எம். பி. பரமேஸ்

எம். பி. பரமேஷ் ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவப் பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர். பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குநர். இசைக் கழகத்தை (1966 - 1977) இயக்கிய முன்னோடி. திருகோணமலையைச் சேர்ந்தவர். 1984 இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வருகிறார்.

குடும்பப்பின்னணி தொகு

இவரது தந்தையார் வித்தியாதிகாரி மா. பீதாம்பரம் பாலபோதினி என்னும் அரிவரிப்புத்தகத்தில் படித்த அந்த மரம் ஆலமரம் அழகான நல்ல மரம் என்ற பாடலை எழுதி பிள்ளைப்பாட்டுக் கவிஞர் என்ற கௌரவ விருதை இந்தியக் கலைஞர்கள் மத்தியில் பெற்றுக் கொண்ட ஒரு பிள்ளைப் பாட்டுக் கவிஞர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சைவநற்சிந்தனை என்ற நிகழ்ச்சிக்கு சொற்பொழிவாற்றியவர். இவரது தாயார் ஹார்மோனியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவரது மனைவி சங்கீதபூஷணம் மாலினி பரமேஸ். மகள் பிரபாலினி. இவரது சகோதரர் மெல்லிசைப்பாடகர் எம். பி. கோணேஸ்.

கலையுலகில் தொகு

இவர் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில் ஒளிமயமான எதிர்காலம் என்னும் டி. எம். செளந்தரராஜனின் பாடலைப் பாடி இசைத் துறைக்குள் நுழைந்தவர். 1968 இல் தானே இயற்றிப் பாடிய 'உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது' என்று ஆரம்பமாகும் பாடலினால் ஈழத்து மெல்லிசை உலகில் மிகவும் பிரபல்யமானவர். செருமானியாவில் தனது இசைப்பயணத்தின் இரண்டாவது சகாப்தத்தை உருவாக்கி, மனைவி மாலினியுடனும், மகள் பிரபாலினியுடனும் சேர்ந்து ஐரோப்பியாவின் பலநாடுகளில் இசைநிகழ்ச்சிகளை நடாத்தியவர். 1995இல் மனைவியுடனும் மகளுடனும் சேர்ந்து இசையமைத்த சங்கீதசாம்ராஜ்ஜியம் என்னும் இசைப்பேழையை வெளியிட்டு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய புகழைப் பெற்றவர்.

பட்டங்கள் தொகு

  • ஈழத்து மெல்லிசை மன்னர்கள் 1972 இல் தினகரன் விழாவை முன்னிட்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் ஈழத்தின் நாடகத் தந்தை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் பரமேஷ், கோணேஷ், மகேஷ் ஆகிய மூவருக்கும் ஈழத்து மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
  • இயல் இசைக் கலைஞர்கள் 1972 இல் யாழ்பாடி யாழ்ப்பாணம் பெயர் கொண்டது என யாழ்ப்பாணப் புகழ் கொண்ட பாடலை எழுதி இசையமைத்து பாடியதற்காக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களால் பரமேஷ், கோணேஷ் இருவருக்கும் இயல் இசைக் கலைஞர்கள் என்று பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இது ஈழத்து மெல்லிசைக்குக் கிடைத்த உன்னதமான கெளரவமாக மதிக்கப்படுகின்றது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._பரமேஸ்&oldid=3236265" இலிருந்து மீள்விக்கப்பட்டது