எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்)
நாடாளுமன்ற எதிர்க்கட்சி என்பது, வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அமைந்த நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட கட்சி அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிகாரபூர்வ எதிக்கட்சியாக இயங்கும். அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் தகுதியைப் பெறுவார். ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றச் சொற்தொகுதி, அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்பது "மக்கள் சபையில் உள்ள அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சி" என வரைவிலக்கணம் தருவதுடன் பொதுவாக அரசாங்கத்தின் பகுதியாக இல்லாத எந்தக் கட்சியையும் எதிர்க்கட்சி எனக் குறிப்பிடலாம் எனவும் கூறுகிறது.[1]
கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெறுபவர் தேர்வுசெய்யப்படும் ஒற்றை உறுப்பினர் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை பயன்படும் நாடுகளில் பெரும்பாலும் இரண்டு குழுக்கள் வலுவாக அமைவதற்குச் சாத்தியம் உண்டு. இவை மாறி மாறி அரசாங்கக்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஆகும் போக்குக் காணப்படுகிறது. தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை பயன்படுத்தப்படும் நாடுகளில் அரசாங்கக்கட்சிக்கு எதிரானவையும், தம்முள் ஒத்த கருத்து இல்லாதவையுமான பல கட்சிகள் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது உண்டு.
சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் ஒரே கட்சியே பெரும்பான்மை பெற்றுத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதையும், எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதையும் காணலாம். சில நாடுகளில், மக்களாட்சித் தன்மையைப் போலியாகக் காட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளைத் தாமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு.
எதிர்க்கட்சிகளின் பணி
தொகுஅரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கவனித்து அச் செயற்பாடுகளின் சாதக பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதும், கேள்வி எழுப்புவதுமே நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் பொதுவான பணி. அரசின் செயற்பாடுகள் மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் பாதகமில்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் அடிப்படை நோக்கம். எனினும், மக்களாட்சி சரியாக வேரூன்றாத நாடுகளில் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தை எதுவும் செய்யவிடாமல் எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டும், குழப்பம் செய்துகொண்டும் இருப்பதையும் காணமுடியும். அதேவேளை சில அரசாங்கங்கள், முக்கிய பிரச்சினைகளில்கூட எதிர்க்கட்சிகளைக் கருத்துக்கூற வாய்ப்பளிக்காமலும், அவர்களது கருத்துக்களை கணக்கில் எடுக்காமலும் தன்னிச்சையாகச் செயற்படுவதையும் சில நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது. எதிர்க்கட்சி பலமின்றி இருக்கும் வேளைகளிலேயே இது பெரும்பாலும் சாத்தியமாகிறது.