உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள்

உரோமை நகரின் ஏழு திருப்பயணக் கோவில்கள் (Seven Pilgrim Churches of Rome) என்பது கிறித்தவர்கள் உரோமையில் திருப்பயணமாகச் சென்று சந்தித்து வழிபடுகின்ற முதன்மை வாய்ந்த ஏழு கோவில்களைக் குறிக்கும்[1].

வரலாறு தொகு

கிறித்தவ சமயத்தோடு நெருங்கிய தொடர்புடைய உரோமை நகரில் ஏழு கோவில்களுக்குச் சென்று இறைவேண்டல் செய்யும் பழக்கம் 16ஆம் நூற்றாண்டில் எழுந்தது. புனித பிலிப்பு நேரி என்பவர் உரோமை நகருக்கு வந்த திருப்பயணியருக்கு ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்ந்து, அவர்கள்தம் திருப்பயணம் முறையாக நிகழத் துணைபுரிந்தார். அவர் 1552ஆம் ஆண்டு, பெப்ருவரி 25ஆம் நாள் அவர் இப்பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். இவ்வாறு, உரோமைக்கு வந்த திருப்பயணிகள் ஆன்மிக நலம் பெற்றிட ஏழு பெருங்கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் புரியலாயினர். அந்த ஏழு பெருங்கோவில்களின் பட்டியல் இதோ[2]:

  1. புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் - (உரோமை மறைமாவட்டத்திற்கும் உலகிற்கும் தலைமைக் கோவில்)
  2. புனித பேதுரு முதுபெருங்கோவில் - (புனித பேதுருவின் கல்லறை அமைந்த கோவில்)
  3. புனித பவுல் முதுபெருங்கோவில் - (புனித பவுலின் கல்லறை அமைந்த கோவில்)
  4. புனித மரியா முதுபெருங்கோவில் - (புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட முதல் கோவில்)
  5. புனித எருசலேம் திருச்சிலுவை இளம்பெருங்கோவில் - (இயேசுவின் துன்பங்களோடு தொடர்புடைய பொருள்கள் உள்ள கோவில்)
  6. புனித இலாரன்சு இளம்பெருங்கோவில் - (தொடக்க கால மறைச்சாட்சியர் திருத்தொண்டர் இலாரன்சு மற்றும் ஸ்தேவான் கல்லறைகள் அமைந்த கோவில்)
  7. சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித செபஸ்தியான் இளம்பெருங்கோவில் - (ஆப்பியா பெருஞ்சாலையில் சுரங்கக் கல்லறைகளின் கீழ் அமைந்த கோவில்)

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் புகுத்திய மாற்றம் தொகு

2000ஆம் ஆண்டில் நிகழ்ந்த யூபிலியின் போது (புனித ஆண்டு) திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருப்பயணியரின் வசதியைக் கருத்தில் கொண்டு, மேலே தரப்பட்ட ஏழு கோவில்களுள் தொலைவில் அமைந்த புனித செபஸ்தியான் பெருங்கோலுக்குப் பதிலாக இறையன்புத் தாய் மரியாவின் திருத்தலத்தை இணைத்தார்.

இருப்பினும், திருப்பயணியர் பலர் தம் திருப்பயணத்தின் பகுதியாக புனித செபஸ்தியான் பெருங்கோவிலையும் இன்றுவரை சந்தித்து இறைவேண்டல் செய்வது வழக்கமாய் உள்ளது.

திருப்பயணத்தின் நோக்கம் தொகு

உரோமை நகருக்குச் சென்று அங்குள்ள புனித இடங்களாகிய கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் செய்யும் பழக்கம் தவக்கால பக்தி முயற்சியின் பகுதியாக இருந்தது. தவக்காலப் புதன் தொடங்குவதற்கு முந்திய வியாழனன்று, தாம் தொடங்கவிருக்கின்ற நோன்புக்கு ஆயத்தமாகத் திருப்பயணியர் உரோமை நகரின் ஏழு முதன்மைக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். இப்பழக்கத்தைப் புனித பிலிப்பு நேரி ஊக்குவித்தார்.

1575இல் நிகழ்ந்த யூபிலி ஆண்டின்போது நிறைபேறுபலன்களை அடைந்திட கிறித்தவர்கள் உரோமையின் ஏழு கோவில்களுக்குத் திருப்பயணமாகச் சென்றனர். அந்த ஆண்டு முழுவதும் மக்கள் தனியாகவோ குழுவாகவோ ஒவ்வொரு கோவிலாகச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினர்.

2000ஆம் ஆண்டு யூபிலியின் போதும் திருப்பயணியர் மேற்கூறிய ஏழு கோவில்களுக்கும் தனியாகவோ குழுவாகவோ சென்று இறைவேண்டல் நிகழ்த்தி பேறுபலன்கள் பெறலாம் என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழிசெய்தார். அக்கோவில்கள் தவிர, எருசலேமில் அமைந்துள்ள திருத்தலங்களுக்குச் சென்றும் பேறுபலன்கள் பெறலாம் என்றும் அவர் அறிவித்தார். மேலும், உரோமைக்கோ எருசலேமுக்கோ சென்று கோவில்களைச் சந்தித்து இறைவேண்டல் செய்ய இயலாதோர் தம் சொந்த மறைமாவட்டங்களிலேயே ஆயர்களால் குறிக்கப்படும் கோவில்களுக்குத் திருப்பயணமாகச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தி, பேறுபலன்கள் பெறும் வசதியும் இன்று உண்டு.

