என்பு மீள் வடிவமைப்பு
வாழ் நாள் முழுவதும் வன்கூட்டுத் தொகுதியிலிருந்து என்பிழையம் அழிக்கப்பட்டு மீளுருவாக்கப்படும் செயற்பாடு என்பு மீள் வடிவமைப்பு (Bone remodelling) எனப்படும். இது சிறுவர்களில் மாத்திரமில்லாமல் வளர்ந்தோரிலும் நடைபெறும். சிறுவர்களில் இச் செயற்பாடு வேகமாக நடைபெறும். உதாரணமாக பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை 100% என்பிழையமும் மீள் வடிவமைக்கப்படும். எனினும் வளர்ந்தோரில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட 10% என்பிழையமே மீள் வடிவமைக்கப்படும்.[1] இச் செயற்பாடு மூலம் அன்றாட வாழ்வில் மெதுவாக தேய்ந்து போதல், சிறிய வெடிப்புக்களுக்கு உட்படுத்தப்படும் பழைய என்பிழையம் புதிய சேதமில்லாத என்பிழையத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது. என்பு மீள் வடிவமைப்பு காரணமாகவே என்புகளில் ஏற்படும் பெரும் வெடிப்புக்களும் சரி செய்யப்படுகின்றது. என்பு ஓர் உயிருள்ள செயற்திறனுள்ள இழையமாக இருத்தலாலேயே என்பு மீள் வடிவமைப்பு சாத்தியமாகின்றது. அன்றாடத் தேவைகளுக்கேற்ப என்பு இழையத்தை மாற்றியமைக்கவும் இச் செயற்பாடு முக்கியமானது. தொடர்ச்சியான தகைப்புக்கு உட்படும் போது (அதிக பாரம் தூக்கல்), பழைய பலம் குறைந்த என்பிழையமானது புதிய பலம் மிகுந்த என்பிழையத்தினால் பிரதியீடு செய்யப்படும். இயக்கம் குறைந்த வாழ்க்கை வாழ்வோருக்கும், விண்வெளி வீரர்களுக்கும் என்பு மீதான தகைப்பு குறைவு என்பதால் புதிய என்பிழையம் பலம் குறைந்ததாகக் காணப்படும். என்பிழையம் உருவாதலை விட அழிவடைதல் அதிகமானால் எலும்புப்புரை (Osteoporosis) நோய் ஏற்படும். இது பொதுவாக மாதவிடாய்ச் சக்கரம் நிறைவடைந்த வயது முதிர்ந்த பெண்களில் ஏற்படும்.[2] வளர்ந்தோரில் நேரிய (உயரமாக்கும்) வளர்ச்சி நிறுத்தப்பட்டாலும் என்பு மீள் வடிவமைப்பு வாழ் நாள் முழுவதும் நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உடற்றொழிலியல்
தொகுஎன்பு மீள் வடிவமைப்பில் என்பரும்பர்க் கலம் (Osteoblasts), என்புடைக்கும் கலம் (Osteoclasts) எனும் கல வகைகள் பிரதான பங்கெடுக்கின்றன. என்புடைக்கும் கலம் பழைய என்பிழையங்களை அழிக்கும் அதே வேளை, புதிய என்பிழையத்தை என்பரும்பர்க் கலம் உருவாக்கும். பரா தைரொய்ட் ஓமோன் (PTH), குறைவான குருதி கல்சியம் செறிவு, விட்டமின் D குறைபாடு என்பன என்பு அழிவடையும் வீதத்துக்குப் பங்களிக்கும். வளர்ச்சி ஓமோன் (GH), இலிங்க ஓமோன்கள், அதிக குருதி கல்சியம் செறிவு, கல்சிட்டோனின் ஓமோன், விட்டமின் D (Calciferol) என்பன என்பிழைய உருவாக்கத்துக்குப் பங்களிக்கும். அதிக தகைப்புக்கு உட்படும் இடங்களில் என்பு மீள்வடிவமைப்பு அதிக வீதத்தில் நடைபெறும். [3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Wheeless Textbook
- ↑ Online Medical Dictionary
- ↑ Raggatt, L. J. (May 25, 2010). "Cellular and Molecular Mechanisms of Bone Remodeling". The Journal of Biological Chemistry 285 (33): 25103–25108. doi:10.1074/jbc.R109.041087. பப்மெட்:20501658. பப்மெட் சென்ட்ரல்:2919071. http://www.jbc.org/content/285/33/25103.full.