இலியட் என்பது பண்டைக் கிரேக்க இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்று. மற்றது ஆடிசி (Odyssey). இலியட், ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் காணப்படுவதால் இது பலரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.

இன்று கிடைக்ககூடியதாக இருக்கும் பழங்காலக் கிரேக்க இலக்கியங்களில் இதுவே பழையது என்பதால், முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், இலியட்டும், ஆடிசியும் கிமு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் என்னும் கருத்தே நிலவிவந்தது. பலர் இன்னும் இதே கருத்தையே கொண்டிருப்பினும், மார்ட்டின் வெஸ்ட், ரிச்சார்ட் சீஃபோர்ட் போன்ற சிலர் இவை கிமு ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.

இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் இலியன் அல்லது திராய் (Troy) எனப்பட்ட நகரம் முற்றுகை இடப்பட்ட, டிரோஜான் போரின் பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர் வீரனான ஆக்கிலீசையும், மைசீனி அரசன் அகமெம்னான் மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இது கிரேக்கர்களுக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்குக் கருப்பொருளாக அமைந்தன.

இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.

கதை சுருக்கம் தொகு

ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை திராய் நாட்டு இளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாஸ் தன சகோதரனும் மைசினியாவின் அரசனான அகமேனானின் உதவியை நாடுகிறான். இவர்களின் தலைமையில் கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது. அந்நகரம் பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரம். எனவே, முற்றுகை ஆண்டுகணக்கில் நீடிக்கிறது. போரின் போது சைரிசஸ் என்ற அப்பல்லோ கடவுளின் பூசாரி சிறை பிடிக்கப்பட்ட தனது மகளான சைரிசசிஸை ஒப்படைத்தால் கிரேக்கர்களுக்கு எராளமான செல்வத்தை தருவதாக கூறுகிறார். எனினும், அகமனான் அதை மறுப்பதால் அவர் அப்பல்லோ கடவுளிடம் முறையிடுகிறார். இதன் காரணமாக, கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது.

பிளேக் பரவி ஒன்பது நாட்களுக்கு பிறகு கிரேக்க மாவீரனான ஆக்கிலீஸின் அழுத்தத்தின் பேரில் அகமனானின் சைரிசசிஸை அவரது தந்தை திரும்ப ஒப்புக்கொள்கிறார். ஆனால், இழப்பீடாக ஆக்கிலீஸின் வசமிருந்த ப்ரிசைஸ் என்ற பெண்ணை சிறைபிடித்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த அக்கிலீஸ் தான் மற்றும் தனது ஆட்கள் இனி அகமனானுக்காக போராடுவதில்லை என கூறிவிட்டு வெளியேறுகிறார். அத்துடன் பிளேக் நீங்குகிறது.

அதன் பின்னர் கிரேக்க படைகள் முன்னேறுகிறது. போரின் சேதங்களை குறைக்க பாரிஸ் மெலநிசுடன் தனிப்பட்ட ஒரு சண்டை போடுவதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர். பாரிஸ் தோற்கடிக்கப்பட்டாலும் மெலனியாஸ் அவனைக் கொல்வதற்கு முன் அப்ரோஹிட் அவனை காப்பாற்றுகிறான். ஒரு ட்ரோஜென் வீரனின் அம்பால் மெலனிஸ் காயமடைந்தனர். இதனால் சமாதான பேச்சு தோல்வியடைந்து போர் துவங்கியது. போர் தீவிரமாக நடைபெறுகிறது. ட்ரோயின் தளபதியான ஹெக்டர் அஜக்ஸுடன் மற்போர் புரிந்து தோற்கடிக்கிறான். அதன் பின்னர், ஒரு இரவு போரில் கிரேக்கர்களின் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை தாக்குகிறான். இதில் அங்குள்ள பல கப்பல்கள் தீக்கிரையாகுகின்றன.

