மனித இரையகக் குடற்பாதை

வாயில் தொடங்கிக் கழிவாயில் முடிவது

மனித இரையகக் குடற்பாதை (gastrointestinal tract - GIT) என்பது, மனிதனின் வயிறும், குடலும் சேர்ந்த மனித சமிபாட்டு மண்டலத்தின் ஒரு பிரதானப் பகுதியாகும். [1] பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது.[1] இவற்றுடன் நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், கணையம், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளும் இணைந்து மனித சமிபாட்டு மண்டலத்தை உருவாக்குகிறது.[2][3] இம்மண்டலத்தில் சமிபாடு என்பது பல நிலைகளில் நிகழ்கிறது. சமிபாட்டுச் செயல்முறை வாயில் உணவு அரைக்கப்படுவதிலிருந்து தொடங்கி, உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடலினுள் அகத்துறிஞ்சப்பட்ட பின்னர், குதம் வழியாக கழிவுகள் வெளியேறுவதுவரை நடைபெறுகிறது.

மனித இரையகக் குடற்பாதை (சமிபாட்டுத் தொகுதி)
வயிறு, பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றைக் காட்டும் படம்
தொகுதி சமிபாட்டுத்தொகுதி

மனித இரையகக் குடற்பாதையில் இருக்கும் குடல் நுண்ணுயிரிகளில், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் முக்கிய பங்களிக்கும், ஆயிரக் கணக்கான வெவ்வேறு பாக்டீரியாக்களும் இருக்கின்றன.[4][5]

மனிதரில், இந்த இரையகக் குடற்பாதையின் நீளமானது, அண்ணளவாக மனித உடலின் நீளத்தை விட ஏழு மடங்காக இருக்கும்.[6] பிணக்கூறு ஆய்வின்போது, வளர்ந்த மனிதரில், இந்த குடற்பாதையின் முழுநீளமும் கிட்டத்தட்ட 9 மீட்டர் (30 அடி) நீளமாக இருக்கும்.[7][8] பிணக்கூறு ஆய்வின்போது, அளக்கப்படும் அளவைவிட உயிருள்ள மனிதரில் இந்த நீளம் குறைவாகவே இருக்கும். காரணம் செயற்படு நிலையில், இரையகக் குடற்பாதையின் பல பகுதிகளும் மடிப்புகளைக்கொண்டவையாக, முறுகல் நிலையில் சுருங்கி விரியும் இயல்புடனும் இருப்பதாகும்.

மனித இரையகக் குடற்பாதையானது மேல் இரையகக் குடற்பாதை (upper GIT), கீழ் இரையகக் குடற்பாதை (lower GIT) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.[1] அதேவேளை, முளைய விருத்தியில் உறுப்புக்களின் உருவாக்க அடிப்படையில், இரையகக் குடற்பாதையின் பகுதிகள் முன்குடல் (foregut), நடுக்குடல் (midgut), பின்குடல் (hindgut) எனவும் பிரித்தறியப்படுகிறது.

சமிபாட்டை ஒழுங்குபடுத்தவும், நிகழ்த்தவும் தேவையான பல நொதியங்களையும், Gastrin, Secretin, Cholecystokinin, Ghrelin போன்ற இயக்குநீர்களையும் இரையகக் குடற்பாதை உருவாக்கி, குடற்பாதையினுள்ளே வெளியேற்றுகிறது.[9][10][11] நொதியங்கள் நாளமுள்ள சுரப்பிகளாலும், இயக்குநீர்கள் நாளமில்லாச் சுரப்பிகளாலும் சுரக்கப்படும்.

கட்டமைப்பு தொகு

கட்டமைப்பு என்பது இரையகக் குடற்பாதையின் மொத்த உடற்கூற்றியல், நுண்ணோக்கி உடற்கூற்றியல், இழையவியல் என்பவற்றைக் குறிக்கும்.

மனித இரையகக் குடற்பாதையானது, மேல் இரையகக் குடற்பாதை, கீழ் இரையகக் குடற்பாதை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேல் இரையகக் குடற்பாதை என்பது வாய், தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்T[12] கீழ் இரையகக் குடற்பாதை என்பது பெரும்பாலான சிறுகுடலின் பாகங்களையும், பெருங்குடலையும், குதத்தையும் உள்ளடக்கும்.

வேறொரு வகையில், முளைய விருத்தியில் எவ்வாறு தோன்றியது என்பதன் அடிப்படையில், இப்பாதை முன்குடல், நடுக்குடல், பின்குடல் எனவும் பிரித்தறியப்படும். பொதுவாக முளையமாக இருக்கையில் ஆரம்ப நிலையிலேயே இவ்வாறாகப் பிரித்தறியப்படுகின்றதாயினும், பின்னர் வளர்ந்த நிலையிலும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தி பகுதிகள் அறியப்படுகின்றன.

