எல்லியக்கோளப் படப்பிடிப்பி
எல்லியக்கோளப் படம்பிடிப்பி (Heliospheric imager) என்பது ஒரு அகல்புலப் படக்கருவி ஆகும். இது சூரியனிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள கோள்களுக்கு இடையிலான சூரியக் காற்றைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரியக் காற்று மின்மத்தால் ஆனது. இயனிகள் மற்றும் கட்டற்ற மின்னன்கள் இரண்டையும் கொண்டுள்ளது. மின்னன்கள், குறிப்பாக, தாம்சன் சிதறல் வழியாக சூரிய ஒளியை சிதறடிக்கின்றன, மேலும் மின்ம முகில்களைக் கட்புல ஒளியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முடியும். எல்லியக்கோல படம்பிடிப்பிகள் கொள்கையளவில் எளிமையானவை - அவை ஆழமான ஒளியியல் பேஃபிள்களுக்குள் வைக்கப்பட்டுள்ள எளிமையான கட்புல ஒளி படக்கருவிகள். இருப்பினும், சூரியக் காற்றின் கூறுகள் மிகவும் மங்கலானவை- பின்னணி விண்மீன் ஒளிப்புலமும் ஓரை ஒளியின் பொலிவையும் ஒப்பிடும்போது 0.1% அளவு மட்டுமே - எனவே, எல்லியக்கோளப் படம்பிடிப்பித் தரவுகள் இந்தப் பின்னணியை அகற்ற விரிவான பிந்தைய செயலாக்கம் தேவைப்படுகிறது.
எல்லியக்கோளப் படம்பிடிப்பிகள் பொதுவாக விண்வெளியில் பறக்கவிடப்படுகின்றன, ஏனெனில் புவியின் வளிமண்டலம் இரவில் கூட குறிகையில் குறுக்கிடுகிறது. முகில்கள், விமானம், நிலவொளி, தூசி, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றில் உள்ள சிறிய மாறுபாடுகளும் அதிக உயரத்தில் உள்ள காற்றுப்பொலிவும் புவிமுனைச் சுடர்வு போன்ற நிலப்பரப்பு கூறுகளும், விரும்பிய சூரியக் காற்றின் குறிகையை மறைத்துவிடும். உயர் முனைய வட்டணையில் சுற்றும் USAF செயற்கைக்கோளில் பறக்கும் சூரியப் பொருண்மை உமிழ்வு படம்பிடிப்பி (SMEI [1] ), நாசாவின் ஆழ்வெளி இரட்டைப் பருங்காட்சி விண்கலத்தில் (SECCHI) கருவித் தொகுப்பின் [2] பகுதியை உருவாக்கிய HI படம்பிடிப்பிகள் ஆகியவை இன்றுவரை பறக்கவிடப்பட்ட கருவிகளில் அடங்கும்.. 1970 களில் பறக்கவிட்ட இரண்டு சூரிய விண்கலங்களிலிருந்தான ஒளியளவியல் தரவுகளின் விரிவான பிந்தைய செயலாக்கத்தின் வழியாக 1980 களில் இந்தக் கருத்து முதன்முதலில் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eyles, C. J. (2003). "The Solar Mass Ejection Imager (Smei)". Solar Physics 217 (Nov): 319. doi:10.1023/B:SOLA.0000006903.75671.49. Bibcode: 2003SoPh..217..319E.
- ↑ Howard, R. A. (2008). "Sun Earth Connection Coronal and Heliospheric Investigation (SECCHI)". Space Science Reviews 136 (1–4): 67. doi:10.1007/s11214-008-9341-4. Bibcode: 2008SSRv..136...67H.