இலக்கணச் சூடாமணி

இலக்கணச் சூடாமணி என்பது யாப்பிலக்கண நூல்களுள் ஒன்றாகும்.[1] இந்நூலில் 58 வெண்பாக்கள் உள்ளன. நேமிநாதம், வெண்பாப் பாட்டியல் ஆகியவற்றைப் போன்று இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்து உரையுடன் உள்ளது. தொன்னூல் விளக்கம், சிதம்பரப்பாட்டியல் போன்று பிரபந்த இலக்கணத்தையும் யாப்பிலக்கணத்தையும் கூறுகின்றது.

உறுப்பியல், பாவியல், பாவினவியல், பிரபந்தவியல், ஒழிபியல் என்னும் ஐந்து இயல்களைக்கொண்டு விளக்குகிறது. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை போன்றவற்றின் கருத்துகளை அடியொற்றியும், அவற்றின் உரையமைப்பைப் பின்பற்றியும் இந்நூல் அமைந்துள்ளது. எல்லா இலக்கண நூலுள்ளும் காணப்படும் இலக்கணக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக இந்நூலின் பாயிரம் கூறுகின்றது. 'இலக்கணச் சாரத்தை எடுத்தியம்புகின்றேன் இலக்கணச் சூடாமணியீதென்று', என்பது பாயிரம்.

முன்னூல்களின் மரபையொட்டி இந்நூலும் மகடூஉ முன்னிலை நெறியில் இலக்கணம் கூறுகிறது. 58 வெண்பாக்களுள் 7 வெண்பாக்கள் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன. பிணை விழிக்கண் மானே(இலக்.சூ. 10), பிணக்குறு வேற்கண்ணோய் (இலக்.சூ. 20), வடிவுறு வேற்கண்ணோய் (இலக்.சூ. 21), தோகாய் (இலக்.சூ. 23, 27), சூடி கொள் அளி களிக்கும் கூந்தல் அணங்கே (இலக். சூ. 33), செருமோதி வந்த வடிவேற் கண்ணாய் (இலக். சூ. 40).

எளிமையும் தெளிவும் கொண்ட இந்நூற்பா, நூற்பா நூதலும் பொருள், கருத்துரை, எடுத்துக்காட்டு, விதப்புக்கிளவி என்ற அமைப்பில் இயங்குகின்றது. வெண்பாக்கள் தெளிந்த நடையில் எளிதில் பொருள்கொள்ளத்தக்க வகையில் உள்ளன. 58 வெண்பாக்களுள் மூன்றன் வெண்பாக்கள் (4, 10, 26) ஈற்றுச் சீர்கள், ஈரசைச்சீரான் முடிந்து நிற்கின்றன. இவையன்றி, முற்றிலுகர வீற்றால் முடியும் வெண்பாக்களும் இந்நூலுள் காணப்படுகின்றன.

யாப்பருங்கல விருத்தியுள் காணப்பெறும் மேற்கோள் பாடல்கள் அகரகமோடாகாரம், ஆசிரியப்பாவின் என்னும் இரண்டனை இந்நூல் நூற்பாவாக ஆக்கிக்கொண்டுள்ளது. நிகண்டு சூடாமணி, மகா பாரதசூடாமணி, வேதாந்த சூடாமணி, பரத சூடாமணிபோன்று இந்நூலும் சூடாமணி என்னும் பெயரைக்கொண்டுள்ளது. இந்நூல் யாப்பிலக்கணத்தைச் சிறப்பித்துக் கூறுவதாயினும் பொதுப்பெயராகிய இலக்கணம் என்பதாலேயே வழங்கப்பெறுகிறது.

