இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)

சங்க நூலான பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.

பதிகம்

தொகு

பதிற்றுப்பத்து தொகுப்பினைச் செய்த புலவர் பாடல் பாடப்பட்ட காலத்தவர் அன்று. அவர் தாம் அறிந்த செய்திகளையும், பாடலிலுள்ள செய்திகளையும் இணைத்து ஒவ்வொரு 10 பாட்டுக்கும் பதிகம் வழங்கியுள்ளார். இவர் சங்கம் மருவிய காலத்தவர். இவர் தரும் செய்திகள் இவை.

பாடிய புலவர்

தொகு

இதில் உள்ள 10 பாடல்களைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார்.

பாடப்பட்ட அரசன்

தொகு

இமயவரம்பன்(இமையவரம்பன்) நெடுஞ்சேரலாதனைப் பற்றிய செய்திகள் இதில் உள்ளன.

அரசனின் தந்தை

தொகு

நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ் சேரல்.

அரசனின் தாய்

தொகு

தாய் நல்லினி. இந்த நல்லினி வெளியன் வேள் என்பவனின் மகள்.

அரசனின் தம்பி

தொகு

பல்யானைச் செல்கெழு குட்டுவன் இமயவரம்பனின் தம்பி என்று மூன்றாம் பத்துத் தெகுப்பிலுள்ள பதிகம் கூறுகிறது.

புலவருக்கு அரசன் வழங்கிய பரிசில்

தொகு

இவனைப் பாடிப் புலவர் பெற்ற பரிசில்
உம்பற்காடு நிலப்பகுதியிலிருந்த 500 ஊர்களைப் பிரமதாயம் என்னும் கொடையாக நல்கினான். அத்துடன் தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தென்னாடு நிலப்பகுதியிலிருந்து வரும் வருவாயைப் பாகம் போட்டு ஒரு பாகத்தைப் புலவருக்கு வழங்கினான்.

பாடல் தரும் செய்திகள்

தொகு

பாடல் 11

தொகு

காற்று கடலுள் புகுந்து நீரை அள்ளிக்கொண்டு மேகமாக உலவும். [1] முருகப் பெருமான் கடலுக்குள் சூரனை அழித்தபோது [2]கடலே செந்நிறம் பெற்றது. இந்த நெடுஞ்சேரலாதன் மேகம்போல் படையுடன் சென்றான். முருகனைப் போலப் பகைவரைக் கொன்று உப்பங்கழிகளையெல்லாம் குங்குமம் கரைத்தது போலச் செந்நிறமாக்கினான். கடற்கொள்ளையர் கடம்பர் பகையை முடித்தபோது இந்த நிலை. கடம்பர் என்னும் கொள்ளையரின் காவல்மரம் கடம்பு. இந்தச் சேரன் வெட்டிக் கொண்டுவந்த கடம்ப மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான். இந்த வெற்றிப் பெருமிதத்தோடு யானைமீது வந்த அரசனைக் கண்டு புலவர் வாழ்த்துகிறார். முருக்கமரம் பூத்திருக்கும் மலைக்காட்டில் தூங்கும் கவரிமான் வயல் வெளியில் வளர்ந்திருக்கும் நரந்தம்புல்லை மேயக் கனவு காண்பது போல், இமயத்தில் இருந்துகொண்டு குமரியைக் கைப்பற்றக் கனவு கண்டுகொண்டிருந்த மன்னர்களையெல்லாம் வென்று அந்த நிலப்பரப்புகளிலெல்லாம் தன் புகழ் பரவும்படி செய்தான்.

