எல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்கள்

எல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்கள் (Translators Without Borders) என்பது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனம். இது மாந்தர்களுக்கு உதவும் முகமாக அமைக்கப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு இலவசமாக மொழிபெயர்ப்புகள் செய்து தந்து உதவும் ஒரு நிறுவனம்[1]. இதனை 2010 இல் நிறுவினர். முன்னர் 1993 இல் இலெக்சலரா திரான்சிலேசன்சு (முன்னாள் யூரோட்டெக்சிட்டு, Eurotexte) என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட "Traducteurs sans frontières" என்னும் நிறுவனத்தின் உறவு நிறுவனமாக 2010 இல் எல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்கள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம், நோபல் பரிசு பெற்ற எல்லைகளற்ற மருத்துவர்கள், யுனிசெஃபு, ஆக்ஃசுபாம், அனைத்துலக ஊனமுற்றோர் நிறுவனம் (Handicap International) போன்ற பல நிறுவனங்களுக்கு இலவசமாக மொழிபெயர்ப்புகள் செய்து தருகின்றது. உள்நாட்டுக் கலவரங்கள், உள்நாட்டுப் போர் நிகழும் இடங்களில் இருந்து வரும் பல்வேறு அறிக்கைகள், நேர்காணல்கள், முதலியவற்றை மொழிபெயர்த்துத் தருகின்றது. 2011 இல் முதல் ஆறு மாதத்திலேயே ஒரு மில்லியன் சொற்களை மொழிபெயர்த்துக் கொடையாகத் தந்துள்ளது. இதன் மதிப்பு அமெரிக்க $200,000 என்கின்றனர்.

எல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்களின் நிறுவனம் அமெரிக்காவில் மாசாச்சுசெட்ஃசு மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைவர் இலோரி திக்கெ (Lori Thicke). இது அமெரிக்காவில் "501(c)3" வகை இலாபநோக்கற்ற நிறுவனம்; ஆகையால் இதற்கு நன்கொடையாக அளிக்கும் தொகைக்கு அமெரிக்காவில் வரிவிலக்கு உண்டு.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. "Translators Without borders expands management structure, holds first board meeting", Globalization and Localization Association (GALA), June 2010

வெளியிணைப்புகள்

தொகு