திருக்குறள் பழைய உரைகள்

(உரையாசிரியர்கள் பதின்மர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர்-திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர் [1]

இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன.[2] தருமர், தாமத்தர், நச்சர் ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன. திருமலையர், மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.

கிடைத்துள்ள இந்த உரைகளில் காலத்தால் பிந்திய பரிமேலழகர் உரை 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பரிப்பெருமாள் காலம் 11 ஆம் நூற்றாண்டு எனத் தெளிவாகத் தெரிகிறது. இவரது உரை மணக்குடவர் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. எனவே மணக்குடவர் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது.[3] ஏனைய மூவர் உரைகளைக் காலிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் எனக் கால வரிசைப்படுத்தலாம். பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது.

தாமத்தர், நச்சர், தருமர் உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
    • திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர் பதிப்பு,
    • திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 94. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறள்_பழைய_உரைகள்&oldid=2901844" இலிருந்து மீள்விக்கப்பட்டது