இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.[6] தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்ட விதத்தில் முதல்முறையாக இயேசுவின் திரு இதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திரு இதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.[7]

பக்தி வளர்ச்சி தொகு

ஜெர்மனி நாட்டு பெனடிக்டைன் துறவிகளான ஹாக்கேபோர்னின் புனித மெக்தில்து[8] (1241-1298), ஹேல்ப்தாவின் புனித பெரிய ஜெர்த்ருத்[9] (1256 – c. 1302)) ஆகியோர் 13ஆம் நூற்றாண்டிலேயே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்ததாக அறிகிறோம். 1353ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் இன்னொசென்ட், இயேசுவின் திரு இதய மறைபொருளை சிறப்பிக்கும் திருப்பலியை உருவாக்கினார்.[10] இருப்பினும் சில நூற்றாண்டுகளாக, துறவற சபைகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்து வந்தனர்.

இந்நிலையில்தான், 17ஆம் நூற்றாண்டில் மார்கரெட்டுக்கு இயேசு கிறிஸ்து தமது இதய பக்தியைப் பரப்புமாறு காட்சி அளித்தார். மார்கரெட் கண்ட காட்சிகளைத் தொடர்ந்து, இயேசுவின் திரு இதய ஓவியம் வரையப்பட்டு அதன் பக்தி முயற்சி விரைவாக பல இடங்களுக்கும் பரவியது. 1693ல் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்புவோருக்கு கத்தோலிக்க தலைமைப்பீடம் ஞானப் பலன்களை அறிவித்தது. 1720ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மார்செயிலே பகுதியில், முதன்முதலாக இது பொதுமக்களின் பக்திமுயற்சியாக உருபெற்றது. 1765ல் இயேசுவின் திரு இதய விழாவை பிரான்சில் கொண்டாட வத்திக்கான் அனுமதி வழங்கியது.

விழா கொண்டாட்டம் தொகு

1856ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு ஆயர்களின் கோரிக்கையை ஏற்று, இயேசுவின் திரு இதய விழாவை கத்தோலிக்க திருச்சபை முழுவதும் நவம்பர் 20ந்தேதி கொண்டாடும் வகையில் திருத்தந்தை 9ம் பயஸ் நிறுவினார். 1889ல், இந்த திருநாள் இரட்டைச் சடங்குடன் கூடிய முதல் வகுப்பு விழாவாக உயர்த்தப்பட்டது. 1899ஆம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ, மனித குலத்தை இயேசுவின் திரு இதயத்துக்கு அர்ப்பணிக்கும் சுற்றுமடலை வெளியிட்டார். முதல் வெள்ளிக்கிழமை, ஜூன் மாதம் ஆகியவற்றில் இயேசுவின் திரு இதய பக்தியை சிறப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றுமடல் வழியாக திருத்தந்தை வலியுறுத்தினார்.

இயேசுவின் திரு இதய விழா நிறுவப்பட்டதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி 1956 மே 15ந்தேதி, இந்த பக்தியைக் குறித்து விளக்கும் 'ஊற்றுக்களிலிருந்து முகர்வீர்கள்' என்ற சுற்றுமடலை திருத்தந்தை 12ம் பயஸ் வெளியிட்டார். 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் நாள்காட்டியில், பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமையில் இயேசுவின் திரு இதயப் பெருவிழா நிறுவப்பட்டது. இயேசு கிறிஸ்து மார்கரெட்டுக்கு அறிவுறுத்திய வண்ணமே திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. http://www.tamilcatholic.de/spritualTour/individual/16.html
  2. யோவான் 3:16
  3. 1 யோவான் 3:16
  4. யோவான் 19:34 படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
  5. Ann Ball, 2003 Encyclopedia of Catholic Devotions and Practices ISBN 0-87973-910-X page 240
  6. Oxford Dictionary of the Christian Church (Oxford University Press 2005 ISBN 978-0-19-280290-3): article Margaret Mary Alacoque, St
  7. Catholic Online: St. Margaret Mary Alacoque
  8. "Bergström-Allen, T.O.C., Johan. "Carmelites and the Sacred Heart"" (PDF). Archived from the original (PDF) on 2016-04-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-08.
  9. ""St. Gertrude the Great", Catholic News Service". Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2018-05-08.
  10. Saunders, William. "The Sacred Heart of Jesus", The Arlington Catholic Herald, October 13, 1994
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவின்_திரு_இதயம்&oldid=3543921" இலிருந்து மீள்விக்கப்பட்டது