பிரிவுகள் வளர்ந்த மனிதனில் பகுதிகள்
முன்குடல் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடலின் முதல் இரு பகுதிகள், கல்லீரல், பித்தப்பை, கணையம்
நடுக்குடல் முன்சிறுகுடலின் கீழ்ப்பகுதி, சிறுகுடலின் ஏனைய பகுதிகள் (நடுச்சிறுகுடலும் - Jejunum, பின்சிறுகுடலும் - Ileum), பெருங்குடல்வாய்ப்பகுதி (cecum), குடல்வால் அல்லது குடல்வளரி, ஏறு பெருங்குடல் (Ascending colon), குறுக்குப் பெருங்குடலின் மூன்றில் இரு பகுதி
பின்குடல் குறுக்குக் குடலின் இறுதி மூன்றில் ஒரு பகுதி, இறங்கு பெருங்குடல் (descending colon), மலக்குடல் (rectum), மலத்துவாரத்தின் மேற்பகுதி

மனித இரையகக் குடற்பாதையின் பகுதிகள் தொகு

 
சமிபாட்டுத் தொகுதி

வாய் தொகு

உணவுக் குழாயின் முதல் பகுதி வாயாகும். செரிமானத்தின் முதல் செயல்முறை இங்குதான் தொடங்குகிறது. உமிழ்நீர் சுரப்பிகள், பற்கள், நாக்கு போன்ற பல சீரணமண்டலக் கட்டமைப்புகள் வாயில் உள்ளன [13]. வாய், வாய்க்குழி என்ற இரண்டு பகுதிகள் வாய்ப்பகுதியில் உள்ளடக்கியுள்ளன.பற்கள், உதடுகள் மற்றும் கன்னங்கள் ஆகியனவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளி வாய்குழியாகும் [14], வாய் உதடுகளில் ஆரம்பமாகித் தொண்டை வரை நீடிக்கிறது, வாய்க்குழிப்பகுதிக்கு பற்கள் அரணாக அமைந்துள்ளன. வாய்க்குழியின் மேற்பகுதி அண்ணமாகவும் கீழ்ப்பகுதி நாக்கும் ஆக்ரமித்துள்ளன. வாய்க்குழியைச் சுற்றிலும் உமிழ்நீர் சுரப்பிகள் புதைந்து கிடக்கின்றன. வாய்க்குழியைச் சுற்றிச் சளிச்சவ்வுப் படலம் படர்ந்துள்ளது.

தொண்டைக்குழி தொகு

வாய்க்குழிக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் அமைந்திருப்பது தொண்டைக்குழியாகும். மூக்குத் தொண்டைக்குழி, வாய்த்தொண்டைக்குழி, பெருமூச்சுக்குழாய்த் தொண்டைக்குழி என்று மூன்று வகையாக இதைப் பிரிப்பர்.

உணவுக்குழாய் தொகு

உணவுக்குழாய் என்பது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[15]. இதை கழுத்துப்பகுதி, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

இரைப்பை தொகு

 

இரைப்பை தசையினால் ஆன ஒரு பை போல உள்ளது. இதன் மேல் கீழ் முனைகள் அசைவற்று பிணைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகள் யாவும் நன்கு அசையக்கூடிய வகையில் தகவமைக்கப்பட்டுள்ளன. விலா எலும்புகளுக்குள் மறைந்து காணப்படும் இரைப்பை நபருக்கு நபர் அளவில் மாறுபடுகிறது.பொதுவாக இரைப்பை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

இரைப்பையில் சமிபாட்டு நொதியங்கள் சில உருவாக்கப்படுகின்றன. உணவை உடைக்கும் வேலை வயிற்றிலும் தொடர்கின்றது. இங்கே வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து உணவைக் கடைவதன் மூலம் அதனை உடைத்து நொதியத்துடன் கலக்குகின்றது. அத்துடன் அங்கே சுரக்கப்படும் அமிலத் தன்மையான நீரானது அங்கு சுரக்கப்படும் நொதியங்கள் சிக்கலான மூலக்கூறுகளை வேதியியல் செயல்முறையில் உடைத்து எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்கு உதவுகின்றன. அத்துடன் விட்டமின் B -12, அல்ககோல் போன்ற சில பொருட்கள் இந்த இரைப்பைப் பகுதியிலேயே நேரடியாக உறிஞ்சப்படுகின்றன.

