இழையம் (Tissue (biology)) (அல்லது திசு ) என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் (Histopathology) என அழைக்கப்படும்.

ஹீமோடொக்சிலினும் இயோசினும் கொண்டு சாயமூட்டப்பட்ட மனித நுரையீரல் திசுக்களை நுண்நோக்கியினூடாகப் பார்க்கையில் தெரியும் தோற்றம்

ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது.[1][2][3]

இழையங்களை பரஃபீன் (Paraffin) எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து (Sectioning), இலகுவாகப் பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி (Staining), பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான இலத்திரன் நுண்நோக்கி (Electron Microscope), நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு (Immunoflorescence), உறைநிலையில் திசுக்களைப் படலமாக வெட்டியெடுத்தல் (frozen tissue sectioning) போன்றன திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, இழையங்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும், முன் கூட்டியே கணிக்கவும் இயலும்.

விலங்கு இழைய வகைகள்

தொகு

விலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும்.

புறவணியிழையம்

தொகு
 
புறவணியிழையத்தின் வகைகள்.

உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது.

இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களிலிருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணுயிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.

இணைப்பிழையம்

தொகு

இணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை அல்லது வேறுபட்ட இழையங்களை இணைப்பவையாக, அவற்றிற்கு ஆதரவளிப்பவையாக அல்லது அவற்றைப் பிரித்து வைப்பவையாக இருக்கும் இழையமாகும். குருதி, எலும்பு, கொழுப்பிழையம் போன்றன இவ்வகை இழையங்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும்.

தசை இழையம்

தொகு
 
தசைகளின் வகைகள் (வெவ்வேறு உருப்பெருக்க அளவுகளில் காட்டப்பட்டுள்ளது)

தசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும்.

  • மழமழப்பானதசை அல்லது அழுத்தமான தசை (Smooth muscle): இவை உறுப்புக்களின் உள் படையாகக் காணப்படும்.
  • எலும்புத் தசை (Skeletal muscle): இவை எலும்புகளுடன் தொடர்புடையவையாக இருந்து அசைவுக்கு உதவும்.
  • இதயத் தசை (Cardiac muscle): இது இதயத்தில் காணப்படும். இதயம் சுருங்கி விரிய உதவுவதால் குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்புவதில் பங்கெடுக்கும்.

நரம்பிழையம்

தொகு

நரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும்.

 
நரம்பிழையத்தைக் காட்டும் ஒரு மாதிரி.

தாவர இழைய வகைகள்

தொகு
 
பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:
1. தண்டின் நடுவில் உள்ள தக்கை எனப்படும் மென்மையான பகுதி (Pith),
2. மூலக்காழ் (Protoxylem),
3. காழ் (Xylem) I,
4. உரியம் (Phloem) I,
5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma),
6. மேற்பட்டை (Cortex),
7. மேற்றோல் (Epidermis)

தாவர இழையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • புறத்தோல் அல்லது மேற்றோல் (Epidermis): இலைகளினதும், இளம் தாவரத்தினதும் வெளி மேற்பரப்பை ஆக்கும் கலங்களால் ஆன இழையமாகும்.
  • கலனிழையம் (Vascular tissue): முக்கியமாக இரு இழைய வகைகளைக் கொண்டிருக்கும். அவை காழ், உரியம் என்பனவாகும். இவை ஊட்டச்சத்து, திரவங்களைத் தாவரத்தின் உள்ளாகக் கடத்தும் இழையங்களாகும்.
  • அடியிழையம் (Ground tissue): இவ்வகை இழையமே மிகவும் குறைவாக வேறுபாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். இவ்விழையம் ஒளிச்சேர்க்கையில் உணவைத் தயாரிக்கும் இடமாகவும், அவற்றைச் சேமித்து வைக்கும் இடமாகவும் இருக்கும்.

தாவர இழையங்கள் வேறொரு வகையிலும் பிரிக்கப்படும்.

பிரியிழையம் (Meristematic tissue)

தொகு

இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை.
இவ்வகை இழையம் மூன்று பிடிவுகளில் வருகின்றது.

