எண்ணாயிர மலை சமணர் குகை மற்றும் கற்படுக்கைகள்
எண்ணாயிர மலை சமணர் குகை மற்றும் கற்படுக்கைகள் தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம் கிராமத்தை அடுத்துள்ள குன்றில் அமைந்துள்ளது. இந்த வளாகம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லை.
அமைவிடம்
தொகுவிழுப்புரம் - செஞ்சி சாலையில், 24 கி.மீ. தொலைவில் மட்டப்பாறை அமைந்துள்ளது. இங்கேயிருந்து கிழக்கு திசையில் சுமார் 5 கி.மீ. சென்றால் எஸ்.குன்னத்தூர் கிராமத்தை காணலாம். இவ்வூரின் அருகே இக்குன்று அமைந்துள்ளது. [1] எண்ணாயிரம் கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 605651 ஆகும்.
உள்ளூர் மக்கள் இதனை மேல்கூடலூர் மலை என்றும், ஐவர் மலை என்றும், பஞ்சபாண்டவர் மலை என்றும் அழைக்கிறார்கள். அடிவாரத்திலிருந்து குன்றின் மீது ஏறிச்செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இப்பகுதிகளில் வசிக்கும் சமணர்கள் அமைத்துக் கொடுத்த செய்தியினை இங்குள்ள செய்திப் பலகை தெரிவிக்கிறது.[1]
கற்படுக்கைகள்
தொகுஇம்மலையில், பாறையில் நன்கு செதுக்கப்பட்ட 35 சமணக் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இவை 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளன. தமிழகத்தின் சமணத் தளங்களுள், இக்குன்றிலேயே அதிக அளவில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று இருக்கைகளும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மருந்து அரைக்கும் குழிகளும் காணப்படுகின்றன. [1][2] இங்குள்ள சமணர் கற்படுக்கைகளை, திருச்சி மலைக்கோட்டை, மற்றும் மாங்குளம், (மதுரை மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ள சமணர் கற்படுக்கைகளுடன், கல்வெட்டு ஆய்வாளர், சி.வீரராகவன் ஒப்பிட்டு நோக்கியுள்ளார். [3]
சமணர் புடைப்புச் சிற்பங்கள்
தொகுஇங்குள்ள பாறை ஒன்றில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் ஒரே தொகுப்பாகச் (Single Panel) செதுக்கப்பட்டுள்ளன. முதலாவது சமண சமயத்தின் 23 ஆம் தீர்த்தரான பாசுவநாதரின் புடைப்புச் சிற்பம் ஆகும். படமெடுத்தாடும் ஐந்துதலை நாகத்தின் கீழே, தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில் பார்சுவநாதர் காட்சி தருகிறார். [1]அருகில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பம் யாருடையது என அடையாளம் காண இயலவில்லை. சிலர் பார்சுவநாதரின் இயக்கன் தரணேந்திரன் [1]என்றும், சிலர் இயக்கி பத்மாவதி [2]என்றும் கருதுகின்றனர்.
கல்வெட்டுகள்
தொகுஇந்தக் குன்றில் கற்படுக்கைகளைச் சுற்றி ஐந்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று பல்லவ மன்னர் நிருபதுங்க வர்மனின் (கி.பி. 850 முதல் 882) இரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.867 ஆம் ஆண்டு) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டாகும். மீதி நான்கு கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 953 வரை) காலத்தைச் சேர்ந்தனவாகும். மேற்குறிப்பிட்ட நிருபதுங்கனின் கல்வெட்டு ஐந்தாவது வரியில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்தவாறு முதலாம் பராந்தக சோழனின் நான்காம் ஆட்சியாண்டு (கி.பி.911 ஆம் ஆண்டு) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. [4] இவ்வூர் பனையூர் நாட்டின் பகுதியாகவும், சேந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்த காலகட்டங்களில் இக்குன்றின் அருகில் அமைந்துள்ள கோவில்களில் விளக்கேற்றுவதற்காக வழங்கப்பட்ட மானியம் குறித்த செய்திகளை இவை பதிவு செய்துள்ளன. [1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ennayiram Malai - எண்ணாயிரம் மலை அகிம்சா யாத்திரை நவம்பர் 12, 2014
- ↑ 2.0 2.1 2.2 Senji pagudhiyil samanam, Ananthapuram K. Krishnamurthy, Malayamaan Publishers, Varkkalpattu, Cuddalore, 2005.
- ↑ A bid to create awareness of ancient links between Rockfort and Jainisim The Hindu June 13, 2016
- ↑ K. Venkatesan, "Kalvettu", 85, April, State Department of Archaeology, Chennai. 2011
வெளி இணைப்புகள்
தொகு- Jain beds _ennayiramalai1 Saravana Kumar YouTube