உனா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

உனா (அல்லது உன்னத்நகர்) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள சவுராஷ்டிரா பிராந்தியத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

புவியியல் தொகு

மச்சுந்திரி ஆற்றின் கரையில் உனா அமைந்துள்ளது. இது சராசரியாக 14 மீட்டர் (46 அடி) உயரத்தில் உள்ளது. கோடினார் மேற்கிலும், தியூ தெற்கிலும் அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களை உனா கொண்டுள்ளது.

புள்ளிவிபரங்கள் தொகு

2011 ஆண்டு இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உனாவின் மக்கட் தொகை 130000 ஆகும்.[1] மக்கட் தொகையில் ஆண்கள் தொகையில் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். உனாவின் மக்கட் தொகையில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

உனா வாழ் மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 67% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% வீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 74% வீதமாகவும், மற்றும் பெண்களின் கல்வியறிவு 59% வீதமாகவும் காணப்படுகின்றது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் கிராமங்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய தாலுகாவாக உனா திகழ்கின்றது. இந்த நகரம் சுற்றியுள்ள பல கிராமங்களின் கொள்முதல் மையமாக இருப்பதால் மற்ற நகரங்களில் இல்லாத பல்வேறு பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.

போக்குவரத்து தொகு

உனா தேசிய நெடுஞ்சாலை எண் 8 இல் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை பாவ்நகரை வேராவலுடன் இணைக்கிறது.

குஜராத்தின் பிற முக்கிய நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், ஜுனகத் மற்றும் பாவ்நகர் போன்றவற்றுடன் இந்த நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மும்பை அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தனியாரினால் இயக்கப்படும் பேருந்து சேவைகளாலும் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான தியூவிற்கான போக்குவரத்து சேவை நன்கு கிடைக்கின்றது. விமானப் போக்குவரத்தைக் கொண்ட அருகிலுள்ள நகரம் தியூ ஆகும். தியூ உனாவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. தொடருந்து சேவையின் மூலம் வேராவல் மற்றும் ஜுனகத் ஆகிய இடங்களுடனும் உனா இணைக்கப்பட்டுள்ளது.

மொழிகள் தொகு

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் உனாவில் வாழ்கின்றனர். மக்கள் குஜராத்தி (கத்தியாவரி) மொழி பேசுகிறார்கள். சிலர் இந்தி, ஆங்கிலம், குச்சி போன்ற பிற மொழிகளையும் பேசுகிறார்கள்.

பொருளாதாரம் தொகு

உனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தால் சார்ந்துள்ளது. கடலோர துறைமுகங்கள் நவ பந்தர், சையத் ராஜ்பாரா, வனக்பரா மற்றும் தாரா பந்தர் போன்ற நல்ல வருவாயை வழங்குகின்றன. குஜராத் மாநிலத்தில் உனா மிகப்பெரிய சுண்ணாம்பு விநியோகத்தை மேற்கொள்கின்றது. சுண்ணாம்பு வணிகத்தினால் மாதத்திற்கு கிட்டத்தட்ட 80-90 கோடி வருவாயைப் பெறுகிறது.கேனா மாம்பழ பண்ணைகளுக்காகவும் உனா அறியப்படுகிறது. மேலும் உனா மற்றும் தியூவில் "ஹொக்கா" ஹைபீன் இண்டிகா (அழிந்துபோகும் மற்றும் பாதுகாப்பில் உள்ள ஒரு இனம்) என்று அழைக்கப்படும் பனை மரங்கள் ஏராளமாக உள்ளன. அவை நாட்டில் வேறு எங்கும் காணப்படவில்லை.

கல்வி நிறுவனங்கள் தொகு

புனித ஜோசப் பள்ளி கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் குழுவினரால் இயக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. ஷா எச்டி ஹைஸ் பள்ளி, சுவாமிநாராயண் குருகுல், காயத்ரி வித்தியாலயம், ராயல் பொதுப் பள்ளி ஆகிய பள்ளிகளும் செயற்படுகின்றன.

சுற்றுலாத்தலங்கள் தொகு

திரிபோவந்தாஸ் பரேக் கோபுரம், பவ்ரானிக் தலவ் (பண்டைய ஏரி), ராவல் அணை, மச்சுந்தரி அணை , துரோனேஸ்வர்[2] என்பன அமைந்துள்ளன. ஜம்வாலாவில் (கிர்) உள்ள ஜம்ஜீர் நீர்வீழ்ச்சி மிகவும் அற்புதமான இடமாகும். தியூ, அகமத்பூர் மாண்ட்வி கடற்கரை என்பன அருகில் அமைந்துள்ள பார்வையிடக் கூடிய இடங்களாகும். ஆசிய சிங்கங்களின் வீடான கிர் தேசிய பூங்கா உனாவுக்கு அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயமாகும். துளசிஸ்யம் ஒரு மதத் தலமாகும். இது உனாவில் இருந்து 29 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வெந்நீர் இயற்கை நீரூற்றுகள் காணப்படுகின்றன.

சான்றுகள் தொகு

  1. ""Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Droneshvar". Archived from the original on 2016-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனா&oldid=3586305" இலிருந்து மீள்விக்கப்பட்டது