இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார்[1]. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அமைப்பு

தொகு

இந்நூலில் உள்ள பல பாடல்கள் நன்னூல் முதலிய பழைய நூல்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டவை. இவ்வாறான பாடல்களுடன் தானியற்றிய பாடல்களையும் சேர்த்து ஒரு தொகுப்பு நூல் போல இதனை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில், எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும் உள்ளன. பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் 158 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 214 பாடல்களும், பொருளதிகாரத்தில் 569 பாடல்களுமாக நூலில் மொத்தம் 941 பாடல்கள் உள்ளன[2].

பதிப்புகள்

தொகு

இலக்கண விளக்கத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார். இவரது பதிப்பு 1889 ஆம் ஆண்டு வெளிவந்தது. பின்னர் இதன் பொருளதிகாரம் 1941 ஆம் ஆண்டில் சோமசுந்தர தேசிகரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் சேயொளி என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கழக வெளியீடாக வெளிவந்தது. 1974 ஆம் ஆண்டளவில் தி. வே. கோபாலையர் இந்நூல் முழுவதையும் தரப்படுத்தி விளக்கக் குறிப்புக்களுடன் பதிப்பித்தார்[3].

குறிப்புகள்

தொகு
  1. இளங்குமரன், 2009. பக். 364.
  2. இளங்குமரன், 2009. பக். 365, 367.
  3. அருள்முருகன், நா., 2010.

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கண_விளக்கம்&oldid=3305204" இலிருந்து மீள்விக்கப்பட்டது