முதன்மை பட்டியைத் திறக்கவும்

மஞ்சள் காய்ச்சல்

குருதிப்போக்கு காய்ச்சல்

மஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.[1] மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை.[2]

மஞ்சட்காய்ச்சல்
YellowFeverVirus.jpg
மஞ்சட் காய்ச்சல் தீநுண்மத்தின் இலத்திரன் நுண்ணோக்கி நுண்படிமம் (234,000X உருப்பெருக்கம்).
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு infectious disease
ஐ.சி.டி.-10 A95.
ஐ.சி.டி.-9 060
நோய்களின் தரவுத்தளம் 14203
MedlinePlus 001365
ஈமெடிசின் med/2432 emerg/645
MeSH D015004

டெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர்.[3]

இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.[3] சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.

நோய்க்காரணிதொகு

மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் (Flaviviridae ) சார்ந்த ஆர்.என்.ஏ கொண்டுள்ள தீநுண்மம் இக்காய்ச்சலுக்குக் காரணமான நுண்ணுயிரி ஆகும். இது 38 நானோமீட்டர் அகலமுள்ள சுற்றுறையைக் கொண்டுள்ளது.[2] இவை வழங்கியின் உடலுக்குள் கொசு மூலம் செலுத்தப்பட்ட பின்னர் வழங்கியின் உயிரணுவின் மேற்பரப்பில் ஏற்பி ஒன்று மூலம் இணைக்கப்படுகின்றது; பின்னர் உயிரணுக்களுக்குள் அகவுடல் நுண்குமிழி (endosomal vesicle) மூலம் எடுக்கப்படுகின்றது; இறுதியில் குழியமுதலுருக்குள் தீநுண்மத்தின் மரபணுக்கூறுகள் வெளிவிடப்படுகின்றது; இவை அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலையுள் பல்கிப்பெருகுகின்றன.

காவிதொகு

மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் முதன்மையாக ஏடிசு எகிப்திப் பெண் கொசுவின் கடி மூலம் பரப்பப்பட்டாலும், வேறு இன வகை கொசுக்களும் இந்நோயைப் பரப்புவதுண்டு. அவற்றுள் புலிக் கொசு என அழைக்கப்படும் ஏடிசு அல்போப்டிக்கசுவும் அடங்குகின்றது. நோயுற்ற குரங்கு அல்லது மனிதரைக் கடிக்கும் பெண் கொசு அவர்களின் தீநுண்மம் கொண்ட இரத்தத்தை உறிஞ்சுகின்றது, கொசுவின் இரைப்பையை அடைந்த தீநுண்மங்கள் மேலணி இழையங்களில் பெருகுகின்றன, ஒரு குறிப்பிட்ட தொகையை அடைந்ததும் அங்கிருந்து கொசுவின் சுற்றோட்டத்தொகுதியை அடைந்து அங்கிருந்து உமிழ்நீர்ச சுரப்பியை அடைகின்றன. மீண்டும் இவை மனிதரைக் கடிக்கும் போது முதலில் குத்திய காயத்துள் உமிழ்நீரைச் செலுத்துகின்றன, அதனுடன் செலுத்தப்பட்ட தீநுண்மங்கள் கடிவாங்கியவரின் குருதியை அடைகின்றன.

உசாத்துணைகள்தொகு

  1. Schmaljohn AL, McClain D. (1996). "Alphaviruses (Togaviridae) and Flaviviruses (Flaviviridae)". in Baron S. Medical Microbiology (4th ). Univ of Texas Medical Branch. ISBN 0-9631172-1-1. 
  2. 2.0 2.1 David Brown, Graham Lloyd (2004). "222 - Zoonotic Viruses". in Jonathan Cohen MB BS FRCP FRCPath FRCPE FMedSci. Infectious Disease (2 ). Mosby, Elsevier Limited. ISBN 0323026079. 
  3. 3.0 3.1 DUANE J. GUBLER SC.D (2004). "34, VIRAL ZOONOSES". in DAVID C. DALE, M.D.. INFECTIOUS DISEASES: The Clinician's Guide to Diagnosis, Treatment, and Prevention. WebMD Inc.. ISBN 0-9703902-6-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_காய்ச்சல்&oldid=1828998" இருந்து மீள்விக்கப்பட்டது