திமிங்கிலம்

திமிங்கிலம்
Humpback whale
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
வரிசை:

திமிங்கிலம் (திமிங்கலம், Whale) நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.[1][2][3]

உடலமைப்பு

தொகு

திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும். இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.

தோற்றம்

தொகு
 
Ambulocetus natans – ஆரம்ப கால திமிங்கிலம்

திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை நீர்-நிலம் இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும், பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.

சுவாசித்தல்

தொகு

உண்மையில் திமிங்கிலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலூட்டிகள் என்ற விலங்கினங்களாகும். திமிங்கிலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதில்லை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை, தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன. திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கிலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதயத் துடிப்பு மற்றும் ஒட்சிசன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஒட்சிசன் மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது. இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.

மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு

தொகு

திமிங்கிலங்கள் பாலுட்டி வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன.

திமிங்கிலங்கள் மீன்கள்
வெப்ப இரத்த பிராணி குளிர் இரத்த பிராணி
நுரையீரல் முலம் சுவாசிக்கின்றன பூக்கள் மூலம் சுவாசிக்கின்றன
குட்டி போட்டு பால் கொடுக்கின்றன முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
செதில்களற்ற தோலையும், முடிகளையும் பெற்றுள்ளன செதில்கள் உள்ளன

வாழ்க்கைமுறை

தொகு

பொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கிலங்கள் வலசை போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இவை இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம் மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கிலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனியாக வாழ்கின்றன. திமிங்கிலங்கள் ஊனுண்ணிகளாகும். நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.

செய்தித் தொடர்பு

தொகு

திமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கிலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இது ஒரு இசையைப் போல இருக்கும் இத்தகைய திமிங்கல ராகம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீரில் பயணிக்கின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்ற திமிங்கிலங்களுடன் தொடர்பு கொள்கின்றன.

இனப்பெருக்கமுறை

தொகு

இனப்பெருக்கக் காலங்களில் ஆண் திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.

ஆழ்கடல் பயணம்

தொகு

திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. விந்துத் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். விந்துத் திமிங்கிலங்கள் 7000 அடி ஆழம் வரை சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் வெப்பநிலைசென்டிகிரேடு வரை செல்லும் போதும் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய வகையில் திமிங்கிலங்கள் அடர்த்தியான கொழுப்பு படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய கொழுப்பு படிவங்கள், கடுங்குளிர் திமிங்கிலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கிலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் நுரையீரல் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக நீர் அழுத்தம் அதற்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.

அழிந்துவரும் திமிங்கிலங்கள்

தொகு
  • கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலகட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
  • 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. நோர்வே, கிறீன்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
  • 'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நோர்வே, யப்பான் நாடுகள் திமிங்கில வேட்டையை தொடர்கின்றன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "When whales walked on four legs". www.nhm.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
  2. "whale (n.)". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
  3. "hwæl". Bosworth-Toller Anglo-Saxon Dictionary. பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிங்கிலம்&oldid=4099527" இலிருந்து மீள்விக்கப்பட்டது