கொழுப்புகள் (Fats) எனப்படுபவை பொதுவாக கரிம கரைப்பான்களில் கரையக் கூடியதும், நீரில் கரையாததுமான பரந்த சேர்மங்களைக் குறிக்கும். வேதி முறைப்படி டிரைகிளிசரைடுகள், கிளிசராலின் மும்மணமியங்கள் மற்றும் பல கொழுப்பு அமிலங்களையும் கொழுப்புகள் எனலாம். இவற்றின் கட்டமைப்பு மற்றும் பொதிவுகளைப் பொருத்து கொழுப்புகள் திடமாகவோ அல்லது திரவமாகவோ அறைவெப்பநிலையில் காணப்படும். எண்ணெய்கள், கொழுப்புகள் மற்றும் கொழுமியங்கள் முதலான சொற்கள் கொழுப்பைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டாலும், எண்ணெய்கள் சாதாரண அறைவெப்பநிலையில் திரவங்களாக இருக்கும் கொழுப்புகளையும், திடமாக இருக்கும் கொழுப்புகளைக் கொழுப்புகள் என்றும் வழக்கமாக அழைக்கிறோம். திட மற்றும் திரவ கொழுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை வழக்கமாக மருத்துவ மற்றும் உயிரிவேதியியல் சூழலில் கொழுமியம் (Lipids) என்றழைக்கிறோம். மேலும் நீரில் கரையாத, வழுவழுப்புத் தன்மைக்கொண்ட எந்தவொரு பொருளையும், அதன் வேதிவடிவத்தைப் பொருட்படுத்தாது, எண்ணெய் என்றழைக்கிறோம். உதாரணமாக, பெட்ரோலியம் (அல்லது கச்சா எண்ணெய்), வெப்பமூட்டும் எரி எண்ணெய் மற்றும் இன்றியமையா எண்ணெய்கள்[1].

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

கொழுப்புகள், கொழுமியங்களில் உள்ள ஒரு பகுப்பாகும். மற்ற கொழுமியங்களிலிருந்து கொழுப்புகள் வேதிவடிவத்திலும், இயற்பியல் பண்புகளிலும் வேறுபடுகின்றன. கொழுப்பு மூலக்கூறுகள் வாழ்வின் பல நிலைகளிலும் கட்டமைப்பு மற்றும் வளர்சிதைமாற்ற பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பெரும்பாலான சார்பூட்ட உயிரிகளின் (மனிதர்கள் உட்பட) உணவில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. கணையத்தில் உருவாகும் கொழுமியச்சிதைப்பி நொதிகளால் கொழுப்புகளும், கொழுமியங்களும் உடலில் சிதைக்கப்படுகின்றன.

உண்ணத்தக்க விலங்குக் கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய், வெண்ணெய்/நெய் மற்றும் திமிங்கிலக் கொழுப்பு. இவை விலங்குகளின் தோலுக்கு அடியிலிருந்தும், பால் மற்றும் இறைச்சியிலிருந்தும் கிடைக்கும் கொழுப்புகளிலிருந்துப் பெறப்படுகின்றன. உண்ணத்தக்க தாவரக் கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: நிலக்கடலை, சோயா அவரை, சூரியகாந்தி, எள், தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய்கள். அடுதலுக்கு உபயோகிக்கப்படும் காய்கறி நெய் (டால்டா), அடுதலிலும், பரப்பியாகவும் பயன்படும் வனஸ்பதி ஆகியன மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய்களை ஹைட்ரசனேற்றம் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன.

இந்த கொழுப்புகளுக்கான உதாரணங்களை நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் நிறைவுறாக் கொழுப்புகள் என வகைப்படுத்தலாம். நிறைவுறா கொழுப்புகளை இயற்கையில் சாதாரணமாகக் காணப்படும் ஒருபக்ககொழுப்புகள் என்றும், இயற்கையில் அரிதாகவும் ஆனால் பகுதி ஹைட்ரசனேற்றம் செய்யப்பட காய்கறி எண்ணெய்களில் பெருமளவிலும் உள்ள மாறுபக்ககொழுப்புகள் என்றும் பகுக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Maton, Anthea (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-981176-1. இணையக் கணினி நூலக மைய எண் 32308337. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

மேற்கொண்டு படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பு&oldid=3812417" இலிருந்து மீள்விக்கப்பட்டது