உடைந்த சன்னல் உவமை

உடைந்த சன்னல் உவமை (Parable of the broken window) என்பது பிரெஞ்சு அரசறிவியலாளர் ஃபிரடரிக் பாஸ்தியேவால் சொல்லப்பட்ட ஒரு உவமைக்கதை. அழிவாலும் அழிவைச் சீராக்க செலவிடப்படும் பொருளாலும் சமூகத்திற்கு நிகர பலன் எதுவும் இல்லை என்று எடுத்துரைக்கிறது. இவ்வுவமைக்கதை உடைந்த சன்னல் பொய்மை (Broken windown fallacy) ”அல்லது சன்னல் செய்வோரின் பொய்மை (Glazier's fallacy) என்றும் வழங்கப்படுகிறது. பிறவாய்ப்புச் செலவுகளும் எதிர்பாராத விளைவுகளும் எளிதில் அவதானிக்கமுடியாத வழிகளில் பொருளாதாரச் செயல்பாடுகளை எப்படி பாதிக்கின்றன என்பதை இந்த உவமை விளக்குகின்றது.

உவமைக்கதை தொகு

பாஸ்தியே 1850 இல் எழுதிய ”காணக்கிடைப்பதும் காணமுடியாததும்” (Ce qu'on voit et ce qu'on ne voit pas) என்ற கட்டுரையில் பின்வரும் உவமைக்கதை வருகிறது:

கவனக்குறைவால் சன்னல் கண்ணாடியை உடைத்த தன் மகன் மீது கோபம் கொள்ளும் கடைக்காரர் ஜேம்ஸ் குட்ஃபெல்லோவைப் பார்த்திருக்கிறீர்களா?. அச்சமயம் நீங்கள் அங்கிருந்தால் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பர்கள் அனைவரும் - அவர்கள் முப்பது பேராக இருந்தாலும் - ஒருமனதாக கடைக்காரருக்கு ஆறுதல் சொல்வார்கள். “அனைவருக்கும் வயிற்றுப்பிழைப்பு உள்ளது. சன்னல்கள் உடையவே இல்லையென்றால் சன்னல் செய்பவர் எப்படிப் பிழைப்பார்.? (அதனால் உங்கள் மகன் செய்தது பெரிய தவறு இல்லை. அவனது செயலால் சன்னல் செய்வோருக்கும் லாபம் உண்டு)” என்று ஆறுதல் சொல்வார்கள்.

அவர்கள் சொல்லும் ஆறுதலில் ஒரு பெரும் கோட்பாடு அடங்கியுள்ளது. இந்த சிறுகதை மூலம் அதனை எளிதாகச் சுட்டிக்காட்டிவிடலாம். துரதர்ஷ்டவசமாக நமது பொருளியல் நிறுவனங்களின் பெரும்பாலான செயல்பாடுகளை இக்கோட்பாடே ஆட்டுவிக்கின்றது.

கடையின் உடைந்த சன்னலை சரி செய்ய ஆறு ஃபிராங்குகள் செலவாகும் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனே என்ன சொல்லுவீர்கள்? சன்னல் செய்பவருக்கு அந்த ஆறு ஃபிராங்குகள் கிடைக்கும், அதனால் அந்த தொழிலுக்கு ஆறு ஃபிராங்குகள் வரவு என்று சொல்வீர்கள். நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். மறுக்கப்போவதில்லை. உங்கள் கருத்து சரியானதே. சன்னல் செய்பவர் வருவார். உடைந்த சன்னலை சரி செய்வார். ஆறு ஃபிராங்குகளை வாங்கிக்கொண்டு தன் மனதில் சன்னலை உடைத்த பையனை வாழ்த்திக் கொண்டே சென்று விடுவார். இவை அனைத்தும் நாம் காணக்கூடியவை.

ஆனால் இந்த நிகழ்ச்சியைக் கண்ட பின்னால், சன்னல்களை உடைப்பது நல்லது; அது பணப்புழக்கத்தை அதிகரித்து தொழில்துறையை ஊக்குவிக்கும் என்று பலரும் நினைப்பது போல நீங்களும் நினைப்பீர்களென்றால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். “நில்லுங்கள்! உங்கள் கோட்பாடு காணக்கூடியவற்றை மட்டுமே கணக்கில் கொள்கிறது. காணமுடியாதவற்றை கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது” என்று கூவக் கடமைப்பட்டவனாவேன்.

நமது கடைக்காரர் சன்னலைச் சரிசெய்ய செலவிட்ட ஆறு ஃபிராங்குகளை மற்ற விசயங்களில் செலவிட முடியாது என்பதை நாம் காண்பதில்லை. அந்த ஆறு ஃபிராங்குகளுக்கு புதிய சன்னல் ஒன்று வாங்கத் தேவையில்லை என்றால் ஒரு வேளை அந்த பணத்தைக் கொண்டு அவர் புதிய காலணிகளை வாங்கியிருக்கலாம் இல்லையெனில் ஒரு புதிய புத்தகத்தை வாங்கியிருக்கலாம். அந்த ஆறு ஃபிராங்குகளை அவர் பிற வழிகளில் செலவு செய்வதை அந்த உடைந்த சன்னல் தடுத்து விட்டது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Frédéric Bastiat (1850). That Which Is Seen, and That Which Is Not Seen. translated by Patrick James Stirling. http://en.wikisource.org/wiki/That_Which_Is_Seen,_and_That_Which_Is_Not_Seen. பார்த்த நாள்: 2009-06-07. 
  2. Frédéric Bastiat (1850) (in French). Ce qu'on voit et ce qu'on ne voit pas. http://fr.wikisource.org/wiki/Ce_qu'on_voit_et_ce_qu'on_ne_voit_pas. பார்த்த நாள்: 2009-06-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடைந்த_சன்னல்_உவமை&oldid=2746424" இலிருந்து மீள்விக்கப்பட்டது