எசாயா (நூல்)

திருவிவிலிய நூல்

எசாயா (Isaiah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1]

யா இறைவாக்கினர். உருசிய பாணியிலமைந்த உருப்படிமம். காலம்: 18ஆம் நூற்றாண்டு. காப்பகம்: இயேசுவின் உருமாற்றக் கோவில், கிசி துறவியர் இல்லம், கரேலியா, உருசியா.

பெயர்

தொகு

எசாயா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יְשַׁעְיָהו (Yeshayahu) எனவும், கிரேக்கத்தில் Ἠσαΐας (Ēsaïās) எனவும், இலத்தீனில் Isaias எனவும் ஒலிக்கப்படும். எசாயா என்னும் இறைவாக்கினர் பெயரால் இந்நூல் அழைக்கப்படுகிறது. இந்நூலின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பு இசையாஸ் ஆகமம் அல்லது ஏசாயா என்னும் பெயர் கொண்டிருந்தது.

எசாயா கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்தவர். அவர் சிறப்பான முறையில் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர்.

பகுதிகள்

தொகு

எசாயா என்னும் மாபெரும் இறைவாக்கினர் பெயரால் வழங்கப்படும் இந்நூலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.[2][3]

முதல் பகுதி
அதிகாரங்கள் 1 முதல் 39 வரை[4]

இக்காலத்தில் தென் நாடாம் யூதா வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் யூதாவுக்கு வரவிருந்த அழிவுக்கு, அசீரியாவின் ஆற்றலைவிட, அந்த நாடு கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே உண்மையான காரணம் என்று எசாயா உணர்ந்தார். எனவே அவர் எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களாலும், அம்மக்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடாவிடில் இருளும் அழிவுமே காத்திருக்கின்றன என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார்.

இரண்டாம் பகுதி
அதிகாரங்கள் 40 முதல் 55 வரை[5]

இப்பகுதி யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புது வாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இசுரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு வலியுறுத்தப் பெறுகின்றன. இப்பகுதியில் காணப்பெறும் "ஆண்டவரின் ஊழியன்" பற்றிய பாடல்கள் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்த பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்றாம் பகுதி
அதிகாரங்கள் 56 முதல் 66 வரை[6]

இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இசுரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலுயுறுத்தப்படுகின்றது; நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம் பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க ஒரு சிறு பகுதி

தொகு

எசாயா 49:15-16
"ஆண்டவர் கூறுவது இதுவே:
பால்குடிக்கும் தன் மகவைத்
தாய் மறப்பாளோ?
கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது
இரக்கம் காட்டாதிருப்பாளோ?
இவர்கள் மறந்திடினும்,
நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை
நான் பொறித்து வைத்துள்ளேன்."

உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 1:1 - 12:6 1001 - 1020
2. வேற்றினத்தார்க்குரிய தண்டனைகள் 13:1 - 23:18 1020 - 1033
3. உலகின்மீது ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு 24:1 - 27:13 1033 - 1037
4. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 28:1 - 35:10 1037 - 1040
5. யூதாவின் அரசன் எசேக்கியாவும் அசீரியரும் 36:1 - 39:8 1040 - 1055
6. வாக்குறுதி, நம்பிக்கை உரைகள் 40:1 - 55:13 1055 - 1081
7. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 56:1 - 66:24 1081 - 1097

மேலும் காண்க

தொகு

விக்கிமூலத்தில் எசாயா நூல்

மேற்கோள்கள்

தொகு
  1. Cate 1990b, ப. 413.
  2. Petersen 2002, ப. 47–48.
  3. Sweeney 1998, ப. 76–77.
  4. Boadt 1984, ப. 325.
  5. Boadt 1984, ப. 418–19.
  6. Boadt 1984, ப. 444.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசாயா_(நூல்)&oldid=3937541" இலிருந்து மீள்விக்கப்பட்டது