உத்கீர்

மகாராஷ்டிராவில் நகரம்

உத்கீர் அல்லது உதயகிரி என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் மாவட்டத்தில் நகராட்சி மன்றத்தைக் கொண்ட நகரமாகும். இது மாநிலத்தின் மராத்வாடா பிரிவில் அமைந்துள்ளது.[1] இந்த நகரம் கர்நாடக எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நகரம் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்கீர் கோட்டைக்கு பிரபலமானது. இந்த கோட்டை "உதயகிரி கோட்டை" என்றும் அழைக்கப்படுகிறது. நகரமும் அருகிலுள்ள கிராமங்களும் விவசாயத்தை நம்பியுள்ளன. விவசாயம் மக்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாக விளங்குகிறது.

வரலாறு

தொகு

1759 ஆம் ஆண்டில் நிசாம்களுக்கும், மராத்தியர்களுக்கும் இடையான உத்கீர் ஒப்பந்ததிற்கு இந்நகரம் பிரபலமானதாகும். இது 1948 வரை நிஜாம்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. 1948 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கையினால் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் மராத்வாடாவின் ஏனைய பகுதிகளுடன் மகாராட்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

ஹவகி சுவாமி மகாராஜின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ஹவாகி சுவாமி கோயில் மற்றும் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ரத் காஜா சாதாருதீன் பாஷா தர்கா ஷெரீப் ஆகிய இந்த நகரத்தில் அமைந்துள்ளது.

புள்ளிவிபரங்கள்

தொகு

உத்கீர் என்பது மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுகா ஒன்றாகும். லாத்தூர் மாவட்டத்தின் 10 தாலுகாக்களில் இதுவும் ஒன்றாகும். உத்கீர் தாலுகாவில் 98 கிராமங்களும் 2 நகரங்களும் உள்ளன.

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[2] உத்கீர் தாலுகாவில் 3,11,066 மக்கள் வசிக்கின்றனர். மேலும் 56,806 குடும்பங்கள் உள்ளன. மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 1,61,568 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,49,498 ஆகவும் காணப்படுகின்றது. ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 41,456 ஆகும். இது மொத்த மக்கட் தொகையில் 13.33% வீதம் ஆகும். உட்கீர் தாலுகாவின் கல்வியறிவு விகிதம் 68.71% வீதம் ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 74.37% வீதமாகவும் பெண்களின் கல்வியறிவு 62.6% வீதமாகவும் உள்ளது. உத்கீரின் மொத்த பரப்பளவு 736.26 சதுர கிலோ மீற்றர் ஆகும். மக்கட் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 422 ஆகும்.

உத்கீரின் மொத்த மக்கட் தொகையில், 64.06% வீதமான மக்கள் நகர்ப்புறத்திலும், 35.94% வீதமான மக்கள் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.

உத்கீர் தாலுகாவின் முக்கிய வருமான ஆதாரம் விவசாயம் ஆகும். சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களும் அமைந்துள்ளன. இது கிராமம் தானியங்களுக்கு பிரபலமானது.

உத்கீர் கோட்டை

தொகு

இந்தியாவின் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் நகரில் அமைந்துள்ள உத்கீர் கோட்டை பஹாமனி காலத்திற்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். நிஜாம்களுக்கும், மராத்தியர்களுக்கும் இடையான உத்கீர் ஒப்பந்தம் இந்த் கோட்டையில் கையெழுத்தானது. உத்கீர் கோட்டை இந்திய வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும். கோட்டை 40 அடி ஆழத்தில் அகழியால் சூழப்பட்டுள்ளது. கோட்டையில் பல அரண்மனைகள், தர்பார் அரங்குகள் மற்றும் உதயகிரி மகாராஜாவின் கல்லறை என்பன தரை மட்டத்திலிருந்து 60 அடி கீழே அமைந்துள்ளன. உத்கீர் கோட்டையில் இருந்து பால்கி மற்றும் பிதர் கோட்டைகளுடன் இணைக்கும் நேரடி ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதை இருப்பதாக நம்பப்படுகிறது.

உத்கீர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். டெக்கான் பீடபூமியின் ஒரு பகுதியாக இருப்பதால் வளமான மண்ணைக் கொண்டுள்ளது. இது பருத்தி சாகுபடிக்கு இது மிகவும் பொருத்தமானது. இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் சோளம், கோதுமை உள்ளிட்ட முழு தானியங்கள் ஆகும். மேலும் சோயா அவரை, கரும்பு, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

போக்குவரத்து

தொகு

இரயில் சேவை

தொகு

உத்கீர் ரயில் நிலையம் ஹைதராபாத், அவுரங்காபாத், புனே, மும்பை, பெங்களூர், லாதூர், நந்தேடு, உஸ்மானாபாத், காக்கினாடா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உத்கீர், இந்திய ரயில்வேயின் தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது. மேலும் இது தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் செகந்திராபாத் பிரிவின் ஒரு பகுதியாகும்.

சாலைவழிகள்

தொகு

மகாராஷ்டிரா மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கிராமங்கள் மற்றும் நகரங்களுடன் சாலைகள் மூலம் உட்கீர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் தினமும் மும்பை மற்றும் புனே போன்ற முக்கிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.

விமான சேவை

தொகு

உத்கிரிலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகப் பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகும் .

சான்றுகள்

தொகு
  1. "NGA GeoNames Additional Attributes". geonames.nga.mil. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Census of India" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்கீர்&oldid=3374035" இலிருந்து மீள்விக்கப்பட்டது