உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்
கரைசுத்து உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.
கரைசுத்து உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் | |
---|---|
[[Image:|280px|alt=|]] | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாகாணம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி மாவட்டம் |
அமைவு: | கரைசுத்து உவரி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கரைசுத்து உவரி சுயம்புலிங்க சுவாமி (சிவன்) |
இருப்பிடம்
தொகுஇக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி வரையும் 4-8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
அஞ்சல் முகவரி: அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், கரைசுத்து உவரி - 628 658, திருநெல்வேலி மாவட்டம்.
- அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், கன்னியாகுரி
- அருகிலுள்ள விமான நிலையம் : தூத்துக்கூடி, மதுரை
அமைப்பு
தொகுகோயிலின் நுழைவாயிலினைக் கடந்து உள்ளே மூலஸ்தானத்திற்குச் சென்றால் அங்கே சுயம்புலிங்கசுவாமியைக் காணலாம். கோயிலின் வெளிப்புறம் வலது புறத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் உள்ளது. சிவன் கோயிலுக்கு இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சன்னதியில் சிவனைந்த பெருமாள் அழகாக கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இச்சன்னதியில் முன்னடி சாமி உள்ளது. அதற்கடுத்தபடியாக பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பேச்சியம்மன் சன்னதியில் பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களைக் காணமுடியும்.
கோயில்
தொகுஇயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு சிவன் சுயம்பு லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
தலம் | சிறப்பு |
---|---|
மூலவர் | சுயம்புநாதர் |
உற்சவர் | |
அம்மன்/தாயார் | பிரம்பசக்தி |
தல விருட்சம் | கடம்பமரம் |
தீர்த்தம் | தெப்பகுளம் |
ஆகமம்/பூஜை | |
பழமை | 200-300 வருடங்களுக்கு முன் |
புராண பெயர் | வீரைவளநாடு |
திருவிழா
தொகு3 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் சிறப்பு நிகழ்வாகும். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.வையும் இக்கோயிலில் இத்தலத்து விழாக்களாகும். தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதோசம் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு. பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேடமான வழிபாடாக உள்ளது.
தல வரலாறு
தொகுஅருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் கரைசுத்து உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.[1]
வழியில் கூடன்குளம் சிரட்டைப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர்.
ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர். விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் கரைசுத்து உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் கரைசுத்து உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும்.
வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள்.குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள். முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கரைசுத்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.
கரைசுத்து உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.
நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும். கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.
தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். குமரி மாவட்ட மக்கள் கரைசுத்து உவரியில் தங்குவதற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும் பான்மையான மக்கள் கரைசுத்து உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.
பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வழியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் கரைசுத்து உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.
சிறப்பு
தொகுஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர் எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயில் நுழைவாயில்
-
கோயில்அருகே கடல்
-
கோயில் குளம்
-
சுயம்புலிங்கசுவாமி சன்னதி
-
கன்னிவிநாயகர் சன்னதி
-
பிரம்மசக்தி அம்மன் சன்னதி
-
பேச்சியம்மன் சன்னதி
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- uvari suyambulinga swamy
- அருள்மிகு உவரி சுயம்புநாத சுவாமி திருக்கோயில் பரணிடப்பட்டது 2012-08-26 at the வந்தவழி இயந்திரம்
- http://temple.dinamalar.com/New.php?id=793
- http://uvarisuyambulingaswamy.com/default.asp பரணிடப்பட்டது 2012-05-05 at the வந்தவழி இயந்திரம்
- http://www.maalaimalar.com/2011/09/26102740/uvari-suyambulingam-temple.html[தொடர்பிழந்த இணைப்பு]
- Swayambulinga Swami Temple – Uvari
- ஜ.பாக்கியவதி, விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி! தினமணி, வெள்ளிமணி, 10.4.2015