பாடல் 12

தொகு

கடம்பரின் கடம்பு மரத்தை அடியோடு சாய்த்து கடற்கொள்ளை இல்லாமல் செய்தான். அரிமான் சிங்கம் நடமாடும் இடங்களுக்குப் பிற விலங்கினம் செல்லாதது போல் அவன் நாட்டுக்குள் பிற மன்னர் நுழைவதில்லை. இது அவன் பெற்றிருந்த புகழ்ச்செல்வம். இது கேட்பதற்குத்தான் இனிக்கும். அவன் ஆட்சியில் நுகர்வதற்கு இனியதும் உண்டு. வறுமையில் வாடும் புலவருக்கும் அவரது குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான வாழ்வைத் தந்தது. களிறு தன் பிடியையும் கன்றையும் மொய்க்கும் மிஞிறுகளை ஓப்பிப் பேணும் காடுகளைக் கடந்து புலவர் வந்தாராம். வந்தவர்களுக்குப் பலநாள் பட்டினி கிடந்த தொல்பசியாம். அதனைப் போக்க ஆட்டுக்கறிக் குழம்பு ஊற்றி அரிசிச்சோறு படைத்தானாம். பருகுவதற்குத் தேறல் தந்தானாம். நனைந்த பருந்தின் சிறகு போல் கிழிந்துபோயிருந்த ஆடைக்கு மாற்றாடையாகப் பட்டாடை தந்தானாம். புலவர் மகளிர் அணிந்துகொள்ள அணிகலன்கள் தந்தானாம். அரசனும் அவன் சுற்றமும் இவற்றைத் தந்து புலவர் மகிழ்வதைக் கண்டு மகிழ்ந்ததாம். இப்படி மகிழ்வதைப் 'பெருங்கலி மகிழ்வு' என்றனர்

பாடல் 13

தொகு

சேரலாதன் போரிடுவதற்கு முன் போரிட்ட பகைவர் நாடு எப்படி இருந்தது, போர் முடிந்த பின்னர் என்னவாயிற்று, சேரலாதன் பேணிக் காக்கும் நாட்டின் நிலை என்ன என்னும் மூன்று வகையான செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இதில் சொல்லப்படும் செய்திகள் நிலவியல் கண்ணோட்டத்தில் அமைந்துள்ளன. நிலத்தின் 1 இயல்பு-நிலை, 2 அழிவு-நிலை, 3 பாதுகாப்பு-நிலை எப்படி இருக்கும் என்று காட்டப்படுகிறது. 1 இயல்பு-நிலை; கிடை நின்ற நன்செய்யில் ஆரல்மீன் பிறழும். காளைகள் போரிட்டுக்கொண்ட இடங்களில் உழாமலேயே விதைப்பர். வயலில் மேயும் எருமைகள் கரும்பை விரும்பாமல் அங்குப் பூத்திருக்கும் நெய்தலை மேயும். புல்லை மேயமுடியாத முதிர்ந்த பசுக்கள் மகளிர் துணங்கை ஆடும்போது அவர்கள் தலையிலிருந்து உதிர்ந்த ஆம்பல் பூக்களை மேயும். பொய்கைப் புனல் பாயும் வாயிலில் மருதும் தென்னையும் வளர்ந்தோங்கி நிற்கும். 2 அழிவு-நிலை; எங்கும் அழிவு. எங்கும் அச்சம். கூற்றுவன் உயிரைக் கொண்டுபோன பின்னர் கிடக்கும் உடல் போல நிலம் கிடந்தது. கரும்பு வயல் சப்பாத்திக் காடு ஆயிற்று. மகளிர் துணங்கை ஆடிய இடங்களில் இரட்டைத்தலைப் பேய்கள் கழுதுப் பேய்களின் மேல் ஏறிக்கொண்டு திரிந்தன. நீரோடிய பொய்கை வாயில்களில் நெருஞ்சி முள்ளும், ஊமத்தஞ் செடிகளும் மண்டிக் கிடந்தன. 3 பாதுகாப்பு-நிலை; காட்டில் முனிவர் தவம். அருகில் மகளிரொடு உழுதுண்ணம் மள்ளர் வாழ்க்கை. விளைச்சல் மிகுதியால் தானியம் விற்போர் அங்கு வருவதில்லை.பருவம் தவறாத மழை. நோய் இல்லை. பசி இல்லை. மனமும் வளமும் எங்கும் மலர்ந்து கிடந்தன.

பாடல் 14

தொகு

சேரலாதனைப் புகழ்ந்து கூறி வாழ்த்தும் செய்திகள் இதில் உள்ளன. நிலம், நீர், காற்று, விண் என்னும் நான்கையும் போல் அளக்க முடியாதவன். நாள் என்னும் தன்னொளி விண்மீன்கள், கோள் என்னும் ஒளிவாங்கி மின்கள், நிலா, ஞாயிறு, தீ என்னும் ஐந்தும் ஒருங்கிணைந்து தரும் ஒளியைப் போல் புகழ்-ஒளி தருபவன். நூற்றுவரோடு சேர்ந்து போரிட்ட கன்னன் போல் கொடையாளி. கூற்றுவன் போலத் தோல்வி காணாதவன். சாவுக்கு அஞ்சாதவன். தன் படைக்குக் கவசம் போன்றவன். தன் மனைவிக்கு நல்ல கணவன்.

