எமிரேட்ஸ் கோபுரங்கள்
எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இக் கட்டிடத்தின் கீழ்த் தளங்கள், பரந்த ஒரு podium ஆக அமைந்து மேற்படி இரு கோபுரங்களையும் தாங்குவது போலுள்ளது.
56 மாடிகளைக் கொண்ட, 355 மீட்டர் உயரமான பெரிய கோபுரம், பெரும்பாலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 54 மாடியையும், 309 மீட்டர் உயரத்தையும் கொண்ட சிறிய கோபுரம், 500 அறைகளைக் கொண்ட ஒரு ஐந்து நட்சத்திர தங்குவிடுதி (Hotel) ஆக அமைந்துள்ளது. இணைப்பு மேடைபோலமைந்துள்ள கீழ் ஐந்து தளங்களிலும், உணவுச்சாலைகள், அங்காடிகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் என்பன அமைந்துள்ளன.
இக் கட்டிடம், கிடைக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 ஆவது ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கின் அதியுயர்ந்த கட்டிடமாகவும், உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்பதாவது இடத்திலும் இருந்தது.
இது நோர் குரூப் (Norr Group) கட்டிட ஆலோசனை நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.