நூலாசிரியரும் உரையாசிரியரும்

தொகு

மூலமும் உரையுமாக இந்நூலின் ஆசிரியரும் உரையாசிரியரும் வேறானவர்கள். நூலினுள் ஆசிரியர் பற்றிய குறிப்புகள் இல்லை. நூலின் புறத்தே அமைந்த நூற்பயன் கூறும் காரிகை இதன் ஆசிரியரை, ‘கவி பாலபாரதி கட்டுரையால் பார்க்கும் இலக்கணச் சூடாமணி’ என்று கூறுகின்றது. கவி பாலபாரதி என்பவர்தான் இந்நூலின் ஆசிரியர். பாலபாரதி என்ற பெயரில் பலர் இருப்பினும், இந்நூலாசிரியர் கி.பி. 17ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவராவார். சிந்து யாப்பிற்கும் வண்ணத்திற்கும் இவர் இலக்கணம் கூறுகின்றார். எனவே, இவ்விரு பாவகைகளும் சிற்றிலக்கிய வடிவம் பெற்ற காலத்தில் இவர் இலக்கணம் செய்துள்ளார் என்று தெரிகின்றது.

இந்நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுடையார்க்கும் இதுவே உடன்பாடு (இலக்.சூ. 52) என்று நூலாசிரியரைச் சுட்டியுள்ளதால் நூலாசிரியரினின்றும் இவர் வேறுபட்டவராவார். இவர் பரந்த இலக்கணப் புலமையுடையவர். இவர்தம் உரையுள் 250க்கும் மேற்பட்ட இலக்கிய மேற்கோள்களும், 60க்கும் மேற்பட்ட இலக்கண மேற்கோள்களும் காணப்படுகின்றன. யாப்பருங்கலக் காரிகையிலிருந்து 12 உதாரண முன்னிணைப்புக் காரிகைகள் இதனுள் எடுத்தாளப்பெறுவதனால், இவ்வுரை கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாகும். இவ்வுரையுள் அமைந்த மேற்கோள் பாடல்கள் வேறுபாடுகளைக்கொண்டு பாடப்படுகின்றன. ‘மண்டினிந்த நிலனும்’ என்னும புறநானூற்றுப் பாடல் (2) ‘மண்டணிந்த நிலனும்’ என்ற பாட வேறுபாட்டுடன் காணப்படுகின்றது. ‘உலைக்கல் அன்ன பாறையேறி’ என்னும் குறுந்தொகைப்பாடல் (12) ‘உலைக்கல் என்ன பாறை ஏறியக்’ என்ற பாட வேறுபாட்டுடன் காணப்படுகிறது.

நூற்பொதி சிறப்புகள்

தொகு

அசைக்குறுப்பாகும் எழுத்துகள் எவையென்று வரையறுத்துக் கூறுவதில் இந்நூல் வேறுபடுகின்றது. காக்கைப்பாடினியம் 13 என்றும், சிறுகாக்கைப் பாடினியம் 12 என்றும், யாப்பருங்கல விருத்தி 15 என்றும், யாப்பருங்கலக் காரிகை 13 என்றும், நாலடி நாற்பது 13 என்றும் அவிநயம் 11 என்றும், பெரியபம்மம் 15 என்றும் வரையறை செய்யவும் இந்நூல் அசைக்குறுப்பாகும் எழுத்துகள் 7 என்றும் கூறுகின்றது. குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகை அடிகள் அல்லாமல் விருத்தம் என்னும் ஓர் அடிவகையை இந்நூல் எடுத்தியம்புகிறது. பிற இலககண நூல்கள் கூறுகின்ற தொடை, தொடை விகற்பங்களைக் கூறுவதனோடு ஐஞ்சீர்முதல் பதினாறு சீர்ப்பாவுக்கும் உரிய தொடை விகற்பங்களை இந்நூலுள் காணமுடிகிறது. நூற்சிற்றடிப் பாவினங்களுக்குப் பொழிப்பு மோனையும், ஐஞ்சீரடிக்குக் கடைமோனையும், அறுசீர்முதல் பதின்சீரளவிற்கு இடைமோனையும், பதினோருசீர்முதல் பதினாறு சீரளவிற்கு வழிமோனையும் சிறப்பு மோனைகளாகும் என்று இந்நூல் கூறுகின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. வாழ்வியற்களஞ்சியம், தொகுதி பதினைந்து தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். மே 2009. பக்கம் 72 - 74

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணச்_சூடாமணி&oldid=3277438" இலிருந்து மீள்விக்கப்பட்டது