உரோமைத் திருப்பயணம் நிகழும் முறை தொகு

இன்று உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் பலர் கீழ்வரும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர். ஒரே நாளில் கால்நடையாகச் சென்று ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்வோரும் உண்டு. காலை 7 மணியிலிருந்தே புனித பேதுரு பெருங்கோவில் திறந்திருக்கும். அங்கே திருப்பயணத்தின் முதல் கட்டம் தொடங்கும். ஏழு கோவில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். திருப்பயணத்தின் இறுதிக்கட்டமாக புனித மரியா பெருங்கோவில் அமையும். அது மாலை 7 மணிக்கு மூடப்படும்.

கால்நடையாகச் சென்று ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்திட எல்லாத் திருப்பயணிகளாலும் இயலாதிருக்கலாம். எனவே அவர்கள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழி அக்கோவில்களுக்குச் செல்வதும் உண்டு.

திருப்பயணத்தைக் கால்நடையாகச் சென்று நிகழ்த்திட 25 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஏழு கோவில்களும் உரோமை நகரின் மையப்பகுதியில் இல்லாமல் வெளிப்பகுதிகளில் இருப்பதால் இவ்வாறு உள்ளது. பண்டைய உரோமையின் மையம் மக்கள் கூடும் பொதுவிடமாக இருந்தது. இடைக்கால உரோமையின் மையம் சிறிது அகன்று போனது. ஆனால் கிறித்தவ சமயத்தின் முதன்மைக் கோவில்கள் பல நகர எல்லைக்கு வெளியே கட்டப்பட்டன. இதற்குக் காரணம் கிறித்தவத்தின் தொடக்க கால மறைச்சாட்சிகள் தம் நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டு நகர எல்லைக்கு வெளியே புதைக்கப்பட்டது தான். கிறித்தவர்கள் அவ்விடங்களில் கல்லறை கட்டி அப்புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். அவ்விடங்களில் சிறப்புமிக்க கோவில்களை எழுப்பினார்கள்.

எனவே, இன்று புனிதர்களின் கல்லறைகளை உள்ளடக்கிய புனித பேதுரு பெருங்கோவில், புனித பவுல் பெருங்கோவில், புனித இலாரன்சு பெருங்கோவில், புனித செபஸ்தியான் பெருங்கோவில் ஆகிய நான்கும் தொலைவில் உள்ளன. புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில், புனித திருச்சிலுவைப் பெருங்கோவில் ஆகிய இரண்டும் தொடக்க காலப் பேரரசர்களின் நிலப்பகுதியில் அவுரேலியா பெருஞ்சாலையைத் தொட்டு உள்ளன. புனித மரியா பெருங்கோவில் எஸ்குலின் என்னும் குன்றின்மேல் உள்ளது. இவ்வாறு, இந்த ஏழு கோவில்களையும் சந்தித்து இறைவேண்டல் செய்வதற்குத் திருப்பயணியர் ஓரளவு தொலைவு நடந்துசெல்வது தேவையாகிறது.

திருப்பயணத் தல வரிசை தொகு

திருப்பயணிகள் வழக்கமாக நடந்து செல்லும் பயணப் பாதை இது:

முதல் கட்டமாக அமைவது புனித பேதுரு பெருங்கோவில். அங்கிருந்து டைபர் ஆற்றின் கரை ஓரமாகச் சென்று புனித பவுல் பெருங்கோவிலை அடைவர். பின்னர் சுரங்கக் கல்லறைகள் அமைந்த பகுதியாகிய புனித செபஸ்தியான் பெருங்கோவிலுக்குச் செல்வர். அங்கு இறைவேண்டல் நிகழ்த்தியபின், புனித கலிஸ்து சுரங்கக் கல்லறை பகுதியைத் தாண்டி, ஆப்பியா பெருஞ்சாலையையும் புனித ஸ்தேவான் வட்டக்கோவிலையும் கடந்து புனித இலாத்தரன் யோவான் பெருங்கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.

யோவான் பெருங்கோவிலுக்கு அருகே உள்ள புனித திருச்சிலுவைப் பெருங்கோவில் அடுத்த கட்டம். அங்கிருந்து "பெருவாயில் வளாகம்" என்னும் பகுதியைக் கடந்து புனித இலாரன்சு பெருங்கோவிலுக்குச் சென்று திருப்பயணியர் இறைவேண்டல் நிகழ்த்துவர். இறுதியாக, திருப்பயணியர் சந்தித்து வழிபடும் இடம் புனித மரியா பெருங்கோவில் ஆகும்.

ஏழு கோவில்கள் என்பதன் பொருள் தொகு

திருப்பயணிகள் சந்தித்து இறைவேண்டல் நடத்தும் கோவில்கள் ஏழு என்னும் வழக்கம் உள்ளது. ஆனால், உரோமையில் ஏழு கோவில்கள் மட்டுமே புனித இடங்கள் என்னும் விதத்தில் இப்பழக்கம் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மாறாக, ஏழு என்பது ஓர் அடையாள எண். உரோமை நகர் ஏழு குன்றுகள்மீது அமைந்தது. உலகின் அதிசயங்கள் ஏழு என்றொரு விளக்கம் உண்டு. விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் வருகின்ற ஏழு சபைகள் பற்றிய குறிப்பும் இதற்கு ஒரு பின்னணியாக இருக்கலாம். சிறப்பாக விவிலிய வழக்கப்படி, ஏழு என்பது முழுமையின் அடையாளம்.

ஆதாரங்கள் தொகு

மேலும் காண்க தொகு