2 திமொத்தேயு (நூல்)

திருவிவிலிய நூல்


2 திமொத்தேயு அல்லது திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] to Timothy)என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினாறாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பதினொன்றாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Timotheon B (Επιστολή Προς Τιμόθεον B) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II ad Timotheum எனவும் உள்ளது [1].

தூய திமொத்தேயு தம் பாட்டி லோயி என்பவரின் மடியில் இறையறிவு பெறுகின்றார் (2 திமொ 1:5). விவிலிய ஓவியம். கலைஞர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: இலண்டன்.

ஆசிரியர்

தொகு

திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் ஆயர் பணித் திருமுகங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.

இவற்றைப் பவுலே நேரடியாக [2] எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.

2 திமொத்தேயு என்னும் மடலை பவுல்தாமே எழுதினார் என்று தொடக்ககாலக் கிறித்தவ அறிஞர்கள் குறித்துள்ளனர். தற்கால அறிஞர் சிலரின் கருத்துப்படி, 2 திமொத்தேயு பவுலின் படைப்பு என்றும், அப்பாணியைப் பின்பற்றி, பவுலின் இறப்புக்குப் பின் அவரது சீடர் 1 திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகிய திருமுகங்களைப் பவுலின் சிந்தனைக்கு ஏற்ப எழுதியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 2 திமொத்தேயு மடலுக்கும் பவுல் தம் இறுதிக்காலத்தில் எழுதிய மடல்களுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரத்தில் 2 திமொத்தேயு மடல் 1 திமொத்தேயுவிலிருந்தும் தீத்து மடலிலிருந்தும் வேறுபட்டிருப்பதும் கருதத்தக்கது.

எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்

தொகு

பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (காண்க: 2 திமொ 1:16; 2:9; 4:13) என்னும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.

மடலின் உள்ளடக்கம்

தொகு

இத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. "கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்" (2 திமொ 1:7) என்று மடலாசிரியர் கூறுகிறார்.

திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.

பவுல் தம் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கிவருவதை உணர்கின்றார்; கடவுளுக்கு உகந்த விதத்தில் தாம் பணியாற்றியதை நினைவுகூர்கின்றார்: "நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே" (2 திமொ 4:6-8).


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

சில பகுதிகள்

தொகு

2 திமொத்தேயு 2:8-13

"தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து
இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி.
இதனை நினைவில் கொள்.
இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.
ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.
தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும்
கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது:
'நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;
அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்;
நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்.
நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்.
ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.'
இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து."

2 திமொத்தேயு 4:1-5

"கடவுள் முன்னிலையிலும்
வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும்
அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும்
நான் ஆணையிட்டுக் கூறுவது:
இறைவார்த்தையை அறிவி.
வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு.
கண்டித்துப் பேசு; கடிந்துகொள்;
அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள்.
மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த்
தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள்.
உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள்.
நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு;
துன்பத்தை ஏற்றுக்கொள்;
நற்செய்தியாளனின் பணியை ஆற்று;
உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்."

உட்பிரிவுகள்

தொகு
பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 400
2. திமொத்தேயுவுக்கு அறிவுரை 1:3 - 2:13 400 - 401
3. தவறான போதனை குறித்து அறிவுரை 2:14 - 4:8 401 - 403
4. பவுலின் நிலைமை 4:9-18 403 - 404
5. முடிவுரை 4:19-22 404

மேற்கோள்கள்

தொகு
  1. 1 திமொத்தேயு மடல்
  2. திருத்தூதர் பவுல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=2_திமொத்தேயு_(நூல்)&oldid=2764622" இலிருந்து மீள்விக்கப்பட்டது