  • நுனிப்பிரியிழையம்: தண்டு, வேர் என்பவற்றின் வளரும் நுனிப்பகுதியில் காணப்படும். இதன் தொடர்ச்சியான பிரிவினால், தண்டு, வேர்ப்பகுதிகள் நீட்சியுற்று தாவர வளர்ச்சியில் உதவும். இது முதன்மையான வளர்ச்சி என்றும் நேர்வளர்ச்சி என்றும் அழைக்கப்படும்.
  • பக்கப்பிரியிழையம்: இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் ஒரு தளத்திலேயே பிரிவைக் கொண்டிருப்பதனால், இதனால் உண்டாகும் வளர்ச்சி பக்க வளர்ச்சியாக இருக்கும். இதனால் தண்டு, வேர் போன்ற அங்கங்களின் விட்டம் அதிகரிக்கும். மரங்களின் வெளிப்பட்டைக்கு கீழாக இருக்கும் தக்கை மாறிழையம் (cork cambium), இருவித்திலைத் தாவரங்களின் கலனிழையத்தில் இருக்கும் கலனிழைய மாறிழையம் என்பன இவ்வகை இழையங்களாகும்.
  • இடைப்பிரியிழையம்: இவை நிரந்தர இழையங்களுக்கு இடையில் காணப்படும். கணுக்களின் அடிப்பகுதி, கணுக்களுக்கு இடையிலான பகுதிகள், இலையின் அடிப்பகுதி போன்ற இடங்களில் இவ்வகை இழையம் காணப்படும். தண்டுகளின் பக்க வளர்ச்சியிலும், தாவரங்களின் சில பகுதிகளில் நீட்சிக்கும் உதவும்.

நிலை இழையம்(Permanant tissue)

தொகு

பிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிலை இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல்முறையே கலவேறுபாடு (cell differentiation) எனப்படுகின்றது. இந்த நிலை இழையம் மேலும் பல வகையாகப் பிரிக்கப்படும்.

எளிமையான நிலை இழையம்

தொகு
  • புடைக்கலவிழையம் (Parenchyma)
  • பச்சையவிழையம் (Chlorenchyma)
  • காற்றுக்கலவிழையம் (Arenchyma)
  • ஒட்டுக்கலவிழையம் (Cloeenchyma)
  • வல்லருகுக்கலவிழையம் (Sclerenchyma)
  • மேற்றோல் அல்லது புறத்தோல் (Epidermis)
புடைக்கலவிழையம்
தொகு

இது செலுலோசினால் ஆன மிக மெல்லிய கலச்சுவர் கொண்ட கலங்களாலானது. கலங்களுக்கிடையே கல இடைவெளியையும் கொண்டிருக்கும். இவ்விழையத்திலிருக்கும் கலங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவானதாகவும், வடிவத்தில் கோள வடிவ அல்லது முட்டை வடிவ அமைப்பையும் கொண்டிருக்கும். இது தாவரங்களின் பல பகுதிகளிலும் காணப்படும். வேர், தண்டு, இலை, பூ, பழம் ஆகிய எல்லா அங்கங்களிலும் காணப்படும். பொதுவாக மேற்றோல் அல்லது தக்கைப் பகுதியிலும், இலைகளில் இலைநடுவிழையத்திலும் காணப்படும். இவ்விழையத்தின் முக்கிய தொழில், மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருட்களைச் சிதைமாற்றம் எனப்படும் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படுத்தி சேமித்தல் ஆகும். அத்துடன் கழிவுப் பொருட்களான பசை, பிசின், சில கனிமப் பொருட்களையும் சேமிக்கின்றது.

பச்சையவிழையம்
தொகு

இவ்விழையத்தின் கலங்கள் பச்சைய நிறமியையுடைய பச்சையவுருமணிகளைக் கொண்ட கலங்களால் ஆனது. இவை பொதுவாகப் பச்சை இலைகளின் மென்மையான இழையத்திலும், செடிகளில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய தண்டின் மேற்பட்டைப் பகுதியிலும் காணப்படும்.

காற்றுக்கலவிழையம்
தொகு

இவை ஒருவகை புடைக்கலவிழையமே ஆகும். நீர்த் தாவரங்களில், இவ்விழையத்திலுள்ள கல இடைவெளிகள் பெரிதாக அமைந்து காற்றுக் குழிகளை உருவாக்குவதால், அந்தத் தாவரங்கள் மிதக்கும் தன்மையுடையவையாக இருக்க முடிகின்றது.

ஒட்டுக்கலவிழையம்
தொகு
 
ஓட்டுக் கலவிழையக் கலங்களில் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்

இவையும் செலுலோசாலான மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பினும், பல கலங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகளான கலத்தின் மூலைப் பகுதிகளில் செலுலோசு, பெக்டின் போன்ற பொருட்களால் கலச்சுவர் தடிப்படைந்து காணப்படும். இங்கே கலங்கள் கல இடைவெளிகளின்றி மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு இருக்கும். இவை பொதுவாகத் தண்டுகள், இலைகளில், தோலுக்குக் கீழான இழையமாகக் காணப்படும். இவை ஒரு வித்திலைத் தாவரத்திலோ, வேர்களிலோ காணப்படுவதில்லை.

இளம் தாவரத் தண்டுகளில் ஒரு ஆதாரம் வழங்கும் இழையமாகத் தொழிற்படும். இவை தாவர உடல்களில் இழுவிசை, மீள்திறன் போன்ற இயல்புகள் உருவாகக் காரணமாகும். இலைகளின் கரைப்பகுதிகளில் அமைந்திருந்து, காற்றில் அவை கிழிந்து போகாமல் பாதுகாக்கும். அத்துடன் எளிய காபோவைதரேட்டு பதார்த்தங்களை உருவாக்குவதிலும், மாப்பொருளைச் சேமிப்பதிலும் இவ்விழையம் பங்கு கொள்ளும்.

