உலகிற் பெரிய அணைகள்
உலகிற் பெரிய அணைகள் (The largest dams) உலகிலுள்ள பெரிய அணைகள், பல்வேறு நாடுகளில் விரவிக் காணப்படுகின்றன.[1] பல்வேறு காலக்கட்டங்களில் இவை கட்டப்பட்டதால், இவற்றின் தனித்துவம், தொழில்நுட்பம் வேறுபடுகின்றன. எனவே, இவற்றின் கட்டமைப்பைக் கொண்டும், உருவான ஆண்டினைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.
போல்டர் அணை : உலகிலேயே மிக உயரமான அணையாக கூறப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள கொலராடோ ஆற்றின் குறுக்கே கருங்குடைவு என்னுமிடத்தில், 1936 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கொலராடோ ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், அதில் ஆற்றுப் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்யவும், நீர்ப்பாசனம் அளிக்கவும், மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அமைக்கப்பட்டது. இதன் உயரம் 726 அடி, நீளம் 1,200 அடிகள் ஆகும். இதன் நீர்த்தேக்கம் 32,142,000 ஏக்கர் - அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரிகளில் உலகிற் பெரியதானது.
சாஸ்தா அணை (Shasta) : இது அமெரிக்காவின் மத்தியப் பள்ளத்தாக்குத் திட்டத்தில் சாக்ரமன்டோ ஆற்றில் கட்டப்பட்ட ஓர் அணையாகும். இது இந்த ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, சான்ஜாக்வின் பள்ளத்தாக்கிற்குப் பாசனம் அளிக்கிறது. இதன் உயரம் 602 அடிகள், நீளம் 3,460 அடிகளாகும். இது 3,75,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 4,493,000 ஏக்கர்-அடி. இது 1945 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[2]
கிராண்டு கூலி அணை (Grand Coulee): கான்கிரீட்டினால் ஆன அணைகளில் உலகிற் பெரியது இதுவே. கொலம்பியா வடிநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது 1948-ல் கட்டி முடிக்கப்பட்டது. நீர்ப் பாசனத்திற்காகவே இது முக்கியமாகக் கட்டப்பட்டது. ஆனால் இது 1,944,000 கிலோவாட் மின்சார சக்தியையும் தருகிறது. இதன் நீர்த்தேக்கமான ரூஸ்வெல்ட் ஏரியிலிருந்து வேறொரு பெரும் நீர்த்தேக்கத்திற்கு நீர் இறைக்கப்பட்டு, அது பாசனத்திற்குப் பயன்படுகிறது. அணையின் உயரம் 550 அடி, நீளம் 1,311 அடி. ரூஸ் வெல்ட் ஏரியின் கொள்ளளவு 9,517,000 ஏக்கர்-அடி. இதன் நீளம் 151 மைல், சுற்றளவு 600 மைல் உள்ளது.
பான்டானா அணை (Fontana) : டென்னசி பள்ளத்தாக்குத் திட்டத்தில் கட்டப்பட்ட பல அணைகளில் இதுவும் ஒன்று. இது 480 அடி உயரமும், 1775 அடி நீளமுமுள்ளது. இது 1944 ஆம் ஆண்டு, கட்டி முடிக்கப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் 1,444,300 ஏக்கர்-அடி கொள்ளளவுள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் சுற்றளவு 240 மைல். இது 202,500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ளது.
போர்ட் பெக் அணை (Fort Peck) : மண் அணைகளில் உலகிற் பெரியது இதுவே எனக் கூறுப்படுகிறது. மிஸ்ஸௌரி ஆற்றின் குறுக்கே இது அமெரிக்க ராணுவப் பொறியியல் அறிஞர் அணி என்னும் ஸ்தாபனத்தால் 1940-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 250 அடி உயரமும், 21,026 அடி நீளமும் கொண்டது. வெள்ளக் கட்டுப்பாட்டையும், மின்னாக்கத்தையும், போக்குவரத்து வசதியையும் நோக்கமாகக் கொண்டு இது கட்டப்பட்டது.[3]
ஆண்டர்சென் ராஞ்சு அணை (Anderson Ranch) : மண் அணைகளில் உயரமானது இதுவே ஆகும்.[4] அமெரிக்காவிலுள்ள இடாஹோ இராச்சியத்தில் தெற்குபோர்க், பாய்ஸ் ஆகிய இரு நதிகளின் குறுக்கே இதைக் கட்டத்தொடங்கினார்கள். இரண்டாம் உலகப்போரினால் இவ்வேலை தடைப்பட்டது. அது முடிந்தபின் இதன் வேலை மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் உயரம் 456 அடி, நீளம் 1,350 அடி. இது வெள்ளக்கட்டுப்பாட்டையும், நீர்ப்பாசனத்தையும், மின்னாக்கத்தையும் தனது நோக்கமாகக் கொண்டது.
சாம்பான் அணை (Chamban): ரோமான்சி என்ற பிரெஞ்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இவ்வணை ஐரோப்பாவில் பெரியது. இது 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 450 அடிகளைக் கொண்டுள்ளது.
டினீப்பர்ஸ்ட்ராய் அணை (Dnieprostroi): உக்ரைனிலுள்ள இவ்வணை உலகிற் பெரிய கான்கிரீட்டு அணைகளுள் ஒன்று. இது நீபர் ஆற்றின் குறுக்கே 1932-ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 170 அடி உயரமும், 2,500 அடி நீளமும் உள்ளது. மின்னாக்கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட அணைகளில் உலகிற் பெரியது இதுவே. போரின்போது ஜெர்மானியரது. படையெடுப்பைத் தடுக்க இது உடைக்கப்பட்டது. போரின் பின் இதை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள்.
அஸ்வான் அணை (Assuan) : இது 1902-ல் எகிப்தில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. கல்லினாலான இவ்வணையின் உயரம் முதலிற் கட்டப்பட்ட போது 144 அடி, நீளம் 1,320 அடி. இருமுறை இது உயர்த்தப்பட்டது. எகிப்திலுள்ள வறண்ட பகுதிகளுக்கு இது பாசன மளிக்கிறது.
இந்திய அணைகள்
தொகுமேட்டூர் அணை, கிருஷ்ணராச சாகரம், உஸ்மான் சாகரம், தேகர்வாடி, பெரியாறு, தாமிரபரணி, நிஜாம் சாகரம் ஆகிய இந்திய அணைகளுக்கும் சிறப்புகளைப் பெற்றனவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://en.wikipedia.org/wiki/List_of_dams_and_reservoirs
- ↑ "Shasta Dam". Water Education Foundation. பார்க்கப்பட்ட நாள் March 1, 2016.
- ↑ https://www.britannica.com/topic/Fort-Peck-Dam
- ↑ https://www.nps.gov/nr/travel/ReclamationDamsIrrigationProjectsAndPowerplants/Anderson_Ranch_Dam_and_Powerplant.html