குடல் தொகு

குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது அல்லது நமதின் வயிற்றில் உள்ளது என்றும் கூறலாம். குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது அகும். குடல் சிறுகுடல், பெருங்குடல் என்று இருவகைப்படும்.

சிறுகுடல் தொகு

இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:
   முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
   நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
   பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.

சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.

முன்சிறுகுடல்:

இங்கு கணையத்தில் சுரக்கப்படும் கணையச்சாறு மற்றும் பித்தப்பையிலிருந்து பித்தநீர் என்பன கொண்டு வரப்படும். இங்கு வந்து சேரும் நொதியங்கள் புரதத்தைக் கூறுகளாகப் பிரிப்பதுடன், கொழுப்பைச் சிறு கோளங்களாகப் பிரிக்கும். முன்சிறுகுடலில் காணப்படும் புறூனரின் சுரப்பியினால் இருகாபனேற்று உற்பத்தியாகும்.

இடைச்சிறுகுடல்:

இது சிறுகுடலின் நடுப்பகுதியாகும். இது சடைமுளைகளைக் கொண்டிருப்பதால் உணவு அகத்துறுஞ்சப் படுவதற்கான மேற்பரப்பு அதிகரிக்கப்படுகின்றது. இங்கு அமினோ அமிலம், கொழுப்பமிலம், வெல்லங்கள் என்பன அகத்துறிஞ்சப்படுகின்றன.

பின்சிறுகுடல்:இதில் காணப்படும் சடைமுளைகள் முதன்மையாக விட்டமின் B12 மற்றும் பித்த அமிலங்கள் மற்றும் மீந்திருக்கும் போசணைக் கூறுகளை அகத்துறுஞ்சும்.

பெருங்குடல் தொகு

பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

  • பெருங்குடல் வாய்: இது சிறுகுடலில் இருந்து பெருங்குடல் தொடங்கும் இடமாகும். இப்பகுதியில் குடல்வளரி எனப்படும் நீட்டம் காணப்படும்.
  • குடற்குறை: இது ஏறுகுடற்குறை, கிடைக்குடல், இறங்கு குடற்குறை மற்றும் வளைகுடல் என பகுக்கப்படும். இதன் முக்கிய தொழிற்பாடு நீரை அகத்துறுஞ்சுவதாகும். இதில் அடங்கியுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் K முதலான பயனுள்ள தொகுப்புகளையும் செய்யக் கூடியது.
  • மலக்குடல் (அ) நேர்குடல்: இது 12 சதம மீட்டர் (4.7 அங்) நீளமானது. மலக்கழிவுகளை தற்காலிகமாகச் சேமிப்பது இதன் தொழிற்பாடாகும். சுவர்களின் தசைகள் அசைவு மூலம் மலம் வெளித்தள்ளப்படும்.

பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தொகு

குடல் நீட்சிகள் இருந்தால் மலக்குடலில் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. இது அல்சரேட்டிவ் கொலிடிஸ் (Ulcerative Colitis ) எனப்படும் . பெருங்குடல் சுவரில் புண் இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய் இருப்பின் அடுத்தவர்களுக்கும் வரவாய்ப்பிருக்கிறது. பெருங்குடலில் பெரிய பகுதி மலக்குடல். பெருங்குடல் வயிற்றுக்கு அருகில் இருக்கும். மலக்குடல் மிகவும் கீழே இருக்கும். இந்த இரண்டிலும் புற்றுநோய் வரக் காரணங்கள் ஒன்றாய் இருக்கின்றன. புற்றுநோயால் மலம் வெளியேறாமல் அடைப்பு ஏறடபடும். மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்கள் அடைப்பு ஏற்படுவதற்கு முன் ஆரம்பநிலையிலேயே தகுந்த முறையில் சிகிச்சையை பெற்றால் நீண்ட நாள் வாழலாம்.

முளையவியல் தொகு

குடல் அகத்தோலில் இருந்து விருத்தியடைந்த ஒரு பாகமாகும். முளையவிருத்தியின் கிட்டத்தட்ட 16வது நாளில் முளையம் இரு திசைகளில் மடிப்புறத் தொடங்கும்.

இழையவியல் தொகு

 
General structure of the gut wall

மனித இரையகக் குடற்பாதை பொதுவான இழையவியல் கட்டமைப்புடன் அதன் தனித்துவமான தொழிற்பாடுகளுக்குரிய விருத்திகளையும் கொண்டிருக்கும்.[16] இது பின்வரும் இழையங்களை கொண்டிருக்கும்.

