இலக்கண விளக்கச் சூறாவளி
இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கம் என்னும் இலக்கண நூலுக்கு மறுப்பாக வெளிவந்த நூல் ஆகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், வடமொழி, தமிழ் இரண்டிலும் நிரம்பிய புலமை வாய்ந்தவர் என மதிக்கப்படுபவருமான சிவஞான முனிவர் இதனை இயற்றினார். இலக்கண விளக்கத்தில் காணப்பட்ட குறைகளைக் கண்டிப்பதே இந்நூலின் நோக்கம் ஆகும். இலக்கண விளக்கம் என்னும் விளக்கை அணைக்க வந்த சூறைக் காற்று என்னும் பொருளிலேயே இந்நூலுக்குப் பெயர் தரப்பட்டது.[1][2]. இலக்கண விளக்கம் நூலைப் பதிப்பித்த சி. வை. தாமோதரம்பிள்ளை தமது பதிப்புரையில், இலக்கண விளக்கச் சூறாவளியை "அநியாய கண்டனம்" என்று கண்டித்துள்ளதுடன், அதை மறுத்தும் எழுதியுள்ளார்.
அமைப்பு
தொகுஇலக்கண விளக்கம் ஐந்திலக்கண நூலாயினும், அதற்கு மறுப்பாக எழுந்த இந்நூலில் எழுத்ததிகாரத்தையும், சொல்லதிகாரத்தையும் மட்டுமே ஆசிரியர் எடுத்தாண்டுள்ளார். பாயிரம் தொடர்பில் ஒரு மறுப்பும், எழுத்தாதிகாரம் தொடர்பில் 42 மறுப்புகளும், சொல்லதிகாரத்தில் 40 மறுப்புகளுமாக மொத்தம் 83 மறுப்புகள் இந்நூலில் உள்ளன[3].
இந்நூல் சிவஞான முனிவரின் ஏனைய மறுப்பு நூல்களைப்போல் முழுமையானதாக அமையவில்லை என, "உரையாசிரியர்" என்னும் தமது நூலில் எடுத்துக்காட்டும் அரவிந்தன், "தொடக்கம் மட்டும் காட்டி மறுப்புரைகளையும் விரிவாகத் தராமல் ‘இவற்றைத் தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் காண்க’ என்று பல இடங்களில் கூறிவிடுகின்றார். எனவே, இம்மறுப்பு நூலைக் கற்போர், இலக்கண விளக்கம், தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி ஆகிய இரண்டினையும் நன்கு பயின்றவராக இருத்தல் வேண்டும்" என்கிறார்[4].
பதிப்பு
தொகுஇந்நூல் முதன் முதலில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது.
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
- அரவிந்தன், மு. வை., உரையாசிரியர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- உரையாசிரியர்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இருந்து.