அச்சமயத்தில், ஆக்கிலியசின் உறவினனான பெட்ராகிளஸ் கப்பல்களைப் பாதுகாக்க ஆக்கிலீஸின் மந்திர சக்தி வாய்ந்த கவசத்தைப் பூட்டிக் கொண்டு, அவனைப் போல வேடமணிந்து போருக்குச் செல்கிறான். பெட்ராகிளஸ் போரில் ஆக்கிலியசின் படைவீரர்களுடன் போருக்கு செல்கிறான். அவர் டிராஜன்கள் திடீர் தாக்குதலை முறியடிகிறார். மேலும், ட்ரோஜன் செர்போடோனை கொள்கிறான். இறுதியாக, அவன் ஹெக்டரால் கொல்லப்பட்டான்.

அதன் பின்னர் ஹெக்டர் இறந்த பெட்ராகிளஸிடமிருந்து ஆக்கிலீஸின் கவசத்தை எடுத்துக்கொள்கிறான். போர் அவனது உடலைச் சுற்றித் தொடர்ந்து நடைபெறுகிறது. பெட்ராகிளஸ் மரணத்தை அறிந்து கேட்டு ஆக்கிலீஸ் வருத்ததில் ஹெக்டர் பழிவாங்குவதாக சபதம் எடுத்துகொள்கிறான். ஹெக்டரை அவன் கொல்ல நேர்ந்தால், விதிப்படி ஆக்கிலீஸ் இளம்வயதில் இறப்பான் என்று அவன் தாயார் டீடிஸ் தடுக்க முயற்சிக்கிறாள். எனினும், அதை ஏற்க மறுக்கிறான். அதன் பின்னர், அவர் ஹெக்டோருடன் கடும்போரிட்டு அவனைக் கொல்கிறான். அவன் உடலைத் தனது ரதத்தில் கட்டி இழுத்து வருகிறான்.

அதன் பின்னர், பெட்ராகிளஸின் ஆவி அவன் கனவில் வந்து தனது உடலை எரிக்குமாறு வலியுறுத்தியது. அதன் பின்னர், அவன் உடல் எரிக்கப்பட்டது. இரவில் யாருக்கும் தெரியாமல் பிரியம் மன்னர் அக்கீலியசிடம் வந்து தனது மகனது உடலைத் தருமாறு கெஞ்சி வாங்கிக் கொண்டு சென்று அவன் உடலுக்கு எரியூட்டுகிறான்.

முக்கிய பாத்திரங்கள் தொகு

அச்சேன்ஸ் அல்லது கிரேக்கர்கள் தொகு

 • அகமனான் - மைசீனியாவின் அரசன் மற்றும் கிரேக்கர்கள் தலைவர்.
 • ஆக்கீலிஸ் - மைமிடோன்ஸின் தலைவர் , கதாநாயகன் , டீடிஸ் என்ற பெண் கடவுளின் மகன்.
 • ஒடிஸியஸ் - இதகாவின் அரசன் , கிரேக்கம் தளபதி.
 • மாபெரும் அஜாக்ஸ் - டெலிமூனின் மகன் மற்றும் சலாமிசின் அரசன்.
 • மெநிலாஸ்- ஸ்பார்ட்டாவின் அரசன் , ஹெலன் கணவர் மற்றும் அகமனானின் சகோதரர்.
 • டியோமேடுஸ் - டைடியசின் மகன் , அர்காஸ் அரசன்.
 • இளைய அஜாக்ஸ் -ஓலியஷின் மகன் , அஜாக்சுடன் இணைந்து சண்டையிடுபவன்.
 • பெட்ராகிளஸ் - அக்கிலியசின் நெருங்கிய நண்பன் மற்றும் அவனது உறவினன்.
 • நெஸ்டர் - பைலோஸ் அரசன் , மற்றும் அகமனானின் நம்பகமான ஆலோசகர்.


