நடத்தல் என்பது, கால்களைக் கொண்ட விலங்குகள் அவற்றைப் பயன்படுத்தி இடத்துக்கு இடம் நகர்வதற்கான முக்கியமான வழிமுறைகளுள் ஒன்று. பொதுவாக, ஓடுதல் முதலிய கால்களின் துணைகொண்டு நகரும் பிற முறைகளிலும் பார்க்க நடத்தலின் வேகம் குறைவானது. "ஒவ்வொரு அடியின்போதும், விறைப்பான கால் அல்லது கால்கள் மீது உடல் முன்னோக்கிச் செல்லும் தலைகீழ் ஊசல்" என நடத்தலுக்கு வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. கால்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் இவ்வரைவிலக்கணம் பொருத்தமாகவே அமையும். ஆறு, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால்களைக் கொண்ட விலங்குகளுக்கும் இது பொருத்தமானது.

மனித நடையின் ஒரு சுற்றின் நிலைகளைக் காட்டும் கணினி உருவகம். இதில் தலை எப்போதும் ஒரே மட்டத்தில் இருக்க இடுப்பு ஒரு சைன் வளைவில் அசைகிறது.

மனிதர்களிலும், இரு கால்களுடைய பிற விலங்குகளிலும், நடத்தலின்போது ஒரு நேரத்தில் ஒருகால் மட்டுமே நிலத்தில் படாமல் இருக்கும். இரண்டு கால்களும் புவியைத் தொடுக்கொண்டிருக்கும் நேரங்களும் உண்டு. இதுவே நடத்தலை ஓடுதலில் இருந்து வேறுபடுத்துகின்றது. ஓடும்போது ஒவ்வொரு அடியின் தொடக்கத்திலும் இரு கால்களுமே நிலத்தில் இருந்து மேலெழும்பி இருக்கும். நாலுகால் விலங்குகளைப் பொறுத்தவரை பல்வேறுபட்ட காலசைவுக் கோலங்களை நடத்தல், அல்லது ஓடுதல் எனக் கூற முடியும். இதனால், கால்கள் எதுவும் நிலத்தைத் தொடாதிருக்கும் ஒரு நிலை இருப்பதை அல்லது இல்லாமல் இருப்பதை அடிப்படையாகக் கொண்டோ நிலத்தில் படும் கால்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டோ ஓடுதலையும், நடத்தலையும் வகைப்படுத்துவது சரியானதாக இராது.[1] நடத்தல் சுற்றின் இடை நிலையமைதிக் கட்டத்தில் உடலின் திணிவு மையத்தின் உயரத்தை அளப்பதன் மூலமே ஓடுதலையும், நடத்தலையும் மிகத் திறம்பட வேறுபடுத்த முடியும். நடத்தலின்போது இடை நிலையமைதிக் கட்டத்திலேயே திணிவு மையத்தின் உயரம் மிகக் கூடுதலாக இருக்கும். ஓடும்போது இக் கட்டத்தில் திணிவு மையத்தின் உயரம் மிகக் குறைவாகக் காணப்படும். ஒரு அடி எடுத்துவைக்கும் கால அளவில், ஒரு கால் நிலத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் சராசரிக் கால அளவு 50% இலும் கூடுதலாக இருப்பது தலைகீழ் ஊசல் இயக்கத்தின் பொறிமுறையுடன் ஒத்துவருகிறது.[1] இதனால், இது எத்தனை கால்களைக் கொண்ட விலங்குகளிலும் நடத்தலைக் குறிக்கும் அளவாக அமையலாம். விலங்குகளும், மனிதர்களும் திருப்பங்களிலும், ஏற்றங்களிலும் ஓடும்போதும், சுமைகளைத் தூக்கிக்கொண்டு ஓடும்போதும் நிலத் தொடுகைக் காலம் 50% இலும் கூடுதலாக இருப்பதும் சாத்தியமே.

உயரம், வயது, நில அமைப்பு, மேற்பரப்பின் தன்மை, சுமை, பண்பாடு, முயற்சி, உடற்தகுதி போன்ற இன்னோரன்ன காரணிகளைப் பொறுத்து நடை வேகம் பெருமளவுக்கு மாறுபடக் கூடும் ஆயினும், ஒரு மனிதனின் சராசரி நடை வேகம் 5கிமீ/மணி அல்லது 3.1மைல்/மணி ஆகும். குறிப்பான ஆய்வுகளின்படி மனித நடைவேகம் வயதானவர்களில் 4.51கிமீ/மணி - 4.75கிமீ/மணி முதல் இளைஞர்களில் 5.32கிமீ/மணி - 5.43கிமீ/மணி வரை வேறுபடுகின்றது.[2][3] ஆனாலும், விரைவு நடையின்போது வேகம் 6.5கிமீ/மணி வரையும்,[4] போட்டிக்கு நடப்பவர்களின் வேகம் 14கிமீ/மணி அளவுக்கு மேலும் இருக்கக்கூடும். ஒரு மனிதக் குழந்தை ஏறத்தாழ 11 மாத வயதாகும்போது தானாக நடக்கும் வல்லமையைப் பெறுகிறது.