பாடல் 15

தொகு

கொடைவிழா நடத்திப் புகழ் பெற்றவன் நெடியோன்(முந்நீர் விழவின் நெடியோன்). அந்த நெடியோனைப் போலப் புகழ் பெற்றவன் இந்தச் சேரலாதன். இவனது பகைநாட்டு அழிவையும், இவன் காப்பாற்றும் நாட்டு நலத்தையும் இப் பாடல் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

பாடல் 16 - 'துயிலின் பாயல்'

தொகு

பென்னில் மணி பதித்துச் செய்யப்பட்ட 'எழுமுடி' என்னும் அணியைச் சேரலாதன் தன் மார்பில் ஆணிந்திருந்தான். அந்த மார்பில் மேன்மக்களின் கண்கள் துயில் கொண்டன. (அதன் அழகில் பலரும் மயங்கின்). சேரலாதன் தன் காலத்தின் பெரும்பகுதியைப் பாசறையிலேயே போக்கினான். எனவே புலவர் பாசறைக்குச் சென்று அவனைப் போலவே, ஆனால் அரண்மனையில், தூங்காமல் வாடும் அவனது மனைவியை நினைத்துப் பார்க்கும்படி அரசனைத் தூண்டுகிறார்.

பாடல் 17 - 'வலம்படு வியன்பணை'

தொகு

'பசும்பூண் மார்பன்' என்று இவன் சிறப்பிக்கப்படுகிறான். கடலுக்குள் படை நடத்திச் சென்று கடம்பரை வென்று அவர்களின் காவல்கரமான கடம்ப மரத்தை வெட்டி, அம் மரத்தில் தனக்கு முரசு செய்துகொண்டான். அதனைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து முழக்கியபோது அவனது இயவர் (= முரசுப் படையினர்) இனிப் போருக்குச் செல்ல இடமில்லையே என்று வானத்தைப் பார்த்துக்கொண்டு 'உலகமே வருக, எம் அரசன் நிழல் தருவான்' என்றார்களாம்.

பாடல் 18 - 'கூந்தல் விறலியர்'

தொகு

இந்தப் பாடலில் அவனது கொடை போற்றப்படுகிறது.விறலியருக்குச் சொல்வது போல் சொல்வது இந்தப் பாடல். 'பருவ மழை பொய்த்தாலும் நாம் விரும்பியதை யெல்லாம் வழங்குவதிலிருந்து சேரலாதன் தவறமாட்டான்' என்று புலவர் கூறுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.

பாடல் 19

தொகு

'வளன் அறு பைதிரம்' -மனைவியை நினைக்கும்படி பாசறை மன்னனுக்குச் சொன்னது

பாடல் 20

தொகு

'அட்டுமலர் மார்பன்' - கடல் பரப்புக்குள் சென்று கடம்புமுதல் தடிந்த சேரலாதன் இவன். இவன் தன் மதில்நிலை வாயிலில் இருந்துகொண்டு கொடை வழங்கினான். பகைவரை 'அடா அடுபுகை அட்டு மலர் மார்பன்' இவன். (சோறு வழங்கச் சமைத்த புகையால் இவன் செஞ்சம் மலர்ந்தது) மேலும் மா, களிறு, தேர் ஆகியவற்றை வயிரியர் என்னும் இசைவாணர்க்கும், கண்ணுளர் என்னும் கலைஞர்களுக்கும் தனக்கென வைத்துக்கொள்ளாது கொடுத்தான்.

கருவிநூல்

தொகு
  • பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், வே. சாமிநாதைய்யர் பதிப்பு, 1920
  1. வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
    வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல் - பதிற்றுப்பத்து 11

  2.  நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி,
    அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
    சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை, 5
    கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
    செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
    அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
    மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
    மனாலக் கலவை போல, அரண் கொன்று, 10
    முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை; - பதிற்றுப்பத்து 11