இளவரசர் உரூப்பர்ட்டின் துளி
இளவரசர் உரூப்பர்ட்டின் துளி (Prince Rupert's Drop; இடாய்ச்சுக்கண்ணீர்துளிகள்)[1] என்பது உருக்கிய கண்ணாடியை மிகக் குளிர்ந்த நீரில் முக்குவதன் மூலம் உருவாக்கப்படும் கண்ணாடிப் பொருள்களாகும். கண்ணாடி குளிர்ந்து ஒரு தவளைக்குஞ்சு வடிவில் துளியாக நீண்ட மெல்லிய வாலுடன் உருக்கொளும். துளியின் உட்புறம் வெகு வெப்பமாய் இருக்கும் நிலையில் தண்ணீரால் அதன் வெளிப்புறம் இருக்கும் உருக்கிய கண்ணாடி விரைவாக குளிரூட்டப்படும். பின்னர் அதன் உட்பகுதி குளிரும்போது அது முன்னரே குளிர்ந்து கெட்டிப்பட்டுவிட்ட வெளிப்பகுதிக்குள்ளாக சுருங்கும். இப்படிச் சுருங்குவதால் அதன் புறப்பரப்பில் மிக உயர்ந்த இறுக்கத் தகைவுகளும், உட்கருவில் இழுவிசைத் தகைவுகளும் அமையும். இது ஒரு வகை கடுமைப்படுத்தப்பட்ட கண்ணாடி ஆகும்.
துளிக்குள் இருக்கும் மிதமிஞ்சிய தகைவு வேறுபாட்டினால் துளிக்கு வழக்கத்திற்கு மாறான பண்புகள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக அதன் தலைப்பகுதி சம்மட்டியின் அடியையோ அல்லது துப்பாக்கிக் குண்டின் மோதலையோ தாங்கக்கூடியது, ஆனால் அதன் வால் பகுதியில் ஏற்படும் சிறு சேதமும் கூட மொத்தத் துளியையும் வெடித்துச் சிதற வைக்கக்கூடியது.
வருணனை
தொகுசம்மட்டி அடியையும் துப்பாக்கிக் குண்டின் மோதலையும் தாங்கக் கூடியதாக துளியின் தலைப்பகுதி இருந்தாலும், அதன் வாலின் ஏதேனும் ஒரு பகுதி சிதைவுறும்போது அதன் உட்கட்டமைப்பில் தேங்கியிருக்கும் பெரிய அளவிலான நிலையாற்றல் வெளிப்பட்டு, தலைப்பகுதியை நோக்கி மிக விரைவாக முன்னேறும் முறிவுகளை உருவாக்கி மொத்த துளியையும் சில்லு சில்லாக உடையச் செய்துவிடும்.
உரூப்பர்ட்டின் துளி உடைந்து தெறிப்பதை அதிவேக காணொளி மூலம் ஆராய்ந்தபோது அதன் வால் பகுதியில் தோன்றும் “பிளவு முனை” அதன் தலைப்பகுதியை நோக்கி மிக விரைவான வேகங்களில் (1.45 1.9 கி.மீ./நொடி) அதன் இழுதகைவுப் பகுதியின் ஊடாக முன்னேறுகின்றது என்பது தெரியவந்துள்ளது.
கண்ணாடியின் ஒளிப்புகுதன்மை காரணமாய் இத்துளிகளின் உள்ளே இருக்கும் உட்புற தகைவுகளை முனைவாக்கு வடிப்பான்களுக்கு முன்னால் அவற்றை வைத்துப் பார்ப்பதன் மூலம் காட்ட இயலும், இது ஒளிமீட்சியியலில் கையாளப்படும் ஒரு செயல்முறையாகும்.
வரலாறு
தொகுஇளவரசர் உரூப்பர்ட்டின் துளி பற்றிய ஒரு பழைய அறிவியல் சான்ற குறிப்பு இலண்டனின் ராயல் சொசைட்டியின் குறிப்புகள் மற்றும் பதிவுகள்-இல் (Notes and Records) கொடுக்கப்பட்டுள்ளது. துளி பற்றிய பெரும்பான்மையான தொடக்ககால ஆய்வுகள் ராயல் சொசைட்டியில் செய்யப்பட்டனவே ஆகும்.
இத்துளிகள் வட ஜெர்மனியில் உள்ள மெக்கில்பர்கில் 1625ம் ஆண்டு வாக்கிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன என்பதற்கான நம்பகமான தகவல்கள் உள்ளன. எனினும், இவை நெதர்லாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் சாற்றப்பட்டது, எனவே 17ம் நூற்றாண்டில் இதற்கு இடாய்ச்சு கண்ணீர்த் துளிகள் என்ற பெயர் பொதுவாக வழங்கியது. ஐரோப்பா முழுவதும் விளையாட்டுப் பொருளாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ விற்பனை செய்யப்பட்ட போதிலும், இதனை எப்படி உருவாக்குவது என்ற ரகசியம் சில காலத்திற்கு மெக்கில்பர்கு பகுதியிலேயே இருந்தது.