  • சீதமென்சவ்வு - உட்புறப் படலம்
  • கீழ் சீதமென்சவ்வு - சீத மென்சவ்விற்கும், தசை அடுக்குகளுக்கும் இடையில் இருக்கும் படலம்.
  • தசை அடுக்குகள் / தசைப் படலங்கள் - கீழ்சீத மென்சவ்வையும், குழாயின் வெளி மேற்பரப்பையும் பிரித்து தசை அடுக்குகள் காணப்படும்.
  • குழாயின் அதி வெளிப்புறத்தில் காணப்படும் இணைப்பிழையம்

சீதமென்சவ்வு தொகு

சீதமென்சவ்வு இரையகக் குடற்பாதையின் உள்ளக அணி ஆகும். இரையகக் குடற்பாதையில், இதற்கு உள்ளான குழாய்க்குள் உணவு கொண்டுசெல்லப்படும். இரையகக் குடற்பாதையின் வெவ்வேறு பகுதிகளில், அந்தந்த இடத்தின் தேவைகளுக்கேற்ப சீத மென்சவ்வானது விசேடமான அமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

இது மூன்று மேலணிகளைக் கொண்டது:

  • புறவணியிழையம் - இதுவே சுரப்புகளுக்கும், சமிபாட்டுக்கும், அகத்துறிஞ்சலுக்கும் பயன்படும் அது உள்ளான படலமாகும்.
  • தனித்துவப் படை (Lamina propria) - இணைப்பிழையத்தைக் கொண்டிருக்கும்.
  • தசைச் சீதச்சவ்வு (Muscularis mucosae) - மெல்லிய மழமழப்பான தசைப் படலம். இது சுற்றிழுப்பசைவு மூலம் சீரான உணவு கடத்தலை அதிகரிக்க உதவும்.

கீழ் சீதமென்சவ்வு தொகு

இது இணைப்பிழையங்கள், குருதிக்குழாய்கள், நிணநீர்க் கலன்கள், மற்றும் நரம்புகளைக் கொண்டு சீரற்ற படையாகக் காணப்படும்.

தசைப் படலங்கள் தொகு

தசைப் படலங்களில் உட்புறமாக வட்டத் தசை நார்களும் (circular), வெளிப்புறமாக நீளத்தசை நார்களும் (longitudinal) காணப்படும். வட்டத் தசை உணவு பின்னேக்கி நகர்வதைத் தடுப்பதிலும், நீளத்தசை உணவுக்குழாய் சுருங்குவிரிவதிலும் பங்கெடுக்கின்றன. ஆயினும் இந்த படை மெய்யான நீள்பக்கத்தசை மற்றும் வட்டத்தசைகள் அல்ல. இவை சுருளியுருவான தசைகள்.

நோயியல் தொகு

சமிபாட்டுத்தொகுதியைப் பல நோய்கள் பாதிக்கின்றன. அவையாவன,

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் gastrointestinal tract
  2. மெஷ் Gastrointestinal+tract
  3. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் digestive system
  4. Zimmer (2011). "Bacterial Ecosystems Divide People Into 3 Groups, Scientists Say". The New York Times. pp. 17. 
  5. "Commensal microbe-derived butyrate induces the differentiation of colonic regulatory T cells". Nature.
  6. "Length of digestive tract". vivahealth. Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Digestive System". Science. National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Quick Anatomy Lesson: Human Digestive System". American Society for Gastrointestinal Endoscopy. Archived from the original on 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Hormones and the Gastrointestinal Tract". eMedMD.com. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "The Human Gastrointestinal (GI) Tract". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. Nelson RJ. 2005. Introduction to Behavioral Endocrinology. Sinauer Associates: Massachusetts. p 57.
  12. மெஷ் Upper+Gastrointestinal+Tract
  13. Maton, Anthea; Jean Hopkins; Charles William McLaughlin; Susan Johnson; Maryanna Quon Warner; David LaHart; Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. https://archive.org/details/humanbiologyheal00scho. 
  14. Pocock, Gillian (2006). Human Physiology (Third ). Oxford University Press. பக். 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-856878-0. https://archive.org/details/humanphysiologyb0000poco_h3s4. 
  15. Braden Kuo and Daniela Urma (May 2006). "Esophagus - anatomy and development". GI Motility online. doi:10.1038/gimo6. http://www.nature.com/gimo/contents/pt1/full/gimo6.html. 
  16. Abraham L. Kierszenbaum (2002). Histology and cell biology: an introduction to pathology. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-323-01639-1. https://archive.org/details/histologycellbio0000kier. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_இரையகக்_குடற்பாதை&oldid=3853537" இலிருந்து மீள்விக்கப்பட்டது