உகரச்சுட்டு
உகரச்சுட்டு என்பது அ, இ, உ எனப் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் கூறும் மூவகைச் சுட்டுக்களில்[1] ஒன்று. அகரச்சுட்டு பேசுபவருக்குத் தொலைவிலும், இகரச்சுட்டு பேசுபவருக்கு மிக அண்மையிலும் இருப்பதைச் சுட்டுவதற்குப் பயன்படுகின்றன. உகரச்சுட்டு முன்னிலையில் இருப்பவருடன் பேசும்போது பயன்படுகிறது. தற்காலத்தில் தமிழ்நாட்டில் அகர, இகரச் சுட்டுகள் பயன்பாட்டில் இருந்தாலும் உகரச்சுட்டு வழக்கிழந்துவிட்டது. பிற்காலத்து நன்னூலிலும் உகரச்சுட்டுக் குறிக்கப்பட்டிருப்பதால்[2] அக்காலம் வரையிலாவது தமிழ் நாட்டில் உகரச்சுட்டுப் பயன்பாட்டில் இருந்திருக்கவேண்டும். எனினும், தமிழ் வட்டார வழக்குகள் சிலவற்றில் இன்றும் உகரச்சுட்டு பயன்படுகிறது. குறிப்பாக இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உகரச்சுட்டுப் பல வடிவங்களில் பயன்பட்டுவருவதைக் காணலாம்.