இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் (நூல்)
இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் என்பது, இலங்கையில் தமிழ் வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் வகித்த பங்கு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நூல். தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் எஸ். ஜெபநேசன் எழுதிய இந்த நூலின் முதற் பதிப்பு 1983ல் வெளியானது. இதன் மீளச்சு குமரன் புத்தக இல்ல வெளியீடாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் | |
---|---|
நூல் பெயர்: | இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் |
ஆசிரியர்(கள்): | எஸ். ஜெபநேசன் |
வகை: | கல்வி வரலாறு |
துறை: | இலங்கைத் தமிழர் கல்வி வரலாறு |
காலம்: | இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலம் |
இடம்: | யாழ்ப்பாணம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 133 (மீளச்சு) |
பதிப்பகர்: | -- |
பதிப்பு: | 1983, 2007 (மீளச்சு) |
நோக்கம்
தொகுஇந்தியாவில் பணியாற்றிய சீகன்பால்கு, கால்டுவெல், போப்பு போன்ற மிசனரிகளைப் பற்றிப் பல ஆய்வுகள் வெளிவருகின்றன. சாதனை வேட்கையும், தமிழார்வமும் கொண்ட பல மிசனரிகள் இலங்கையிலும் இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களது வாழ்க்கையும் பணியும் நன்கு ஆராயப்படாத விடயங்களாக இருக்கின்றன.[1] இத்தகைய ஆய்வில் பலர் ஈடுபடவேண்டும் என்றும், அத்தகைய உந்துதலை அளிப்பதே இந்நூலின் நோக்கம் என்பதும் நூலாசிரியரின் முகவுரையில் இருந்து தெரிகிறது.[2]
உள்ளடக்கம்
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து சமயப் பரப்புரை செய்வதற்காக அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணம் வந்தனர். பரப்புரைக்கான ஒரு கருவியாகப் பல்வேறு பள்ளிகளை அவர்கள் அமைத்தனர். இந்த வழியில் 1823 ஆம் ஆண்டில் பட்டிகோட்டா செமினறியை நிறுவி அதன் மூலம் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றினர். அத்துடன், தமிழ் அகராதி உருவாக்குவதிலும் ஈடு பட்டனர். அவர்கள் உருவாக்கிய உவின்ஸ்லோ அகராதியே சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தது. அச்சுப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுத் தமிழ் வளர்ச்சிக்கு உதவினர். மேற்படி பணிகள் குறித்து விளக்கும் இந்நூல் பின்வரும் தலைப்புக்களில் ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
- அமெரிக்கன் மிசனரிமாரும் யாழ்ப்பாணச் சமுதாயமும்.
- அமெரிக்கன் மிசன் பாடசாலைகள்
- வட்டுக்கோட்டைச் செமினரி
- அமெரிக்கன் மிசனரிமார் தொகுத்த அகராதிகள்
- அமெரிக்கன் மிசனின் அச்சுப்பணி
- அமெரிக்கன் மிசன் சாதித்ததென்ன?
இவை தவிர, இலங்கையில் பணியாற்றிய அமெரிக்க மிசனரிமாரின் பட்டியல், கிறித்தவ தோத்திரப் பாடல்கள் எழுதிய புலவர்கள் பட்டியல், வட்டுக்கோட்டைச் செமினரியில் கற்பித்த ஆசிரியர் பட்டியல், அச்செமினரியில் சேர்வதற்கான தகைமைகள், ஆறுமுக நாவலர் குறித்த மிசனரிமாரின் குறிப்புகள் என்பன பிற்சேர்க்கைகளாகத் தரப்பட்டுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிசனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2007. பக். xii.
- ↑ ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிசனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2007. பக். xiv.
- ↑ ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிசனும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2007. பக். xvi.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் - இதே நூலாசிரியரின் இன்னொரு நூல்.