உரிச்சொல் விளக்கம்
தமிழில் உள்ள சொற்களை தமிழ் இலக்கண நூல்கள் பெயர்ச்சொல் [1], வினைச்சொல்[2], இடைச்சொல்[3], உரிச்சொல் [4] என நான்காகப் பாகுபடுத்துகின்றன.
உரிச்சொல் பெயர்ச்சொல்லைப் போலவோ, வினைச்சொல்லைப் போலவோ தனித்து நின்று பொருள் உணர்த்தாது.
பெயர்சொல்லுக்கோ, வினைச்சொல்லுக்கோ உரிமை பூண்டு பொருள் உணர்த்தும்.
ஆங்கிலத்தில் வரும் Adjective, Adverb ஆகியவற்றை உரிச்சொல்லோடு ஒப்பிடலாம்.
தொல்காப்பியம் காட்டும் உரிச்சொற்கள்
தொகுதொல்காப்பியர் வெளிப்படையாகத் தெரியும் உரிச்சொற்களை விட்டுவிட்டு வெளிப்பட வாரா உரிச்சொற்களைத் தாம் விளக்குவதாகக் கூறிக்கொண்டு உரிச்சொற்களைத் தொகுத்துள்ளார்.
அவரது தொகுப்பில் பலபொருள் குறித்த ஒருசொல் என்று 15 உரிச்சொற்கள் உள்ளன.
- கடி என்னும் சொல் அச்சம், ஐயம், கரிப்பு, காப்பு, கூர்மை, சிறப்பு, புதுமை, மிகுதி, முன்தேற்று, வரைவு, விரைவு, விளக்கம் என்னும் 12 பொருள்களில் வரும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
- அவற்றில் ஒன்று அச்சம்.
- இதன் வழியே கடுஞ்சொல் என்பது அச்சம் தரும் சொல் என்று உணர்ந்துகொள்கிறோம்.
ஒருபொருள் குறித்த பலசொல் தொகுப்பில் 26 சொற்கள் உள்ளன.
- அவற்றுள் ஒன்று அரவத்தைக் குறிக்கும் 4 சொற்கள்.
- ஊர் அரவம் என்பதைக் கம்பலை மூதூர், சும்மை மூதூர், கலிகெழு மூதூர், அருங்கல் மூதூர் என்றெல்லாம் பாடல்கள் குறிப்பிடும்.
ஒருபொருள் குறித்த ஒருசொல் 106 உள்ளன.
- அவற்றுள் ஒன்று வலிமையை உணர்த்தும் வய என்னும் சொல்.
- வயப்புலி என்பதில் வய என்பது உரிச்சொல்.
- இந்த உரிச்சொல்லிலிருந்து வயவர் சொல் தோன்றிற்று. போர்விரர்களைக் குறிக்கும் இந்தச் சொல்லுக்கு வலிமை மிக்கவர் என்பது பொருள்.