என்றிக் சுவார்டெக்குரூன்
என்றிக் சுவார்டெக்குரூன் (Hendrick Zwaardecroon) என்பவர், கீழை நாடுகளை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், இலங்கை, இந்தியா, பத்தேவியா போன்ற நாடுகளில் உயர் பதவிகளை வகித்த ஒரு அதிகாரி ஆவார். இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கட்டளை அதிகாரியாகவும், பத்தாவியாவில் உயர் அரசாங்கத்தின் செயலராகவும், இந்தியாவில் ஒல்லாந்த இந்திய அரசாங்கத்தின் ஆளுனர் நாயகமாகவும் பணியாற்றினார்.
வரலாறு
தொகுஎன்றிக் சுவார்டெக்குரூன் 1667 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி ஒல்லாந்தில் உள்ள ரொட்டர்டாம் என்னும் நகரில் பிறந்தார். இவரது தந்தையார் தியோபிலசு சுவார்டெக்குரூன், தாயார் மார்கிரெத்தா வான் எயுலென். என்றிக் சுவார்டெக்குரூன், உயர் தூதுவரான என்றிக் அட்ரியான் வான் ரூட் என்பவரின் செயலாளராக 1684 ஆம் ஆண்டில் கிழக்கு நாடுகளுக்கு வந்தார். இவர் தொடக்கத்தில் அடெல்போர்சுட்டென் (adelbolsten) என அழைக்கப்பட்ட பிரபுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான படைப்பிரிவில் இருந்தார். பத்தேவியாவுக்கு வந்த சிறிது காலத்தில் படைத்துறையில் இருந்து டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடிசார் சேவைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவரது திறமையினால் இவர் போக்கூடெர், ஒன்டெர்கூப்மன், கூப்மன் என விரைவில் பதவி உயர்வுகளைப் பெற்றார்[1].
இலங்கையிலும் இந்தியாவிலும் பணி
தொகு10 ஆண்டுகள் பல்வேறு பதவிகளிலும் அவர் பெற்ற அனுபவங்களின் பின்னர் 1694 ஆம் ஆண்டில் ஒப்பெர்கூப்மன் என்னும் தரத்துக்கு உயர்த்தப்பட்டு, ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் கட்டளை அதிகாரியாகப் பதவி ஏற்றார். மூன்று ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய என்றிக் சுவார்டெக்குரூன், தற்காலிகமாக கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மலபார் கரையோரப் பகுதிகளுக்கான ஆணையாளராக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்[2].. எனினும், இப்பணி முடிவடைந்த பின்னர் இவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவில்லை. மாற்றாக சூரத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பத்தேவியாவில் இருந்த உயர் ஆட்சியின் செயலரானார். ஓராண்டு பணியாற்றிய பின்னர் 1704 ஆகத்து 4 ஆம் தேதி இவர் இந்தியாவுக்கான மேலதிக கவுன்சிலராக (Extraordinary Councillor of India) உயர்ந்தார். 1715 ஆம் ஆண்டில் இவர் கவுன்சிலராகத் தரம் உயர்த்தப்பட்டார். இவருக்கு ஆளுனர் நாயகமாகப் பதவி ஏற்க வாய்ப்புக் கிடைத்த போதும் அப்பதவிக்குரிய தகைமை தனக்கு இல்லை எனக்கூறி இரண்டு தடவைகள் அப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். எனினும், 1718 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த ஒல்லாந்த அரசுக்கான ஆளுனர் நாயகமாகப் பதவி ஏற்றுக்கொண்டார். 1720ல் இது நெதர்லாந்தில் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் இப் பதவியில் இருந்த என்றிக் சுவார்டெக்குரூன், 1724 அக்டோபர் 16 ஆம் தேதி தானாகவே பணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்[3].
இறப்பு
தொகுஓய்வின் பின்னர் தனது தாய் நாடான நெதர்லாந்துக்கு அவர் திரும்பிச் செல்லவில்லை. பத்தேவியாவிலேயே தங்கி எளிமையான வாழ்க்கை நடத்தினார். பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஏறத்தாழ நான்கு ஆண்டுகளின் பின்னர் 1728 ஆகத்து 12 ஆம் தேதி என்றிக் சுவார்டெக்குரூன் பத்தேவியாவில் காலமானார். இவர் உயர் குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த பதவிகளையும் வகித்து மிகவும் உயர்ந்த நிலையை எட்டியபோதும் மிகவும் அடக்கமாகவே வாழ விரும்பினார். இறந்த பின்னர், தனது உடலை உயர் சமூகத்தினர் அடக்கம் செய்யப்படும் இடங்களில் அன்றிப் பொதுமக்களை அடக்கம் செய்வதற்கான இடுகாட்டிலேயே அடக்கம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்கு இணங்க இவரது உடல் பத்தேவியாவில் போத்துக்கீசத் தேவாலயத்துக்கு அருகில் இருந்த இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது[4]..
குறிப்புக்கள்
தொகு- ↑ "Memoir of Hendrick Swaardecroon" நூலில், இலங்கை அரச காப்பகத் தலைவராக இருந்த ஆர். ஜி. அந்தனிசின் அறிமுகம். பக். iv
- ↑ "Memoir of Hendrick Swaardecroon". பக். iv
- ↑ "Memoir of Hendrick Swaardecroon" நூலில், இலங்கை அரச காப்பகத் தலைவராக இருந்த ஆர். ஜி. அந்தனிசின் அறிமுகம். பக். 1
- ↑ "Memoir of Hendrick Swaardecroon" நூலில், இலங்கை அரச காப்பகத் தலைவராக இருந்த ஆர். ஜி. அந்தனிசின் அறிமுகம். பக். v
உசாத்துணைகள்
தொகு- Memoir of Hendrick Swaardecroon, Commaander of Jaffnapatam, for the Guidance of the Council of Jaffnapatam, During His Absence at the Coast of Malabar; Translated by Sophia Pieters; H. C. Cottle, Government Printer, Ceylon; Colombo; 1911.