இராயப்பன்பட்டி

இராயப்பன்பட்டி (Rayappanpatty) என்ற ஊர் தமிழ்நாட்டின், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமமாகும்.[1] இராயப்பன்பட்டி முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்து, பின்பு மாவட்டம் பிரிக்கப்பட்டதனால் தேனி மாவட்டத்திற்கு வந்தது. இக்கிராமம் உத்தமபாளையம் வட்டத்துக்கு உட்பட்டது. அஞ்சல் குறியீடு 625526

புவியியல் அமைப்பு

தொகு

இவ்வூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தேயிலை, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறன. இது மூவாயிரம் குடும்பங்களும் முப்பதினாயிரம் மக்கள்தொகையையும் கொண்டது. இராயப்பன்பட்டி கடல் மட்டத்திலிருந்து 1250 அடி உயரத்தில் உள்ளது. இவ்வூர் மதுரையில் இருந்து 100 கி.மீ தூரத்திலும், தேனியிலிருந்து 35 கி.மீ தூரத்திலும், உத்தமபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 566 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இராயப்பன்பட்டியின் தோற்றம்

தொகு

பதினைந்தாம் நூற்றாண்டுகளில் உடையார் சமூக மக்கள் மத்திய தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்கள் படையெடுத்தபோது பார்கவ குலத்தினர் காவேரியின் தென் பக்கமாக நகர்ந்து தருமபுரி, சேலம், ஆத்தூர், நாமக்கல், பெரம்பலுர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், மதுரை போன்ற இடங்களில் குடியேறினர். குறிப்பிட்ட உடையார் கூட்டம் கோம்பையில் குடியேறியது. அதில் பின்பு முதிர்ந்தவரான இராயப்ப உடையார் ஆலோசனையின் பேரில் இருபது குடும்பங்கள் கிழக்கு நோக்கி சென்று மலையடிவாரத்தில் விவசாயத்திற்கு ஏற்ற இடத்தில் குடியேறியது. இச்சமுதாயத்தின் தலைவர் பெயர் இராயப்பன். எனவே இக்கிராமத்தின் பெயர் இராயப்பன்பட்டி என்றானது. இவர் ஒரு கண்பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித பனிமய அன்னை ஆலயம்:

தொகு

1. 100 ஆண்டு பழமை வாய்ந்த தூய பனிமய அன்னை ஆலயம் 1902 ஆண்டு கட்டப்பட்ட ஒரு கத்தோலிக்க தேவாலயம். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இயேசு சபை பாதிரியார்களால் பிரெஞ்சு கட்டிட கலையை பின்பற்றி கட்டப்பட்டது.

2.142 அடி உயரம் கொண்ட இவ்வாலயம் இராயப்பன்பட்டியின் அடையாளமாகவும் தொன்மை சின்னமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஆலயமணி ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது. இதனுடைய ஓசை மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேட்கும்.

3.கத்தோலிக்க கிறிஸ்தவ ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் ஊராக இருப்பதாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இருப்பதாலும் இது "சின்ன ரோமாபுரி" என்று அழைக்கப்படுகிறது.

திருவிழா:

தொகு

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தூய பனிமய அன்னை திருவிழா கொடி ஏற்றத்துடன் தேர்பவனியுடனும் நடைபெறுகிறது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி பிரார்த்தனை செய்து திருவிழாவை கொண்டாடி மகிழ்வர்

கல்வியில் சிறந்த ஊர்:

தொகு

1.இராயப்பன்பட்டி கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்குகிற தமிழகத்தின் முன்னோடி கிராமமாகும். இங்கு 3 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளும், ஒரு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

2. இராயப்பன்பட்டியில் உள்ள புனித அலோசியஸ் ஆரம்பப்பள்ளி நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும். இது 1907 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை பாதிரியார்களால் நிறுவப்பட்டது.

3.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூரில் கல்விக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் கிறிஸ்தவ மிஷனரிகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மக்களின் கல்வி தேவையில் பள்ளிகள் பெரும் பங்காற்றின.

4.கேரளாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்ற தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக அளவில் இந்த பள்ளிகளில் படிக்கின்றனர். கேரள தமிழர்களுக்கான கல்விச் சேவையில் இராயப்பன்பட்டி முக்கிய ஊராக விளங்குகிறது.

உடையார் சமூகம்

தொகு

உடையார் சமூக மக்கள் இராயப்பன்பட்டியில் பெரும்பான்மையாக உள்ளனர். நிலவுடமை சமூகமாகவும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றனர். இராயப்பன்பட்டியின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் உடையார் சமூக மக்களின் பங்களிப்பு அளப்பரியது.

வேளாண்மை

தொகு

இராயப்பன்பட்டி பகுதி சிறந்த வேளாண்மையை கொண்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு நீர் பாசனம் வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. முல்லைப் பெரியாறு நீர் வழிப் பகுதியில் அமைந்திருப்பதால் இராயப்பன்பட்டியின் வேளாண்மை செழிப்பாக இருக்கிறது.

முக்கிய பயிராக நெல் பயிர் உள்ளது.தென்னை,வாழை,வெங்காயம், பீட்ரூட், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Royappanpatti Village Population - Uthamapalayam - Theni, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பன்பட்டி&oldid=3772382" இலிருந்து மீள்விக்கப்பட்டது