எபிரேயருக்கு எழுதிய திருமுகம்

திருவிவிலிய நூல்
(எபிரெயருக்கு எழுதிய நிருபம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Hebrews) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பத்தொன்பதாவது நூலாக அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Ebraious (Επιστολή Πρὸς Έβραίους) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Hebraeos எனவும் உள்ளது [1].

இயேசுவின் மாட்சி: கடவுளின் தூதர் இயேசுவை வழிபடுகின்றனர் (எபி 1:6). கலைப்பொருள் காப்பிடம்: கொன்ஸ்தான்சு பேராலயம், செருமனி

பவுலுடன் தொடர்புப்படுத்தப்படும் இறுதியான திருமுகம் இந்த எபிரேயர் திருமுகம். இது ஒரு திருமுகம் என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் இறையியல் கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

எபிரேயர் திருமுகம்: ஆசிரியர்

தொகு

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திற்கும் பவுலின் திருமுகங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பினும் வேற்றுமைகள் மிகுதியாக இருப்பதால் இத்திருமுகத்தைப் பவுல் எழுதியிருக்க இயலாது என அனைவரும் இப்போது ஒரு மனதாக ஏற்றுக் கொள்கின்றனர். அப்பொல்லோ எழுதியிருக்கலாம் என்பர் சிலர். இருப்பினும் யாரால் எழுதப்பட்டது என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண இயலவில்லை [2].

எபிரேயர் திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

தொகு

இத்திருமுகம் யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டதாகும். அவர்கள் பழைய ஏற்பாட்டில் தோய்ந்தவர்கள்; தங்கள் நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டு, நம்பிக்கையை இழந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் நில்லாமல் மீண்டும் யூதச் சமயத்திற்குத் திரும்ப நினைத்தார்கள்; தாங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியை யூதமயமாக்க விரும்பினார்கள் (கலா 2:14). ஒரு வேளை இந்த வாசகர்களில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதக் குருக்களாகவும் இருக்கலாம் (திப 6:7).

இத்திருமுகத்தில் எருசலேம் கோவில் மற்றும் அதன் வழிபாடுகள் நிகழ்காலத்தில் விரிவாகத் தரப்படுவதால் கி.பி. 70இல் நடந்த எருசலேம் கோவில் அழிவுக்கு முன்னர் இது எழுதப்பட்டது என்பர் சிலர்.

ஆயினும் இக்கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் கோவிலும் அதன் வழிபாடுகளும் கிறிஸ்துவின் செயல்களுக்கும் தன்மைக்கும் முன் அடையாளமாக மட்டுமே தரப்படுகின்றன. தன்னிலேயே அவற்றை விளக்குவது ஆசிரியரின் நோக்கமல்ல. திருமுகம் கி.பி. 80ஆம் ஆண்டிலிருந்து 85ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எல்லாரும் நம்புகின்றனர்.

எபிரேயர் திருமுகத்தின் உள்ளடக்கம்

தொகு

கிறிஸ்துவின் மேன்மையே இந்நூலின் மையக் கருத்தாகும். முன்னுரையில் கிறிஸ்து முழுமையான, முடிவான வெளிப்பாட்டைத் தருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினருக்கும் வானதூதருக்கும் பழைய உடன்படிக்கையின் இணைப்பாளரான மோசேக்கும் மேலானவராகக் கிறிஸ்து காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டுக் குருத்துவத்தினின்று முற்றிலும் மாறுபட்டதும் அதற்கு மேம்பட்டதுமாகும் எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை நிறைவு செய்கிறது (எபி 8:1-13); கிறிஸ்துவின் பலியும் எக்காலத்துக்கும் உரிய ஒரே பலியாய் விளங்கி, பழைய ஏற்பாட்டுப் பலிகளை நிறைவு செய்கிறது; கிறிஸ்துவின் சாவு, உயிர்பெற்றெழுதல், விண்ணேற்றம் ஆகியன விண்ணகத் தூயகத்தை நமக்குத் திறந்து வைத்துள்ளன என்னும் கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.

இத்தகைய காரணங்களினால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூத முறைக்குத் திரும்பலாகாது என்று கேட்டுக் கொள்கிறார் ஆசிரியர்; அவ்வாறு செய்தால் பாலைவனத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரயேலர் போல் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார்.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

எபிரேயர் திருமுகத்திலிருந்து சில பகுதிகள்

தொகு

எபிரேயர் 1:1-3

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில்
இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்;
இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்;
இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும்,
அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர்,
தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்.
மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின்,
விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்."

எபிரேயர் 4:12-16

"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது;
இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;
ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது;
எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது;
உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை.
அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.
நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.
எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை
நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால்
நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல;
மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்.
எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும்,
அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக."

எபிரேயர் 13:5-9

"பொருளாசையை விலக்கி வாழுங்கள்.
உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில்,
'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்'
என்று கடவுளே கூறியிருக்கிறார்.
இதனால், நாம் துணிவோடு,
'ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்;
மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?' என்று கூறலாம்.
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள்.
அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து,
நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள்.
உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல,
அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது.

எபிரேயர் மடலின் உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை: கடவுள் தம்

மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார்

1:1-3 414
2. கடவுளின் மகன் வானதூதரைவிட

மேலானவர்

1:4 – 2:18 414 – 416
3. இயேசு கிறிஸ்து மோசேக்கும்

யோசுவாவுக்கும் மேலானவர்

3:1 – 4:13 416 – 418
4. இயேசு கிறிஸ்துவின்

குருத்துவத்தின் மேன்மை

4:14 – 7:28 418 – 421
5. இயேசு கிறிஸ்துவின்

உடன்படிக்கையின் மேன்மை

8:1 – 9:28 422 – 424
6. இயேசு கிறிஸ்துவின்

பலியின் மேன்மை

10:1-39 424 – 426
7. நம்பிக்கையின் மேன்மை 11:1 – 12:29 427 – 431
8. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 13:1-19 431 – 432
9. இறுதி வாழ்த்துரை 13:20-21 432
10. முடிவுரை 13:22-25 432

ஆதாரங்கள்

தொகு
  1. எபிரேயர் திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - எபிரேயர் திருமுகம்