ட்ரோஜன்கள் தொகு

ட்ரோஜன் ஆண்கள் தொகு

 • ஹெக்டர் - ட்ரோஜன் அரசன் பிரியமின் மூத்தமகன் மேலும் சிறந்த போர் வீரன்.
 • ஐனேயா - அஞ்சிசெஸ் மற்றும் அப்ரோடிட் ஆகியோரின் மகன்.
 • டைபோபஸ் - ஹெக்டர் மற்றும் பாரிஸின் சகோதரர்.
 • பாரிஸ் - ஹெலனின் காதலன்,அவளை கிரேக்கத்திலிருந்து கடத்தி சென்றவன்.
 • பிரியம் - டிராயின் வயதுமுதிர்ந்த அரசன்.
 • பாலிடமஸ் -ட்ராயின் விவேகமுள்ள தளபதி.
 • அகெனார் - அக்கீலியசுடன் போட்டியிட்ட ஒரு ட்ரோஜன் வீரன்.
 • சார்பெடான்- சியுசின் மகன்,லைசியன்ஷின் துணைத் தலைவன்,பெட்ராகிளஸால் கொல்லப்பட்டவன்.
 • க்லாகஸ்- இப்போலோசஸின் மகன், சார்பெடானின் நண்பர்.
 • டோலான் - கிரேக்கம் முகாமுக்கான உளவாளி.
 • அன்டெனார் - அரசன் பிரியமின் ஆலோசகர், போரை முடிவுக்குக் கொண்டுவர ஹெலனை திரும்பி அனுப்பக்கூறுபவர்.
 • பாலிடோரஸ் - பிரியம் மற்றும் லோதோவின் மகன்.

டிராஜன் பெண்கள் தொகு

 • ஹெகுபா- பிரியமின் மனைவி , ஹெக்டர், கசாண்ட்ரா, பாரிஸ் போன்றோரின் தாய்.
 • ஹெலன் - சியுசின் மகள், மெனெலசின் மனைவி ;முதலில் பாரிசுடனும் பின்னர் அவன் சகோதரன் டைபோபஸுடன் வாழ்ந்தாள், யுத்தம் ஏற்பட முக்கிய காரணமானவர்.
 • அண்ட்ரோமசி - ஹெக்டரின் மனைவி.
 • கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள். எனினும், அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
 • ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு அக்கிலியசுக்குப் பரிசாக வழங்கப்பட்ட ஒரு ட்ரோஜன் பெண்.

வீரகதைப்பாடலின் வடிவம் தொகு

காவியங்களின் முன்னோடி வடிவமாகக் கதைப்பாடல்கள் [Ballad] உள்ளன. அக் கதைப்பாடல்கள் குலக்கதைப்பாடல்களாக முதலில் இருந்து, பின்னர் வீரகதைப்பாடல்களாக மாறியுள்ளன. இவை காவியத்தன்மையினை அடைவதற்கு அறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, அறம் உட்பொருளாக அமையப்பெறுவது காவியம் ஆகும். இலியட்டும் ஒடிஸியும் வெறும் வீரகதைப் பாடல்களாகும். [1] அறம் இவற்றில் குறிப்பிடப்படவில்லை.

ஹோமரின் கற்பனைத் திறம் தொகு

இலியட் காவியத்தில் சித்திரிக்கும் முதலாளிக்குப் பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்தனர். ஆனால், காண்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே அவர்கள் படைக்கப்பட்டு இருந்தனர். மேலும், அவர்களால் பேசவும், உடல் உறுப்புக்களை அசைக்கவும் முடியும். அது மட்டுமின்றி, அறிவோடும் திகழ்ந்தனர். கடவுளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலைத் திறம்படக் கற்றிருந்ததாகப் பதினெட்டாவது காண்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது. [2] தங்கப் பணிப் பெண்கள் (Golden Maids) உருவாக்கம் ஹோமரின் கற்பனைத் திறத்தை வெளிப்படுத்துகிறது.

