இழையநசிவு
இழையநசிவு என்பது உயிரணுக்கள், உயிருள்ள இழையம் முழுமுதிர்வற்ற நிலையில் இறப்பிற்குள்ளாவதைக் குறிக்கும். தொற்றுநோய்கள், நச்சுப்பொருட்கள், அதிர்ச்சி (trauma) போன்ற வெளிக்காரணிகளால் இவ்வகையான இழையநசிவு ஏற்படலாம். இவ்வகையான உயிரணு இழப்பானது, இயற்கையாகவே முதிர்ச்சியடந்த உயிரணுக்களில் ஏற்படும் திட்டமிடப்பட்ட உயிரணு தன்மடிவில் (Apoptosis) இருந்து வேறுபடும். உயிரணு தன்மடிவு உயிரினத்திற்கு நன்மை பயக்கும் செயலாக இருக்கும். ஆனால் இழையநசிவு உயிரினத்திற்கு தீமை அழிப்பதுடன், இறப்பிலும் முடிவடைய நேரிடலாம்.
சாதாரண உயிரணு தமடிவின்போது இறக்கும் கலங்களை விழுங்கி அழிக்கும் தின்குழியமை (Phagocytosis) செயல்முறையைத் தூண்டுவதற்காக உருவாகும் சமிக்ஞைகள் இந்த இழையநசிவின்போது உருவாவதில்லை. இதனால் இறக்கும் கலங்கள் குறிப்பிட்ட இடத்திலேயே தேங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, சிதைக்கூளமாக இருக்கும். இதனால் உயிரினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் களைவதற்காக, அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும்.[1][2][3]
இழையநசிவுக்கான காரணங்கள்
தொகுஇழையநசிவுக்கு பல வெளிக் காரணிகள் காரணமாக உள்ளன. காயம், நச்சுப்பொருள், தொற்றுநோய், புற்றுநோய், அழற்சி, இழையங்களுக்கு வழங்கப்படும் குருதியோட்டத்தடை (infarction) என்பன இழையநசிவுக்குக் காரணமாகின்றன. இழையங்களுக்கான குருதியோட்டம் தடைப்படும்போது, இழையங்களுக்கான ஆக்சிசன் அளவு குறைந்து, அதனால் இழையநசிவு ஏற்படும். சில சிலந்தி வகைகள் (எ.கா. Brown recluse spider), சில பாம்பு வகைகள் (rattlesnake, Bothrops) கடிக்கும்போது, அவற்றின் விடம் (venom) என்னும் நச்சுப்பொருட்கள் இழையத்தில் கலக்கும்போது, அவ்விடங்களில் இவ்வகையான இழையநசிவு ஏற்படும்.
இப்படியான இழையநசிவில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையைத் தூண்டுவதற்கான சமிக்ஞைகள் உருவாவதில்லை என்பதுடன், நசிவுக்குட்பட்ட இழையத்திலிருந்து உருவாகும் தீமை விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் அகுகிலுள்ள இழையங்களுக்குள் பரவும். அங்குள்ள கலங்களிலுள்ள இலைசோசோம்களின் மென்சவ்வு அழிவடைவதால், இலைசோசோமிலுள்ள நொதியங்கள் வெளியேறி கலங்களின் ஏனைய பகுதிகளையும் அழிக்கும். இவ்வாறு இறக்காத கலங்களிலிருந்து வெளியேறும் நொதியங்களின் தாக்கத்தால் இந்த தொழிற்பாடு சங்கிலித் தொடராகி தொடர்ந்து அருகிலுள்ள கலங்கள் அழிவடைந்துகொண்டே வரும். இதனால் இழைய அழுகல் (gangrene) தோன்றும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Necrosis: a specific form of programmed cell death?". Experimental Cell Research 283 (1): 1–16. February 2003. doi:10.1016/S0014-4827(02)00027-7. பப்மெட்:12565815.
- ↑ Gerschenson, L.E.; Geske, F. Jon (April 2001). "Virchow and Apoptosis" (in en). The American Journal of Pathology 158 (4): 1543. doi:10.1016/S0002-9440(10)64105-3. பப்மெட்:11290572.
- ↑ Kasper DL, Zaleznik DF (2001). "Gas gangrene, antibiotic associated colitis, and other Clostridial infections". In Stone RM (ed.). Harrison's principles of internal medicine self-assessment and board review (15th ed.). McGraw-Hill. pp. 922–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-138678-4.