இருகால் நகர்வு

இருகால் நகர்வு என்பது ஒருவகை நிலம்சார் இடப்பெயர்வு முறை ஆகும். இங்கே ஓர் உயிரினம் தனது பின்னுறுப்புக்களைப் பயன்படுத்தி நகர்கின்றது. ஓர் உயிரினம் அல்லது இயந்திரம் இரு கால்களால் நகரும் வழக்கத்தைக் கொண்டிருப்பின் அது இருகாலி எனப்படும். இருகால் நகர்வு நடத்தல், ஓடுதல், தாவுதல் என்பவற்றை உள்ளடக்குகிறது. ஒப்பீட்டளவில், தற்கால இனங்களில் மிகச்சிலவே வழக்கமாக இருகால் நகர்வைக் கைக்கொள்ளுகின்றன. பாலூட்டிகளில், இருகால் நகர்வுப் பழக்கம் நான்கு படிகளில் வளர்ச்சியடைந்துள்ளது.[1][2][3]

திரியாசிக் காலத்தில் ஆக்கோசோரசின் சில குழுக்கள், இருகால் நகர்வு முறைக்கு வளர்ச்சியடைந்தன. அவற்றிலிருந்து, வந்தவற்றுள் தொன்மாக்களின் எல்லாத் தொடக்க வடிவங்களும், பல பிந்திய வடிவங்களும் இருகால் பழக்கம் கொண்டவையாக அல்லது இருகாலில் மட்டுமே நடக்கக்கூடியவையாகக் காணப்பட்டன. பறவைகள் இருகாலில் மட்டுமே நடக்கக்கூடிய இத்தகைய குழு ஒன்றிலிருந்து வழிவந்தன ஆகும்.

தற்கால இனங்களில் பல, வழமைக்கு மாறான தேவைகள் ஏற்படும்போது குறுகிய நேரத்துக்காவது, இரு கால்களில் நகரக்கூடியவையாக உள்ளன. பல முதலை இனங்களும், ஆக்கோசோரிய வகை சாராத பல்லி வகைகளும், உயிர் தப்புவதற்காக ஓடுவது போன்ற அவசரமான நேரங்களில் இருகால்களில் நகர்கின்றன. பசிலிஸ்கு எனப்படும் பல்லிவகை நீரிலும்கூட இருகால்களில் நகரக்கூடியது. சில விலங்குகள் பிற விலங்குகளுடன் சண்டையிடும்போது இரு கால்களில் எழுந்து நிற்கின்றன. வேறு சில உணவை எட்டுவதற்காக அல்லது சூழலைக் கவனிப்பதற்காக இரு கால்களில் நிற்கவல்லன. ஆனால் இரு கால்களில் நகர்வதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Stewart, D. (2006-08-01). "A Bird Like No Other". National Wildlife. National Wildlife Federation. Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2014-05-30.
  2. Davies, S.J.J.F. (2003). "Birds I Tinamous and Ratites to Hoatzins". Grzimek's Animal Life Encyclopedia (2nd) 8. Farmington Hills, MI: Gale Group. 99–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7876-5784-0. 
  3. Penny, M. (2002). The Secret World of Kangaroos. Austin, TX: Raintree Steck-Vaughn. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7398-4986-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருகால்_நகர்வு&oldid=4133224" இலிருந்து மீள்விக்கப்பட்டது