இளவரசர் உரூப்பர்ட் இத்துளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்பது தெளிவு, ஆயினும் 1660-இல் இவற்றை முதன்முதலில் பிரிட்டனுக்குக் கொண்டு வந்து இவற்றின் வரலாற்றில் ஒரு பங்காற்றியவர் அவரே. இத்துளிகளை அவர் அரசர் இரண்டாம் சார்லசிடம் கொடுத்தார், அரசர் அவற்றை அறிவியல் முறையில் ஆயும் பொருட்டு ராயல் சொசைட்டியிடம் 1661 இல் கொடுத்தார். ராயல் சொசைட்டியின் பல பழைய பிரசுரங்கள் இத்துளிகளைப் பற்றியும் இவற்றின் மீது செய்யப்பட்ட ஆய்வுகள் பற்றியும் விளக்குகின்றன. இவற்றுள் பின்னர் ஹூக் விதியைக் கண்டறிந்த இராபர்ட்டு ஹூக்கின் 1665ம் ஆண்டைச் சேர்ந்த மைக்ரோகிராபியாவும் அடங்கும். இவரது பிரசுரம் உரூப்பர்டின் துளிகள் பற்றி அறியக் கூடிய பெரும்பான்மையான செய்திகளைச் சரியாக தருகிறது; மீட்சியியல் மற்றும் பிளவுகள் பரவுவதன் மூலம் நொறுங்கும் இயல்புள்ள பொருள்கள் உடைவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காலகட்டத்திலேயே ஹூக்கின் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிளவு முன்னேறுதல் குறித்த முழுமையான புரிதலை அடைய 1920-இல் செய்யப்பட்ட கிரிப்பித்தின் ஆய்வுவரை காத்திருக்க வேண்டியிருந்தது.
அறிவியல் பயன்பாடுகள்
தொகுஎரிமலைக் குழம்புகளில் குறிப்பிட்ட சில சூழல்களில் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகளைப் போன்ற அமைப்புகள் உருவாகின்றன என்பது குறைந்தது 19ம் நூற்றாண்டிலிருந்தே அறியப்படும் ஒன்றாகும்.[2] அண்மையில் பிரிசுடல் பல்கலைக்கழகம் மற்றும் ஐசுலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகள் வெடித்துச் சிதறுவதால் உண்டாகும் கண்ணாடித் துகள்களை ஆய்ந்து அதன் மூலம் எரிமலைகளில் உள்ள வெப்ப தகைவுகள் காரணமாய் தோற்றுவிக்கப்படும் கற்குழம்பு சிதைவு மற்றும் சாம்பல் ஆக்கத்தை மேலும் அறிய முயன்றுள்ளனர்.[3]
இலக்கியக் குறிப்புகள்
தொகுஅன்றைய இலக்கியத்தின் மூலம் அவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டியவர்களாய் இருந்தனர் என்பதை காணலாம். 1663-இல் சாமுவேல் பட்லர் தனது ஹுடிபிராசு என்ற கவிதையில் அவற்றை ஒரு உருவகமாகப் பயன்படுத்தியுள்ளார், மற்றும் பெபைசு தனது நாட்குறிப்பில் அவற்றைக் குறிப்பிடுகிறார்.
"கிரேஷாம் கல்லூரியின் பாலே" என்ற ஆசிரியர் பெயர்தெரியாத பாட்டில் வருவதன் மூலம் இத்துளிகள் இறவாவரம் பெற்றன.
சிக்மண்டு பிராய்டு, “குழு உளவியல் மற்றும் ஆணவம் பற்றிய அலசல்” (1921) என்ற தாளில் இராணுவ குழுக்கள் தலைவனை இழப்பதால் ஏற்படும் பீதி காரணமாய் சிதறிப்போவதைப் பற்றிப் பேசுகையில் “வால் உடைக்கப்பட்டதும் இளவரசர் உரூப்பர்ட்டின் துளி சிதறுவதைப் போல குழு சிதறி காணாமல் போய்விடுகிறது” என்று குறிப்பிடுகிறார்.
தனது 1988 நாவலான ஆஸ்கர் மற்றும் லூசிண்டாவில் பீட்டர் காரே ஒரு முழு அத்தியாத்தை இத்துளிகளுக்காக ஒதுக்கியுள்ளார்.[சான்று தேவை]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Amédée Guillemin (1873). The Forces of Nature: A Popular Introduction to the Study of Physical Phenomena. MacMillan & Co.
- ↑ Goodrich, Joseph (1829). "Real and supposed effect of igneous action". The American Journal of Science and Arts 16: 349. https://books.google.com/books?id=IjwPAAAAYAAJ&pg=PA349. பார்த்த நாள்: 27 September 2014.
- ↑ Cashman, Katharine; Nicholson, Emma; Rust, Alison; Gislason, Sigurdur. "Breaking magma: Controls on magma fragmentation and ash formation" (PDF). Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 September 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Mystery of the Prince Rupert's Drop – Smarter Every Day 86 Video demonstrating the creation, processes, explanation, and multiple high speed recordings of a Prince Rupert Drop.
- Prince Rupert's Drop Video demonstrating the creation, strength, and explosive fragility of a Prince Rupert Drop.
- Video showing the making and the breaking of Prince Rupert's Drops from the Museum of Glass
- Popular Science article with video detailing Prince Rupert’s Drops
- Corning Inc. "The Glass Age, Part 2: Strong, Durable Glass". Youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-03-24. Adam Savage and Jamie Hyneman demonstrate Rupert's Drops, including diagram of internal stresses