இலியட் சிறப்பியல்புகள் தொகு

பெயர் அறிமுகம் தொகு

ஒருவரை அறிமுகப்படுத்தும்போது மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களையும் சேர்த்துத்தான் சொல்லும் வழக்கம் அரேபியர்களிடையே காணப்படும். இதைப்போன்ற ஒரு மரபு ஹோமரின் இலியட் காவியத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. காவிய மாந்தர்களை அறிமுகப்படுத்தும்போது, யாருடைய பெயரையும் ஹோமர் வெறுமனே குறிப்பிடுவது கிடையாது. பீலியூஸின் மகனாகிய அக்கிலிஸ், அவனுடைய தந்தை பெர்சியூஸின் மகனாகிய ஸ்தெனெஸ்தியூஸ், அத்ரியூஸின் மகனாகிய அகமெம்னன் என்றே தம் காவிய மாந்தர்களைக் குறிப்பிடுகின்றார்.

தந்தையர் நாடென்று போற்றுதல் தொகு

தந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கிரேக்கர்களின் சமுதாயம் திகழ்கிறது. சொந்த நாட்டை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தாய் நாடு என்று விளிக்கும் போக்கு நடைமுறையிலுள்ளது. ஆனால்,கிரேக்கர்கள் அவ்வாறு குறிப்பிடுவது கிடையாது. இந்த நடப்பைப் பின்பற்றி ஹோமர் தம் இலியட் காவியத்தின் அனைத்து இடத்திலும் தந்தையர் நாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.

வாய்மை ஒழுக்கப் பண்பு தொகு

இலியட் காவியத்தில் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. பிறன் மனை நோக்கல் நல்லொழுக்கமாகக் காட்டப்படுகிறது. ஹெலன் கடத்திச் செல்லப்பட்டது குறித்து பாரிஸிடமும் அல்லது ஹெலனிடமும் ஓர் இடத்தில்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லாது இருக்கின்றனர். அதேசமயம், வாக்கு மீறும் செயலுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இது இங்கு ஒழுக்கக் கேடான பண்பாக நோக்கப்படுகிறது.

உலோகத்தை மதித்தல் தொகு

உலோகங்களைப் பொறுத்தவரை வெண்கலத்தினைக் கிரேக்கர்களும் ட்ரோஜன்களும் மதித்தனர். இலியட் காவியத்தில் கவச உடை, ஈட்டி, வாள், தேர், ஈட்டியின் முனை, தலைக்கவசம் என எல்லாவற்றிலும் வெண்கலமே கோலோச்சியது. தங்கம் மற்றும் வெள்ளியின் பயன்பாடுகள் இக்காவியத்தில் குறைந்து காணப்படுகின்றன.[2]

காவியப் பண்புகள் தொகு

காவியத்திற்கென ஒருசில இன்றியமையாத பண்புகள் உண்டென அறிஞர்கள் கருதுகின்றனர். காவியம் என்பது வீரப்பண்பு உடையதாகவும் நாடகத் தன்மைக் கொண்டதாகவும் காணப்படும். சமுதாயப் பதிவுகளும் அறைகூவல்களும் ஆங்காங்கே காவியத்தினுள் அமைந்து இருக்கும். குறிப்பாக, தேசியப் பண்பு இருத்தல் அவசியம். காவியத்தில் அவ்வக்கால இடச்சூழல், அறக்கருத்துகள், கதையமைப்பு, பாத்திரப் படைப்பு, கிளைக் கதைகள் முதலியன அமைந்திருத்தல் சிறப்பாகும். இத்தகைய காவியப் பண்புகளை உலக மொழிகள் அனைத்திலும் காணவியலும். ஹோமரது இலியட், ஒடிசி போன்ற பழம்பெரும் காவியங்களில் இவை உள்ளன. உலக மொழிகளில் தோன்றியுள்ள ஏனைய காவியங்களிலும் இத்தகைய காவியப் பண்புகள் இருப்பதை அறிய முடிகின்றது.[3]

 1. "இலியட்டும் நாமும்-1". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
 2. 2.0 2.1 "ஹோமரின் 'இலியட்' காவியத்தின் முழு தமிழாக்கம்". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
 3. "இலியட் காப்பியப் பண்புகள்". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியட்&oldid=3784620" இலிருந்து மீள்விக்கப்பட்டது