வல்லருகுக்கலவிழையம்
தொகு
 
தாவரத்தின் அடிப்படை இழையத்தில் உள்ள நார் வல்லருகுக்கலவிழையத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்.

இவ்விழையம் தடித்த கலச்சுவரைக் கொண்ட இறந்த கலங்களாலானது. இக்கலங்கள் லிக்னின் என்னும் பதார்த்தத்தால் ஆன தடித்த, இறுக்கமான துணைக் கலச்சுவரைக் கொண்டுள்ளன. இந்த லிக்னின் படிவானது மிகவும் தடிப்பாக இருப்பதனால், இக்கலங்கள் வளையாத, உறுதியான, நீரை உட்புகவிடாத இயல்புகளைக் கொண்டிருக்கும். கல இடைவெளியற்று, மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட கலங்கள் பல்கோண வடிவத்தைக் கொண்டிருக்கும்.
இவ்விழையம் முக்கியமாகக் கீழ்த்தோல், பரிவட்டவுறை, துணைக் காழ், துணை உரியம் போன்ற இடங்களில் காணப்படும். இவ்விழையத்தின் முக்கியமான தொழில் தாவரத்துக்கு உறுதியைக் கொடுப்பதனால், அவற்றிற்கான ஆதாரத்தை வழங்குவதாகும்.
இவ்விழையத்தின் கலங்களை இரு வகைப்படுத்தலாம்.

  • நார் (fibres): இவை நீளமாகவும், கூர்மையான கல முடிவுகளையுடைய நீட்சியடைந்த கலங்களைக் கொண்டுமிருக்கும்.
  • வன்கலங்கள் (sclerids): இவை லிக்னின் ஏற்றப்பட்ட மிகத் தடித்த கலச்சுவர் கொண்ட, குறுகிய கலங்களாகும்.
மேற்றோல்
தொகு

தாவரத்தின் எல்லாப் பகுதிகளையும் மூடியிருக்கும் தனிப் படலத்தால் ஆன கலங்களைக் கொண்டதே இந்த மேற்றோல் ஆகும். இவை பொதுவாகத் தட்டையான கலங்களால் ஆனது. கலங்களின் மேற்சுவரும், பக்கச் சுவர்களும், உட்சுவரை விடத் தடிப்பமானதாக இருக்கும். இங்கே கலங்கள் கல இடைவெளியற்று, ஒரு தொடர்ந்த விரிப்பாக அடுக்கப்பட்டும் தாவரத்தை மூடி இருந்து பாதுகாப்பளிக்கும்.

 
இலையின் உடற்கூற்றியலைக் காட்டும் வரிப்படம்.

சிக்கலான நிரந்தர இழையம்

தொகு

ஒரே கல உற்பத்தியைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இழையக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்காக ஒன்றாக இணைந்து தொழிற்படுமாயின் அவை சிக்கலான இழையம் எனப்படும். கலனிழையங்களான காழ், உரியம் இவ்வகை இழையங்களாகும். மாறிழையத்தில் உள்ள பெற்றோர்க் கலங்கள் இவ்வகையான காழ் உரிய இழையங்களை உருவாக்கும். இவை நீர், கனிமம். ஊட்டச்சத்துக்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தாவரத்தினுள் கடத்துவதில் பங்கெடுக்கும்.

காழ்
தொகு

கலன்றாவரங்களில் நீர், கனிமங்களைக் கடத்தும் முக்கிய இழையமாகக் காழ் இருக்கிறது. தாவரத்தின் தண்டு, வேர்களின் நடு அச்சைச் சுற்றி, குழாய் போன்ற அமைப்புக்களை இந்த இழையம் ஏற்படுத்தி இருக்கும். அக்குழாய்களின் ஊடாக நீர், கனிமம்மேல் நோக்கிக் கடத்தப்படும்.

உரியம்
தொகு

தாவரத்தால் உற்பத்தியாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கரைந்த நிலையில் தாவரத்தில், தேவைக்கேற்ப மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ, எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் இந்த உரிய இழையம் உதவும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jones, Roger (June 2012). "Leonardo da Vinci: anatomist". British Journal of General Practice 62 (599): 319. doi:10.3399/bjgp12X649241. பப்மெட்:22687222. 
  2. Toledo-Pereyra, Luis H. (January 2008). "De Humani Corporis Fabrica Surgical Revolution". Journal of Investigative Surgery 21 (5): 232–236. doi:10.1080/08941930802330830. பப்மெட்:19160130. 
  3. Betts, J Gordon. "1.2 Structural Organization of the Human Body - Anatomy and Physiology". Anatomy and Physiology (in ஆங்கிலம்). Openstax. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-947172-04-3. Archived from the original on 2023-03-24. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழையம்&oldid=3769037" இலிருந்து மீள்விக்கப்பட்டது