தொல்மானிடவியலும் நடத்தலும்

தொகு

கெனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காலடி ஒன்றின் அடிப்படையில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதருடைய நடத்தல் செயற்பாடு தற்கால மனிதருடையதைப் போலவே இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[5][6]

நடத்தலின் கூர்ப்புசார் தோற்றம்

தொகு

நான்குகாலிகளில் நடத்தல் செயற்பாடு நீரின் கீழேயே தோன்றியதாக ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர். நீருக்கு அடியில் நடக்கும் வல்லமை பெற்ற வளிச் சுவாச மீன்கள் பின்னர் இரண்டு அல்லது நான்கு கால்களில் நடக்கக்கூடிய பல்வேறு நிலம்வாழ் விலங்குகளாகப் பல்கிப் பெருகின.[7] இவ்வாறு, நான்குகாலிகளில் நடத்தல் ஒரு மூலத்தில் இருந்தே தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால், கணுக்காலிகளையும், அவற்றோடு தொடர்புடைய பிற விலங்குகளையும் பொறுத்தவரை நடத்தல் செயற்பாடு, தனியாகப் பல்வேறு காலங்களில் கூர்ப்பு அடைந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாகப் பூச்சிகள், பலகாலிகள், மெதுநடையிகள், வெளியோட்டு விலங்குகள் போன்றவற்றில் இது நிகழ்ந்தது.[8]

உயிரிப்பொறிமுறை

தொகு
 
எளிமையான நடை

மனிதரில் நடத்தல், இரட்டை ஊசல் எனப்படும் வழிமுறை மூலம் நிகழ்கிறது. முன்னோக்கிய நகர்வின்போது, நிலத்தில் இருந்து தூக்கப்படும் கால், இடுப்பை மையமாகக் கொண்டு முன்னோக்கி ஊசலாடுகிறது. இது முதலாவது ஊசல். பின்னர் இக்காலின் குதிக்கால் நிலத்தைத் தொட்டுப் பெருவிரல் வரை நிலத்தில் உருள்வதின் மூலம் இடுப்பு முன் நகர்ந்து "தலைகீழ் ஊசல்" எனப்படும் இன்னொரு ஊசலாட்டம் நிகழ்கிறது. இச் செயற்பாட்டின்போது இரண்டில் ஒருகால் நிலத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கும்படி கால்களின் இயக்கத்தில் ஒருங்கிணைவு காணப்படும்.

நடக்கும்போது நிலத்தில் ஊன்றிய காலில் தாங்கியபடி உடல் முன்னோக்கிச் செல்கிறது. இந்நிகழ்வில் கால் நிலைக்குத்தாக வரும்போது உடம்பின் திணிவு மையம் நிலத்தில் இருந்து மிகக்கூடிய உயரத்தில் இருக்கும். தொடரும் இயக்கத்தின்போது இவ்வுயரம் குறைந்து கால்களின் மிகக்கூடிய அகல்வு நிலையில் மிகக் குறைவாக இருக்கும். இங்கே, முன்னோக்கிய நகர்வினால் ஏற்படும் இயக்க ஆற்றல், திணிவுமையம் மேலெழும்போது ஏற்படும் நிலை ஆற்றல் உயர்வின்போது இழக்கப்படுகின்றது. நடக்கும்போது இது தொடர்ச்சியாக நிகழ்கிறது.

ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் திணிவு மையத்தின் மேல்நோக்கிய முடுக்கம் காரணமாக, ஒருவரின் நடையின் வேகம் ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருக்கிறது. விரைவு நடையின் போது பயன்படும் சில சிறப்பு நுட்பங்கள் மூலம் இதைச் சற்றுக் கூட்ட முடியும். திணிவு மையத்தின் மேல் நோக்கிய முடுக்கம் புவியீர்ப்பிலும் அதிகமானால், ஊன்றிய காலில் முன்னோக்கிச் செல்லும்போது உடல் நிலத்தை விட்டு மேலெழும்பும். ஆற்றல் திறன் காரணமாக நாலுகால் விலங்குகள் இதிலும் குறைவான வேகத்திலேயே ஓட முடியும்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Biewener, A. A. (2003). Animal Locomotion. USA: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-850022-3.
  2. "Study Compares Older and Younger Pedestrian Walking Speeds". TranSafety, Inc. 1997-10-01. Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-24.
  3. Aspelin, Karen (2005-05-25). "Establishing Pedestrian Walking Speeds" (PDF). Portland State University. பார்க்கப்பட்ட நாள் 2009-08-24.
  4. "about.com page on walking speeds". Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
  5. Dunham, Will (26 February 2009). "Footprints show human ancestor with modern stride". Reuters. பார்க்கப்பட்ட நாள் August 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Harmon, Katherine (26 February 2009). "Researchers Uncover 1.5 Million-Year-Old Footprints". Scientific American. பார்க்கப்பட்ட நாள் August 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Choi, Charles (2011-12-12). "Hopping fish suggests walking originated underwater; Discovery might redraw the evolutionary route scientists think life took from water to land". Msnbc.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  8. Evolution of the Insects - David Grimaldi, Michael S. Engel - Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடத்தல்&oldid=3868597" இலிருந்து மீள்விக்கப்பட்டது