எதிர்ப்பு உரிமை
எதிர்ப்பு உரிமை அல்லது எதிர்க்கும் உரிமை (right to resistance) என்பது மனித உரிமைகளில் ஒன்று. மக்கள் குழு நிலையில் சுதந்திரமான ஓர் அரசியல் சமூகமாக வாழத்தொடங்கிய காலம் தொட்டே இவ்வுரிமை முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. இந்த உரிமையைச் சிலர் தம் சொந்தக் கருத்தியல் சார்புக்கு ஏற்ப புரிந்துகொண்டும் உள்ளனர்.[1][2][3]
ஜான் லாக் (John Locke) என்னும் சமூக மெய்யியலார் "கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கான அறநெறி உரிமை மக்களுக்கு உண்டு" என்று கூறினார்.
வரையறை
தொகு"அரசில் வாழும் குடிமக்களுக்குத் தம் ஆட்சியின் சட்டங்களுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படியாமல் அதனை எதிர்த்து, எதிர்ப்பிற்குரிய சட்டங்களையும் ஆணைகளையும் கைவிடுமாறு செய்வதற்கு உரிமையுண்டு என்னும் கொள்கையே எதிர்க்கும் உரிமை எனப்படும்." எதிர்க்கும் உரிமையை இன்னும் விளக்கிச் சொல்வதாயிருந்தால், அது தனி ஆட்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் பொருந்தும் எனலாம். அநீதியான, அடக்குமுறையாகத் திணிக்கப்படுகின்ற கொள்கைகளையும் அவற்றிலிருந்து பிறக்கும் செயல்பாடுகளையும் விமர்சிக்கவும், அவற்றில் அடங்கியுள்ள ஆதிக்கக் கூறுகளை இனங்கண்டு அவற்றை ஒழித்திடக் கோரி, போராட்டத்தில் ஈடுபடவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு.
நேரடி எதிர்ப்பும் மறைமுக எதிர்ப்பும்
தொகுஎதிர்ப்பு இரு வகைகளில் அமையலாம். ஒன்று நேரடி எதிர்ப்பு; மற்றது மறைமுக எதிர்ப்பு. கருத்து வெளியீட்டிற்கான அல்லது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் நிலவுகின்ற ஒரு மக்களாட்சி சூழலிலேயே நேரடி எதிர்ப்புக்கான சாத்தியக்கூறு அதிகம். மேலாதிக்கம் சர்வாதிகாரப் போக்கில் அமைந்திருந்தால் அல்லது மிகத் தீவிரமாக இருந்தால், அச்சூழலில் நேரடி எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பே பயனளிப்பதாக அமையும்.
மறைமுக எதிர்ப்புக்கு எடுத்துக்காட்டாக, ஆதிக்க வகுப்பினர் எதிர்பார்ப்பதையும் சொல்பவற்றையும் செய்யாது விடல், மறைந்திருத்தல், தம் செயல்பாடுகளை மறைத்தல், ஒத்துழைப்பு நல்காமல் கால தாமதப்படுத்தல் முதலியவற்றைக் குறிப்பிடலாம். ஆதிக்க வகுப்பினரின் கருத்தியல் படிப்படியாக சக்தியிழப்பதற்கு மறைமுக எதிர்ப்பு துணையாகும்.
நேரடி எதிர்ப்பு என்பது வேலை நிறுத்தம், ஊர்வலங்கள் மற்றும் அணிவகுப்புகள் நடத்தல், மேடைப் பேச்சு மற்றும் தகவல் ஊடகங்கள் வழியாக மாற்றுக் கருத்து வெளியிடுதல் போன்ற பல விதங்களில் நிகழலாம்.
ஆங்கிலேயரின் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்தது நேரடி எதிர்ப்பின் வழியாகவும், மறைமுக எதிர்ப்பின் வழியாகவும் நிகழ்ந்தது எனலாம்.
இலக்கிய மரபில் எதிர்ப்பு உரிமை
தொகுஅடக்குமுறையால் ஆண்ட ஆதிக்க வகுப்புக்கு எதிராகக் குரல் எழுப்பும் பண்பு இலக்கியத்திற்கு உண்டு. சமுதாய விமர்சனம் இல்லாத இலக்கியமே இல்லை எனலாம். சில இலக்கியப் படைப்புகள் சமுதாயப் போக்கை அடிமை மனநிலையோடு ஆதரித்தன, ஆதரித்தும் வருகின்றன என்பது உண்மையே. செவ்விலக்கியங்கள் இவ்வாறு செயல்பட்டன என்றொரு கருத்து உண்டு. ஆனால் எல்லாச் செவ்விலக்கியங்களும் அப்படித்தான் என்று கூறவும் இயலாது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Blankennagel, Alexander (2004). Verfassungen im Diskurs der Welt (in ஜெர்மன்). Tübingen: Mohr Siebeck. p. 345. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-16-148361-8.
- ↑ Peers, Steve (27 May 2022). "EU Law Analysis: Italian Court of Cassation: Vos Thalassa judgment acquits migrants who resisted return to Libya". EU Law Analysis.
- ↑ Manirakiza, Pacifique (2019). "Towards a Right to Resist Gross Undemocratic Practices in Africa" (in en). Journal of African Law 63 (S1): 81–105. doi:10.1017/S0021855319000020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8553. https://www.cambridge.org/core/journals/journal-of-african-law/article/towards-a-right-to-resist-gross-undemocratic-practices-in-africa/D84EE388BEC95D2D1F287F8280F8C463.